You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிலிப்பைன்ஸ்: “பணம் வேண்டும், வேறு என்ன செய்ய?” - பெற்றோர்களே குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் கொடுக்கும் அவலம்
குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டி, அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விற்கும் சம்பவங்கள் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. அந்நாட்டில் மூன்றில் இரண்டு குழந்தைகள் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பெரும் வணிகமாகவே அந்நாட்டில் நடந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களிடம் இந்த காணொளிகளை விற்றுள்ளனர்.
பிழைப்பதற்கு பணம் வேண்டும். அதற்காகதான் இப்படி செய்கிறோம் என்கிறார்கள் அம்மக்கள்.
ஆறு மாத குழந்தைகூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நீதி திட்டம் அமைப்பு கூறுகிறது.
இதனை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது பிலிப்பைன்ஸ் அரசு.
என்ன நடக்கிறது?
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் என்ற அளவில் இருந்தது. கடந்தாண்டு இது 18 மில்லியனாக உயர்ந்துள்ளது என்கிறது காணாமல் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான மையம்.
பிலிப்பைன்ஸில்தான் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.
தன் தாயாலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறுகிறார் ஜோனா எனும் பதின்பருவ வயது பெண். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
"ஒரு முறை நானும் என் நண்பரும் ஒன்றாக குளித்து, ஆடை அணிந்தோம். அந்த அறையில் என் அம்மாவும் இருந்தார். அவர் அதனை படம் எடுத்தார்" என்கிறார்.
"எதற்காக படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை... சும்மாதான்' என்று அவர் கூறினார்" என்கிறார் ஜோனா.
ஆனால், அந்த படங்கள் இணையத்தில் விற்கப்பட்டது. பின்பு, போலீஸ் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சிலருக்கு இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன.
500 குழந்தைகள் மீட்பு
எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டன் தேசிய குற்றவியல் மையம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணி செய்த சர்வதேச நீதி மையம் என்ற அமைப்பு இதுவரை 500 பிலிப்பைன்ஸ் குழந்தைகளை மீட்டுள்ளது.
69 சதவீத வழக்குகளில் குழந்தைகள் பெற்றோர் அல்லது உறவினர்களாலேயே துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த அமைப்பு.
அந்த அமைப்பின் தலைவர் சாம், "நாங்கள் ஆறு மாத குழந்தை ஒன்றையு மீட்டுள்ளோம். மீட்கப்பட்டவர்களில் 50% பிள்ளைகளுக்கு 12 வயது அல்லது அதற்கு குறைவாகதான் இருக்கும்." என்கிறார்.
'தெரிந்தே செய்கிறோம்'
பிபிசியிடம் பேசிய பிலிப்பைன்ஸை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தாம் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் அந்த படங்களை எடுக்கவில்லை என்கிறார்.
அவர், "உங்களுக்கு 12 அல்லது 13 வயது குழந்தைகள் பிடிக்குமா என்று ஒரு வெளிநாட்டினரிடம் கேட்டேன். அவர், 'சரி' என்று தெரிவித்தார்" என்கிறார்.
"நான் அந்த படங்களை வாங்கி கொடுத்தேன். எங்கு எடுத்தது என்பதெல்லாம் அந்த வெளிநாட்டவருக்கு தேவையில்லை" என்கிறார்.
போலீஸ் இவரை விசாரித்து வருகிறது.
திருச்சபைகள்
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான இவ்வாறான காணொளிகள் இணையத்தில் பரவுவது மற்றும் பார்க்கப்படுவது குறித்து கண்காணிக்குமாறு சில திருச்சபைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
வறுமையின் காராணமாக இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.
மணிலா புறநகர் பகுதியில் உள்ள சர்ச்சின் பாஸ்டர் ஸ்டீஃபன், வறுமையை ஒரு காரணமாக கூற முடியாது என்கிறார்.
வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பிழைப்பதற்காக குழந்தைகளை விற்க வேண்டிய தேவையில்லை என்கிறார்.
குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிரான மையத்தை பிலிப்பைன்ஸ் போலீஸ் மணிலாவில் அமைத்துள்ளது. பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போலீசார் இது குறித்து பிலிப்பைன்ஸ் போலீஸுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
"இது மறைமுகமாக நடக்கும் குற்றம். கணிசமான அளவில் இதனை குறைத்துவிட்டோம்" என்கிறார் பிலிப்பைன்ஸ் ஆணையங்களுக்கான செயலாளர் லொரன் படோய்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்