You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட் உலகக்கோப்பை 2019: முதல் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
2019 கிரிக்கெட் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னாப்ரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலக்கை துரத்திய தென்னாப்ரிக்கா 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். வேன் டெர் டுஷன் அரைசதம் எடுத்தார். ஆம்லா, ஃபாப் டூ பிளசிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் சார்பாக வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
முன்னதாக லண்டன் ஒவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த 2019 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா அணிக்கு 312 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது பந்திலேயே அந்த அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கள் அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினர்.
ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயான் மார்கன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரைசதம் எடுத்தனர்.
தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா
முன்னதாக, 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை லண்டன் ஒவல் மைதானத்தில் தொடங்கியது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது.
45 லீக் போட்டிகள் மற்றும் 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதியாட்டம் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்ற இந்த போட்டியில் முதல் பரிசு 40 லட்சம் டாலராகும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வரும் ஜூன் 5-ந்தேதி சந்திக்கிறது.
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலும் இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. தற்போது 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 'ரவுண்டு ராபின்' முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் அணியும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும்
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான துவக்க விழா, லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
இதுவரை 11 உலகக்கோப்பை போட்டி தொடர்கள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும்,மேற்கிந்திய தீவுகள், இந்தியா ஆகிய அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.
ஆனால் நடப்பு தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி இதுவரை ஒரு முறை கூட இந்த கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
இதனிடையே, கடந்த முறை அரையிறுதி போட்டியில் தோல்வியுற்ற இந்தியா உள்பட போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கோப்பையை வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் தங்களின் முதல் சாம்பியன் பட்டத்துக்கு போராடும் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் கடும் சவாலை ஏற்படுத்தும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்