உலகக் கோப்பை கிரிக்கெட் அணி: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் இது தேர்தல் காலமாக இருப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் தேர்தலை நோக்கியே இருந்துவருகிறது. ஆனால், ஓரிரு விதிவிலக்குகள் உண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பும்.

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக அளவு ஆதரவு இருந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை என்பது தனிக்கவனம் பெறும் ஒன்றாக இருந்துவருகிறது.

பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12-ஆவது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே. எல். ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு செய்யப்பட்ட அணியில் பெரும்பாலான வீரர்களின் தேர்வு எதிர்பார்க்கபப்ட்ட ஒன்றுதான் என்றாலும், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய வீரர்களில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக நிலவிவந்தது.

ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கு 'தினேஷ் கார்த்திக்' என்று தேர்வாளர்கள் பதில் கூறியுள்ளனர்.

2019 உலகக் கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் வலிமை மற்றும் சாதக, பாதகங்களை அலசும்முன், முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பைகள், அவற்றில் இந்திய அணியின் பங்களிப்பு மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்கள் ஆகியவை குறித்து காண்போம்.

174 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த கவாஸ்கர்

இதற்கு முன்பு பிரிட்டனில் நடந்த 4 ( 1975, 1979, 1983, 1999) உலகக் கோப்பைகளிலும் இந்தியா விளையாடியுள்ளது.

முதல் உலககோப்பையான 1975-இல், தனது முதல் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. அக்காலகட்டத்தில் 60 ஓவர்கள் கொண்டதாக ஒருநாள் போட்டிகள் இருந்தன.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 334 ரன்கள் குவிக்க, அதன்பின் களமிறங்கிய இந்திய மொத்தமுள்ள 60 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தற்போதைய காலம் போல் அப்போது முதல் 15 ஓவர்களில் விளாசும் டிரண்ட் இல்லை. குறிப்பாக இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் அந்த போட்டியில் 60 ஓவர்களும் களத்தில் நின்று 36 ரன்கள் மட்டுமே பெற்று நாட்அவுட்டாக இருந்தது இன்றளவும் விவாதிக்கப்படுகிறது.

முதல் இரண்டு உலகக் கோப்பைகளான 1975 மற்றும் 1979 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா அரையிறுதியைக்கூட எட்டவில்லை.

மித வேகபந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்கள்

மூன்றாவது உலகக் கோப்பை மீண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றது. இம்முறை இளம் ஆல்ரவுண்டரான கபில்தேவ் இந்திய அணியின் தலைமை பொறுப்பை ஏற்றார்.

அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதியில் இங்கிலாந்தையும், இறுதி போட்டியில் ஜாம்பவான்களாக திகழ்ந்த மேற்கிந்திய அணியையும் வீழ்த்தி தனது முதல் கோப்பையை வென்றது.

இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான் என்று கூறப்பட்டது. குறிப்பாக மித வேகப்பந்துவீச்சாளர்களான கபில்தேவ், மொகீந்தர் அமர்நாத், ரோஜர் பின்னி மற்றும் சாந்து ஆகியோர் சிறப்பாக பங்களித்தனர்.

1987 மற்றும் 1996 உலகக்கோப்பை இந்திய துணைக்கண்டத்தில், 1992 உலகக்கோப்பை ஆஸி, நியூசிலாந்திலும் நடக்க, 16 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் 1999இல் இங்கிலாந்தில் உலக கோப்பை நடைபெற்றது.

இந்த தொடரில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி சூப்பர் சிக்ஸ் எனப்படும் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரிலும் வேகப்பந்து மற்றும் மித வேகபந்துவீச்சே அதிக விக்கெட்டுகளை சாய்த்தது.

அண்மையில் இங்கிலாந்தில் பல நாடுகள் பங்கேற்ற இருபெரும் தொடர்கள் 2013 மற்றும் 2015 சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி தொடர்கள்தான்.

இதில் 2013-இல் இந்தியா தொடரை வென்றது. 2015-இல் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.

வெல்லுமா கோலியின் படை?

இந்திய அணியின் தேர்வு மற்றும் சாதக பாதகங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தற்போது தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி ஓரளவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ரிஷப் பந்த் அணியில் இடம்பெற்றிருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தேர்வாளர்களின் தேர்வு தினேஷ் கார்த்திக்காக இருந்துள்ளது'' என்று கூறினார்.

கே. எல். ராகுலின் தேர்வு குறித்து கேட்டபோது, ''ராகுல் சிறந்த வீரர் . குறிப்பாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் அவரது கட்டுக்கோப்பான பேட்டிங் அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்'' என்று விஜய் லோக்பாலி பதிலளித்தார்.

''விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும் சிறந்த தேர்வுதான். புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா ஆகிய மூவர் மட்டும்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அணியில் உள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்'' என்றார்.

''நிச்சயம் உலகக் கோப்பையயை வெல்ல நல்ல வாய்ப்புள்ள அணிதான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளம் வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என நல்ல கலவையாக உள்ளது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சாதிப்பாரா கோலி?

இதுவரை இந்தியா வென்ற இரண்டு உலகக் கோப்பைகளில் (1983, 2011) அணிக்கு தலைமையேற்ற கேப்டன்களுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு.

யாருமே எதிர்பாராத ஓரு அணியை உலக சாம்பியனாக ஆக்க 1983-இல் கபில்தேவின் தன்னம்பிக்கையும், பேட்டிங், பந்துவீச்சு என ஆட்ட பங்களிப்பும் பெரும் காரணமாக அமைந்தன.

அதேபோல் 2011-இல் இக்கட்டான தருணங்களில் தானே முன்னின்று வழிநடத்திய தோனியின் தலைமைப்பண்பு அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது.

விராட் கோலி மீதும் தற்போது அந்த எதிர்பார்ப்பு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக விளையாடிவரும் அவர், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல உதவினார்.

1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய ரவிசாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது விராட் கோலிக்கும், அணிக்கும் உதவிகரமாக இருக்கும்.

அதேபோல் 2019 உலக கோப்பையிலும் அவர் உதவுவார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால், கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட குழு விளையாட்டு. இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் விராட் கோலி மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே விளையாட்டு ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :