கவுதம் கம்பீர்: இரண்டு கிரிக்கெட் உலகக்கோப்பைகளில் முத்திரை பதித்த இந்திய பேட்ஸ்மேன்

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் உலகக்கோப்பையை வென்றவருமான கவுதம் கம்பீர் நேற்று ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.

37 வயதாகும் இடது கை ஆட்டக்காரரான கம்பீர் 58 டெஸ்ட் போட்டிகளிலும் 147 ஒருநாள் போட்டிகளிலும், 37 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் 2007 உலகக்கோப்பை டி20 மற்றும் 2011 உலகக்கோப்பையை வென்ற அணியிலும் விளையாடியிருக்கிறார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கையை வரும் வியாழக்கிழமை தமது சொந்த மண்ணில் ஆந்திராவுக்கு எதிராக டெல்லி விளையாடும் ரஞ்சி போட்டியோடு முடித்துக்கொள்ளவிருக்கிறார்.

2004 -2016 வரையிலான காலகட்டத்தில் கம்பீர் 9 சதங்கள் உள்பட 4,154 ரன்கள் குவித்திருக்கிறார். 2009-ல் 'ஐசிசி டெஸ்ட் பிளேயர் ஆஃப் தி இயர்' விருதையும் வென்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் 39.68 என்ற சராசரியில் 5,238 ரன்கள் குவித்துள்ளார். முதல் உலக கோப்பை டி20யில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்றது. அப்போது கம்பீர் எடுத்த ரன்கள் 75.

2011 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சச்சின், சேவாக், கோலி ஆட்டமிழந்தாலும் 97 ரன்கள் விளாசி தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இந்தியாவுக்காக 2011 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்களில் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக கம்பீர் இருந்தார்.

கம்பீர் இதுவரை முதல் தர போட்டிகளில் 42 சதங்களை எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை வங்கதேச அணிக்கு எதிராக பதிவு செய்திருந்தார். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் கம்பீர் இரட்டைச்சதம் விளாசினார். தனது முதல் 29 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்கள் விளாசிய கம்பீர் 2010-ம் ஆண்டுக்கு பிறகு தாம் விளையாடிய 29 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட எடுக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் -சேவாக் இணை இந்தியா அணிக்காக தொடக்க வீரராக 87 போட்டிகளில் விளையாடி 52.52 எனும் சராசரியுடன் 4,412 ரன்களை குவித்தது.

கிரீனிட்ஜ் - ஹெய்ன்ஸ், ஹெய்டன் - ஜஸ்டின் லாங்கர், அலிஸ்டர் குக் - ஸ்டிராஸ், அட்டப்பட்டு - ஜெயசூரியா இணைக்கு அடுத்தடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஜோடியாகச் சேர்ந்து அதிக ரன்கள் குவித்தது கம்பீரும் சேவாக்கும்தான். 11 முறை இந்த இணை 100 ரன்களுக்கும் மேல் குவித்தது.

ஒருநாள் கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை இலங்கை அணிக்கு எதிராக எடுத்தார். 2008-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 113 ரன்கள் குவித்தார்.

147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 12 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். 2012-ல் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் சதம் கண்டார். அதுதான் ஒருநாள் போட்டிகளில் அவர் எடுத்த கடைசி சதம். 2013 ஜனவரி மாதம் தரம்சாலாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 42 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அதுவே அவரது கடைசி ஒருநாள் போட்டி.

ஐ.பி.எல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் தலைமையேற்று இரண்டு ஐ.பி.எல் கோப்பைகளை வெல்ல உதவிய கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அணித்தலைவராக பொறுப்பேற்று விளையாடிய நிலையில் தொடர் தோல்வி காரணமாக இடையிலேயே பதவி விலகினார்.

இது குறித்து அப்போது ட்விட்டரில் பதிவிட்ட கம்பீர் ''டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிய செய்தி உண்மைதான். இது என்னுடைய தனிப்பட்ட முடிவே. அணி நிர்வாகமோ அல்லது பயிற்சியாளரோ காரணமல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நான் டெல்லி அணியை முன்னின்று நடத்துபவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கடைசி வரை நிற்கும் மனிதனாக இருப்பேன். அணியை விட தனிப்பட்ட நபர்கள் பெரியவர்கள் அல்ல'' என தெரிவித்திருந்தார்.

டெல்லி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய கம்பீர், கடந்த சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி 88 பந்துகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

ஐ.பி.எல்லின் முதல் மூன்று சீசன்களில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாக லீக் சுற்றோடு வெளியேறியது. 2011 ஆண்டு ஏலத்தில் கம்பீரை எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை அணித்தலைவராக நியமித்தது. அவரது தலைமையில் ஏழு ஐ.பி.எல் தொடர்களில் ஐந்து முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இருமுறை இறுதிச் சுற்றுக்கு வந்த நைட் ரைடர்ஸ் இருமுறையும் கோப்பையை வென்றது.

2012 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், 2014 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும் இறுதிப் போட்டிகளில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி.

2012 தொடரில் ஆறு அரை சதங்கள் அடித்து கொல்கத்தா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார் கம்பீர். நூறு போட்டிகளுக்கு மேல் ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக பணியாற்றிய இரண்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி மற்றொரு வீரராவார்.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 36 வயது இடது கை பேட்ஸ்மேன் கம்பீர் நான்காவது இடத்தில் உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அதிக அரைசதம் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் மற்றும் வார்னர் ஆகியோர் உள்ளனர்.

''கனத்த மனதோடு மிக கடினமான இம்முடிவை எடுத்துள்ளேன்'' என ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கவுதம் கம்பீர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: