You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பி.வி.சிந்து : உலகின் நம்பர் 2 வீராங்கனையை வென்று இறுதி போட்டிக்கு தகுதி
ஜகார்ட்டாவில் நடந்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மின்டன் பிரிவில் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.
இந்தியாவின் மற்றொரு பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான தய் ட்சு யிங்கிடம் வீழ்ந்தார். 17-21 மற்றும் 14 -15 என்ற செட் கணக்கில் சாய்னா தோற்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பேட்மின்டன் பிரிவில் இந்தியா கடந்த 36 ஆண்டுகளாக ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் தற்போது பேட்மின்டன் பிரிவில் இந்தியா இரண்டு பதக்கங்கள் வெல்லவுள்ளது.
இன்று நடந்த மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அகானே யாமகுச்சியை எதிர்கொண்டார். முதல் செட்டில் 21-17 என்ற கணக்கில் சிந்து வென்றார்.
இரண்டாவது செட்டை யாமாகுச்சி 21-15 என்ற கணக்கில் வென்றார். ஆனால் மூன்றாவது செட்டில் அபாரமாக விளையாடிய சிந்து 21-10 என்ற கணக்கில் வென்று இறுதியில் நுழைந்தார்.
நாளைய தினம் சீன தய்பய் வீராங்கனையான தய் ட்சு யிங் மற்றும் இந்தியாவின் பி.வி.சிந்து தங்க பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றனர்.
விளையாட்டை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் சிந்து. அவரது பெற்றோர் தேசிய அளவில் கூடைப்பந்து விளையாடியவர்கள். ஆனால் சிந்து தனது ஆறாவது வயதிலேயே பேட்மின்டன் மட்டையை பிடித்தார். 2001-ல் அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டைட்டில் வென்ற புல்லேலா கோபிசந்த் சிந்துவை சிறுவயதில் ஈர்த்தவர்.
2016 ஒலிம்பிக்கில் அவரது வாழ்க்கை மாறியது. ஒலிம்பிக்கில் கடைசி 16 சுற்றில் சைனீஸ் தைபய் வீராங்கனை தை ட்சு-யிங்கை வென்றார். காலிறுதியில் சீனாவின் வாங் இஹானை ஜெயித்தார். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஓகுஹாராவை தோற்கடித்தார்.
ஆனால் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா மரினிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்