You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விசில் போடு எக்ஸ்பிரஸ்: 1,000 ரசிகர்களை இலவசமாக புனே அழைத்துச் சென்ற சிஎஸ்கே
சென்னையில் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1,000 ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இன்று புனேவில் நடைபெறும் போட்டியை காண்பதற்காக சிறப்பு ரயிலில் இலவசமாக அழைத்து சென்றுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என்று பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தின. அதை மீறி போட்டிகளை நடத்தினால் ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளை கருத்திற்கொண்டு சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான சென்னையில் நடைபெறவேண்டிய போட்டி புனேவில் நடந்தாலும், அங்கு தனது அணியின் ரசிகர்கள் இருப்பார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 'விசில் போடு எக்ஸ்பிரஸ்' என்று அழைத்துக்கொள்ளும் ரயிலில் புனேவை நோக்கிய 21 மணிநேர பயணத்தை 1000 ரசிகர்கள் சென்னையிலிருந்து வியாழக்கிழமை காலை துவக்கினர்.
இந்தப் போட்டியை காண்பதற்காக ரயிலில் இலவசமாக அழைத்துச்செல்லப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு போட்டிக்கான டிக்கெட், உணவு மற்றும் இருப்பிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயலதிகாரியான காசி விஸ்வநாதன் கிரிக்இஃன்போ இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
"இந்த ஏற்பாடுகளை செய்து தருமாறு ரசிகர்கள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ரசிகர்களுக்கு நல்ல பதிலை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்."
"இதுபோன்ற ஏற்பாடுகளை புனேவில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பது கடினம். முதற்போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டிகளுக்கும் தொடர்வதைப் பற்றி முடிவு செய்வோம். இவை எல்லாமுமே ரசிகர்களுக்குக்காகத்தான்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றிரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக புனேவில் நடைபெறும் போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது.
பிற செய்திகள்:
- இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா?
- நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?
- காமன்வெல்த் உச்சிமாநாட்டில் மோதி : இந்தியாவுக்கு என்ன கொண்டு வருவார்?
- தனக்குப் புனிதர் தோற்றம் ஏற்படுத்த காமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்துகிறாரா மோதி?
- #தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்