You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யு19 உலகக்கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஐந்து வீரர்கள் இவர்கள்தான்
நேற்று முன்தினம் வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகள் மட்டுந்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை தலா மூன்று முறை வென்றிருந்தன. ஆனால், நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை தனதாக்கியது இந்திய அணி.
இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தனது வெற்றிக்கணக்கை தொடங்கியது. அதன் பிறகு நடந்த போட்டிகளில் பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது.
இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்தியா எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் இந்த சாதனை வெற்றிக்கு வித்திட்ட அணியில் இடம்பெற்ற ஐந்து வீரர்களை பற்றி காண்போம்.
பிரித்வி ஷா, கேப்டன்
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்களை குவிக்கும் இயந்திரம் போல செயல்பட்டார் இந்திய அணியின் கேப்டனான பிரித்வி ஷா. இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்திலேயே கடும் போட்டியளித்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 94 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
அணியை வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல் இவரது பீல்டிங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ரஞ்சி டிராபி போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்விக்கு இந்தாண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அடிப்படைத் தொகையாக 20 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லி அணியால் 1.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
சுப்மன் கில், துணை கேப்டன்
கேப்டனுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கும் அணியின் துணை கேப்டனான சுப்மன் கில்லும் இந்த தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக பாகிஸ்தானுடன் நடந்த அரையிறுதிப் போட்டியில் இவர் அடித்த சதம் இந்திய அணி சிறப்பான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது.
இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட கில்லை சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 1.8 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுகுல் ராய்
தனது நேர்த்தியான பந்துவீச்சினால் எதிரணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்களுள் முக்கியமானவரான அனுகுல் ராய் ஐந்து போட்டிகளில் 26 ஓவர்களை வீசி 95 ரன்களை விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
சென்ற ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தில் இளையோர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்த இவர், நான்கு ஆட்டங்களில் விளையாடி பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியதே திருப்பு முனையாக அமைந்தது.
கமலேஷ் நாகர்கோடி
18 வயதாகும் வேகப்பந்துவீச்சாளரான இவர், தொடர்ச்சியாக சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசக்கூடியவர். அதிகபட்சமாக 149 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசியுள்ளார்.
இந்த உலகக்கோப்பையின் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 33 ஓவர்களை வீசி 106 ரன்களை விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இடம்பிடித்த இந்திய அணி வீரர்களிலேயே ஐபிஎல் போட்டிகான ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் இவர்தான். கொல்கத்தா அணி இவரை 3.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
சிவம் மவி
இவரும் தொடர்ச்சியாக 140 கிலோமீட்டர்கள் வேகத்தில் பந்துவீசக்கூடியவர். ஐந்து போட்டிகளால் விளையாடி எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிவத்தை மும்பை அணி மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்