You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது ஃபிஃபா; காரணம் என்ன?
பி எஃப் எஃப் எனப்படும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் தேவையற்ற மூன்றாம் தரப்பு குறுக்கீடு இருக்கும் காரணத்தால் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்வதாக உலகக் கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஃபிஃபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், கடந்த 10 ஆம் தேதி ஃபிஃபா ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக இடைநீக்கம் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை நீக்கியதற்கான காரணத்தையும் செய்திக்குறிப்பில் ஃபிஃபா சுட்டிக்காட்டியுள்ளது. அதில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் அலுவலகம் மற்றும் அதன் கணக்குகள் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஃபிஃபா விதிமுறைகளின்படி கூட்டமைப்பின் விவகாரங்கள் மூன்றாம் நபர் தலையீடின்றி சுதந்திரமாக இயங்கவேண்டும். இந்த விதிக்கு மாறாக இது அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பின் அலுவலகம் மற்றும் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமை முழுமையாக கூட்டமைப்பிற்கே திரும்பியவுடன் கூட்டமைப்பு மீதான இடைநீக்க உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதிப்புகள் என்னென்ன?
ஃபிஃபா கால்பந்து சம்மேளனத்திலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்விளைவுகள் அந்நாட்டு கால்பந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
1. ஃபிஃபாவில் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு அதன் உறுப்பினர் அங்கீகாரத்தை இழக்கிறது.
2. இடைநீக்க உத்தரவு நீக்கப்படும்வரை கால்பந்து கூட்டமைப்பைச் சேர்ந்த கிளப் அணிகள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது.
3. ஃபிஃபா அல்லது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் பயிற்சித் திட்டங்கலில் பாகிஸ்தான் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அதன் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ள முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்