You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிவிட்டரில் கேலி செய்தவருக்கு பதிலடி கொடுத்த மித்தாலி
டிவிட்டரில் தன்னை கேலி செய்ய நினைத்தவருக்கு அதிரடியான பதிலடி கொடுத்து சமூக ஊடகத்தில் அதிக பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டம் வரைச் சென்று கோப்பையை நூலிழையில் தவறவிட்டாலும், நம் அனைவரின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளவர் மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்.
ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மட்டுமே வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, மகளிர் கிரிக்கெட்டிற்கும் பலத்த வரவேற்பைப் பெற வைத்த பெருமை மித்தாலியின் அணியினரையே சேரும்.
மித்தாலி, பெருங்களூருவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றின் திறப்பு விழாவிற்குச் சென்றபோது, அங்கு தனது சக கிரிக்கெட் வீராங்கனைகளான வேதா கிருஷ்ணமூர்த்தி, மமதா மேபென் மற்றும் நூஷின் அல் கதீர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்;
"உங்கள் அக்குலில் வியர்வை உள்ளது. எனவே அது பார்க்க நன்றாக இல்லை" என்று ஒருவர் அப்புகைப்படம் குறித்து கருத்து பதிவு செய்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்:
அதற்கு "நான் மைதானத்தில் வியர்வை சிந்தியதால்தான் இப்போது இங்கு இருக்கிறேன். எனவே அது குறித்து வெட்கப்பட ஒன்றுமில்லை" என்று கூறி, கிரிக்கெட்டில் மட்டுமில்லை இம்மாதிரியான கேலி கருத்துகளுக்கு பதில் சொல்வதிலும் அதிரடியானவர் என்பதை நிரூபித்துள்ளார் மித்தாலி.
ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், உங்களுக்கு விருப்பமான ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இதே கேள்வியை அவர்களிடமும் கேட்பீர்களா என்று கேட்டு அசரவைத்தவர் மித்தாலி.
மித்தாலியின் அந்த டிவீட்டிற்கு சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் பலர் தங்கள் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :