You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் உலக கோப்பை: இறுதியாட்டத்தில் இந்தியா நுழைந்தது எப்படி?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், வியாழக்கிழமை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதியாட்டத்தில் நுழைந்துள்ளது.
அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கான ஐந்து முக்கிய காரணங்களை விளக்குகிறது இக்கட்டுரை.
முதலில் பேட்டிங் செய்தது பெரிதும் உதவியது
மழை காரணமாக டெர்பியில் நடைபெற்ற அரையிறுதி போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் டாஸில் வென்ற இந்திய அணித்தலைவர் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
முக்கிய போட்டியில் மிகப்பெரிய அளவிலான ரன்களை துரத்தும் போது ஏற்படும் பரபரப்பு இந்தியாவுக்கு பாதகத்தை உண்டாக்கியிருக்கலாம். ஆனால், முதலில் பேட் செய்தது இந்தியாவுக்கு பெரிதும் உதவியது.
ஹர்மன்ப்ரீத் கவுரின் அதிரடி ஆட்டம்
இந்தியா வென்றதற்கு மிக முக்கிய காரணம் மட்டை வீச்சாளர் ஹர்மன்ப்ரீத் கவுர்தான். அவரது அதிரடி ஆட்டத்தால்தான் இந்தியாவால் 281 ரன்களை குவிக்க முடிந்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். 115 பந்துகளில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர் உதவியுடன் 171 ரன்களை விளாசினார் கவுர்.
அவரை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மற்றும் பந்துவீச்சாளர்கள் மிகவும் தடுமாறினர்.
சோபிக்காத முன்னணி ஆஸ்திரேலிய மட்டைவீச்சாளர்கள்
முதல் மூன்று ஆஸ்திரேலிய மட்டைவீச்சாளர்களும் முறையே 14, 1 மற்றும் 0 ரன்களையே எடுத்தனர். இதனால் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.
பிளாக்வெல் மற்றும் விலானி ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் பின்னர் களமிறங்கிய பல ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இதுவும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
துல்லியமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளார்கள்
ஜுலான் கோஸ்வாமி மற்றும் ஷிகா பாண்டே ஆகிய இரு இந்திய பந்துவீச்சாளார்களும் இந்த போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசினர். இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களை எடுத்தனர்.
இந்த இரு வீராங்கனைகளும் குறைந்த அளவு ரன்களையே விட்டுக்கொடுத்தனர். குறிப்பாக ஷிகா பாண்டே தான்வீசிய 6 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை பெற்றார்.
தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுக்களை பெற்றார்.
நிதானமிழக்காத இந்திய வீராங்கனைகள்
ஆரம்பத்தில் இந்தியா இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும், பின்னர் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பிளாக்வெல் மற்றும் விலானி ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடிய போதும் நிதானம் தவறாது இந்திய வீராங்கனைகள் விளையாடினர்.
இது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. இந்திய வீராங்கனைகள் பதட்டத்தில் பெரிய அளவில் ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை. அணித்தலைவர் மிதாலி ராஜ் அணியை நன்கு வழிநடத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்