You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூரு டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சரிந்தது ஆஸ்திரேலியா
பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
புனே நகரில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையே பெங்களூருவில் 4-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. தனது முதல் இன்னிங்சில் இந்தியா 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடக்க ஆட்டக்காரார் ராகுல் 90 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் நேதன் லயன் எட்டு விக்கெட்டுக்களை எடுத்தார்.
இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்
பின்னர், விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுககளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்தியா 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா 92 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக தொடக்க ஆட்டக்காரார் ராகுல் அரைச்சதம் எடுத்தார்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாறியது. இந்திய சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசி 41 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணையின் வெற்றிக்கு உதவினார்.
112 ரன்களில் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஆட்டமிழந்ததை தொடர்ந்து, 75 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால், 1-1 என்று இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் சமநிலையில் உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்