மறக்க முடியாத தோனியின் அதிரடி ஆட்டங்கள்

இந்தியாவின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது வரை 199 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், 72 டி-20 சர்வதேச போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி செயலாற்றியுள்ளார்.

283 ஒருநாள் போட்டிகளிலும், 73 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ள தோனி , எண்ணற்ற போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு துணை புரிந்துள்ளார். தோனியின் மிகச் சிறப்பான பேட்டிங், கேப்டன்ஷிப் அடங்கிய சில போட்டிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • கடந்த 2005-இல் பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் போட்டியில், முதல் முறையாக மூன்றாவதாக களமிறங்கிய தோனி 148 ரன்களை விளாசி, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இது தான் ஆரம்பம். இதன் பின்னர் பல சர்வதேச ஒருநாள், டி-20 போட்டிகளில் தோனியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது.
  • அதே 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜெய்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த 3-ஆவது ஒருநாள் போட்டியில், இந்தியா 299 என்ற மிகப் பெரிய இலக்கை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 145 பந்துகளில், 10 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசி தோனி 183 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிக்கு பிறகு தோனி என்றாலே இலங்கை அணிக்கு சிம்மசொப்பனமாக ஆகிவிட்டது.
  • 2006-இல் பாகிஸ்தானில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு தோனி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இளம் வீரர்களின் ஆட்டமே பெரும் காரணமாக அமைந்தது. அடுத்த வந்த ஆண்டுகளில், இவ்விருவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.
  • தென்னாப்பிரிக்காவில் 2007-ஆம் ஆண்டு முதல் டி-20 உலக கோப்பையில் இளம் அணித்தலைவராக தோனி எடுத்த சில முடிவுகள், இந்தியா கோப்பையை வெல்ல பெரிதும் உதவியது. பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதியாட்டத்தில், பரபரப்பான தருணங்களில் மிகவும் பக்குவப்பட்ட அணித் தலைவராக நடந்து கொண்ட தோனியின் தலைமைப் பண்பு , அதற்கு பிறகு பல ஆண்டுகள் வெகுவாக பாராட்டப்பட்டது.
  • ஆஸ்திரேலியாவில் 2008-ல் நடந்த சிபி ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு தோனியின் பேட்டிங் மற்றும் அணி வீரர்களை அரவணைத்து செல்லும் அவரது தலைமைப் பண்பு ஆகியவை காரணங்களாக அமைந்தன. சிபி தொடரில் இறுதியாட்டங்களில் தோனியின் விக்கெட் கீப்பிங் பாராட்டுக்களை பெற்றது.
  • யாருமே மறக்க முடியாத போட்டி, 2011 ஒருநாள் உலக கோப்பை இறுதியாட்டம் தான். இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி 274 ரன்கள் எடுக்க, ஆட்ட வரிசையில் ஐந்தாவது களமிறங்கிய தோனி சற்றும் நிதானம் இழக்காமல் இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளித்தார். முத்தையா முரளிதரனின் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடிய தோனி ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவர் அடித்த சிக்ஸர் இந்தியாவுக்கு வெற்றியையும், உலக கோப்பையும் பெற்றுத் தந்தது.
  • இங்கிலாந்தில் 2013-இல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது. இந்த தொடரில் தோனியின் பேட்டிங் மற்றும் தலைமை பண்பு ஆகிய இரண்டுமே சிறப்பாக இருந்தது.
  • இந்திய அணிக்கு தலைமை தாங்கி பல வெற்றிகளை ஈட்டியது போல சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியின் தலைவராக பல வெற்றிகளை தோனி குவித்துள்ளார். 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகள் ஐபிஎல் கோப்பையையும், 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டி20 சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி வென்றது.