சூரிய கிரகணம்: அக்டோபர் 25ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி காணலாம்? வெறும் கண்களால் பார்க்கலாமா?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன என்பது முதல் அதனை எப்படி காணலாம் என்பது வரை நமக்குப் பல கேள்விகள் எழும். பகுதி சூரிய கிரகணம் குறித்த உங்களின் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் பிபிசி தமிழுக்கு வழங்கியுள்ள தகவல்கள் இவை:

சூரிய கிரகணம் என்றால் என்ன?

பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை.

எனவே, ஒவ்வொரு சுற்றின்போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும். சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் கற்பனையான நேர் கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.

பூமியை நிலவு சுற்றும்பாதை எக்லிப்டிக் தளத்திற்கு சாய்கோணத்தில் இல்லாமல் இருந்திருந்தால் ஒவ்வொரு அமாவாசையின் போதும் சூரிய கிரகணம் நிகழ்ந்திருக்கும். சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று முழுநிழல் பகுதி மற்றது புறநிழல் பகுதி.

பகுதி சூரிய கிரகணம் என்றால் என்ன?

முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்துவிடும். இது முழு சூரிய கிரகணமாகும்.

புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும். எனவே, புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் காண்பர். மீதப்பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரிய கிரகணமாகும்.

பகுதி சூரிய கிரகணம் எப்போது நிகழும்? எங்கு காணலாம்?

இதுபோன்ற ஒரு பகுதி சூரியகிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி, செவ்வாய், மாலை நிகழவுள்ளது.

ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 02:19 மணிக்கு ஆரம்பித்து, மாலை 06:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் சந்திரன் சூரியனை 80 விழுக்காடு மறைக்கும்.

சென்னையில் இந்திய நேரப்படி மாலை 05:14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். 05:44 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். சூரியன் அன்று 05:44 மணிக்கு மறையும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இதுவும் சூரியன் மறைகையில்தான். எனவே, மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்நிகழ்வு நடக்கிறது. கிரகணம் ஆரம்பிக்கும்போது தொடுவானிலிருந்து சுமார் 7 டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும்.

இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரங்களில் இந்த நிகழ்வைக் காண இயலும்.

மீண்டும் எப்போது காணலாம்?

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் 2020 ஜூன் 21ஆம் நாள் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது. மீண்டும் 2027 ஆகஸ்ட் 2-ல் தமிழ்நாட்டில் இதுபோன்ற பகுதி சூரிய கிரகணத்தைக் காணலாம்.

வெறும் கண்களால் பார்க்கலாமா?

சூரியனை கிரகணத்தின்போதோ, சாதாரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படிச் செய்தால் கண்பார்வையை இழக்க நேரிடும். சூரியஒளியை ஒரு சிறிய (5 எம்.எம்) துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடிமூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியன் பிம்பத்தையும் கிரகணத்தையும் காணலாம்.

நம்பிக்கைகளும் அறிவியலும்

பாம்பு சூரியனை விழுங்குவதுதான் சூரிய கிரகணம் என்றும் கிரகணம் நிகழும்போது உணவு சமைக்கக் கூடாது / உண்ணக்கூடாது, மீறி சமைத்து உண்டால் அது விஷமாக மாறிவிடும் என்றும், உணவில் அருகம்புல் சேர்த்தபின்னரே உண்ண வேண்டும் என்றும் நம்பிக்கைகள் இன்றும் தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுகிறது.

மேலும் கர்ப்பிணிகள் கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இவையெதுவும் "அறிவியல்பூர்வமானது அல்ல" என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: