அறிவியல் அதிசயம்: பூமியின் அடுத்த சூப்பர் கண்டம் எப்போது, எங்கே, எப்படித் தோன்றும்?

சூப்பர் கண்டம்
படக்குறிப்பு, சூப்பர் கண்டம் உருவாகும்போது பசிபிக் பெருங்கடல் மறையும்
    • எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி உலக சேவை

பெருங்கடல்கள் மற்றும் பரந்த கண்டங்களால் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த பூமியின் நிலவியல் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய ஆய்வு மாதிரியின்படி, பசிபிக் பெருங்கடல் மறைந்து, கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, வட துருவத்தில் 'அமேசியா' எனப்படும் புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என கணித்துள்ளனர். ஆனால், இந்த சூப்பர் கண்டம் அடுத்த 200 அல்லது 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் உருவாகாது.

ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ள இந்த ஆராய்ச்சியின்படி, அமெரிக்கா மேற்கு நோக்கியும் ஆசிய கண்டம் கிழக்கு நோக்கியும், அண்டார்டிகா தென் அமெரிக்காவை நோக்கியும் நகர்ந்து, ஆப்பிரிக்கா ஒருபுறம் ஆசியாவையும் மறுபுறம் ஐரோப்பாவையும் இணைத்து அமேசியா சூப்பர் கண்டம் உருவாகும் என கணித்துள்ளனர்.

நேஷனல் சயின்ஸ் ரிவ்யூ எனும் ஆய்விதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

சூப்பர் கண்டம்

"உலகின் மேற்பரப்பில் சராசரி ஆண்டு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பெருங்கடல்களின் ஒட்டுமொத்த வலிமையும் பலவீனமடையும்போது, பசிபிக் பெருங்கடல் குறிப்பிடத்தக்க அளவு சுருங்கி, அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல்களைவிட அளவில் சிறியதாகும் என எங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன," என இந்த ஆய்வை வழிநடத்தும் ஆசிரியரும் கர்டின் பல்கலைக்கழகத்தின் எர்த் டைனமிக்ஸ் ரிசர்ச் குரூப் மற்றும் ஸ்கூல் ஆஃப் எர்த் அண்ட் பிளானெட்டரி சயின்சஸை சேர்ந்தவருமான டாக்டர் சுவான் ஹுவாங் கூறுகிறார்.

உலகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் இப்போது பார்க்கும் பூமி, கடைசியாக உருவான சூப்பர் கண்டம் சிதைந்ததால் ஏற்பட்ட விளைவே.

அமெரிக்கா ஆசிய கண்டத்துடன் மோதும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான வார்த்தையே 'அமேசியா' ஆகும்.

180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கடைசி சூப்பர் கண்டமான பாஞ்சியா, பல கண்டங்களாக உடைந்தன. இது பூமியிலுள்ள அனைத்து நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியது, மேலும் பந்தலஸ்ஸா எனப்படும் உலகளாவிய பெருங்கடலால் சூழப்பட்டது.

சமீபத்திய ஆய்வுக்கு, சூப்பர் கண்டங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை உருவகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் பசிபிக் பெருங்கடல் சில சென்டிமீட்டர்கள் சுருங்குவதாக கணினி மாடலிங் தரவுகள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆஸ்திரேலியா ஆசியாவுடன் மோதி பின்னர் இறுதியில் பசிபிக் பெருங்கடல் மறைந்தபிறகு அமெரிக்காவுடன் இணைக்கப்படும்.

கடந்த காலத்தில் அமேசியாவை தவிர ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் கண்டத்திற்கான மற்ற மூன்று வாய்ப்புகளை கணித்திருந்தனர்: அவை, நொவோபாஞ்சியா, பாஞ்சியா அல்டிமா மற்றும் ஆரிக்கா.

பூமி
படக்குறிப்பு, பெருங்கடலுக்கு அடியில் உள்ள தட்டுக்களின் இயக்கமே கண்டங்களின் நகர்வாகும்.

இந்த புதிய ஆய்வால், முந்தைய வாய்ப்புகள் நிகழ்வது குறித்த சந்தேகங்கள் உருவாகியுள்ளன.

"100 சதவிகித உறுதி என்பது அறிவியலில் அரிதாகவே பயன்படுத்தப்படும் ஒரு வலுவான சொற்றொடர், குறிப்பாக சிக்கலான பூமி அமைப்பின் பரிணாமப் போக்கைப் பற்றி நாம் பேசும்போது, ​​அதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள தொடங்குகிறோம்" என, ஆய்வின் இணை ஆசிரியர் செங்-ஸியாங் லி விவரிக்கிறார்.

"எங்களுடைய ஆய்வு உட்பட நீங்கள் வாசித்த அனைத்து ஆய்வு மாதிரிகளும் அனுமானம் மட்டுமே. எங்கள் கணிப்பு, எங்களது மாடலிங் முடிவை அடிப்படையாகக் கொண்டது, இது நம்முடைய தற்போதைய அறிவு மற்றும் பல அனுமானங்களால் பிணைக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

பூமியின் வயது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் சுழற்சியில், இயக்கங்கள் மாறுவதும் கண்டங்கள் உடைவதும் வழக்கமாக நடக்கும்.

பெருங்கடல்களின் கீழ் உள்ள டெக்டோனிக் தட்டுகளின் (பூமியின் அடிப்பகுதியின் நகர்வுகளை கொண்டு உருவான நிலப்பரப்புகள்) இயக்கம் தான் கண்டங்களை நகர்த்துகிறது.

"சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி, பூமியின் உள் கட்டமைப்புகள், பண்புகள் மற்றும் டெக்டோனிக் தட்டுக்கள், புவி மேற்பரப்பு வெப்பச்சலனம் போன்ற செயல்முறைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கோள பூமி போன்ற அமைப்பை நாங்கள் வடிவமைத்தோம். சூப்பர் கண்டத்தை எந்த காரணிகள் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பார்க்க நாங்கள் தொடர்ச்சியான மாதிரி உருவகப்படுத்துதல்களை நடத்தினோம்" என்கிறார் லி.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

கடலுக்கு அடியில் இயக்கம்

பெருங்கடல் கற்கோளத்தின் வலிமை (~100 கிமீ திடமான ஓடு அல்லது பெருங்கடல்களின் கீழ் உள்ள டெக்டோனிக் தட்டு) ஒரு சூப்பர் கண்டம் எவ்வாறு உருவாகிறது என்பதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மாதிரி விளைவு வெளிப்படுத்தியது.

டாக்டர் சுவான் ஹுவாங்

பட மூலாதாரம், Dr Chuan Huang

படக்குறிப்பு, டாக்டர் சுவான் ஹுவாங்

பல பில்லியன் ஆண்டுகளாக பூமி மெதுவாக அதன் உள் வெப்பத்தை இழந்து வருவதால், 7-8 கிமீ தடிமனான கடல் தளத்தின் மேலோடு காலப்போக்கில் மெல்லியதாகத் தோன்றுகிறது, ஏனெனில் நடுக்கடல் முகடுகளில் குறைந்த அளவு மேற்பரப்பு உருகுவதால், புதிய கடல் மேலோடு மற்றும் கற்கோளம் உருவாக்கப்படுகின்றன.

"எங்கள் மாடலிங் முடிவுகள் பசிபிக் பெருங்கடல் மறைவதன் மூலம் மட்டுமே எதிர்கால சூப்பர் கண்டமான அமேசியா உருவாகும் என்று கணித்துள்ளது," என்கிறார் லி.

சூப்பர் கண்டத்தின் உருவாக்கம் மற்றும் சிதைவு எப்போதும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக, சூப்பர் கண்டத்தின் உருவாக்கம் கடல் மட்டம் குறைவதற்கும், பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கும், பரந்த வறண்ட நிலம் உருவாகுவதற்கும் வழிவகுக்கும்.

இதற்கு நேர்மாறாக, ஒரு சூப்பர் கண்டத்தின் முறிவின் போது, ​​கடல் மட்டம் உயரும், பல்லுயிர் பெருக்கப்படும், மேலும் பல கண்டங்கள் உயிர் வாழ்வதற்கு ஆதரவாக இருக்கும்.

செங்-ஸியாங்

பட மூலாதாரம், Zheng-Xiang Li

படக்குறிப்பு, செங்-ஸியாங்

"இப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளில் மனிதன் எப்படி இருப்பான் என்பதைக் கணிப்பது கடினம், ஆனால் பூமியின் உயிர்க்கோளத்தின் ஒரு அங்கமாக, எப்போதும் இருந்ததைப் போலவே மனிதன் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைவான்" என்று லி கூறுகிறார்.

"எங்களின் உயரிய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப திறன் கடந்த காலத்தில் செய்தது போல் எதிர்கால மாற்றங்களை மாற்றியமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்." என அவர் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, 87 வயது தாயை நீலக்குறிஞ்சி பூக்களைப் பார்க்க சுமந்து சென்ற மகன்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: