குழந்தை வளர்ப்பு: இன்றைய தலைமுறையினர் மனதளவில் வெகு விரைவாக வளர்ந்து விடுகிறார்களா? - ஓர் அலசல்

சமூக ஊடகம், அதீத அன்பு காட்டும் பெற்றோர்கள், வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று கொடுக்கப்படும் அழுத்தம் என இந்த காலத்தில் குழந்தைகள் பல விஷயங்களை கையாள்கின்றனர். ஆனால், இவையனைத்தும் அவர்கள் முந்தைய தலைமுறையை விட வேகமாக வளரும்படி செய்கிறதா அல்லது மெதுவாக வளரும்படி செய்கிறதா?

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதில்லை என்று பெரியவர்கள் கூறுகின்றனர். அவர்கள் விதிமுறைகள், மற்றவர்களின் மேற்பார்வை, இந்த டிஜிட்டல் யூக அழுத்தங்கள் இல்லாத தங்களின் குழந்தைப் பருவத்தை நினைவு கொள்கின்றனர். சில விஷயங்களில், அது உண்மையாக இருக்கலாம்.

சராசரியாக ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு 10 வயதில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். இது முந்தைய தலைமுறையினர் அணுக முடியாத ஓர் உலகத்தை அவர்களுக்கு காட்டுகிறது. செய்திகள் கிடைப்பதற்கான எண்ணற்ற வழிகள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற வசதிகள் முன்பு பெரியவர்களுக்கு என இருந்தது. இப்போது அது குழந்தைகளுக்கு கிடைக்கும் போது,அவர்கள் தங்கள் வயது முதிர்ச்சி அடையும் முன் அவர்கள் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சி அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு ஆங்கிலத்தில் 'KGOY' என்று அழைக்கப்படுகிறது. அதாவது, 'kids getting older younger'. மிகவும் இளம் பருவத்திலேயே குழந்தைகள் முதிர்ச்சியடைக்கின்றனர் என்பது அதன் பொருள். அதாவது குழந்தைகள் முந்தைய தலைமுறைகளை விட அதிக பொது அறிவுக்கூர்மை கொண்டவர்களாக உள்ளனர்.

இந்த KGOY உத்திக்கு ஒரு காரணம் உள்ளது. இது சந்தைப்படுத்தலில் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு ஒரு 'பிராண்ட்'டைப் பற்றி அதிகம் தெரிந்து உள்ளது. இதனால், தயாரிப்புகளை அவர்களின் பெற்றோரை விட குழந்தைகளுக்கு விளம்பரப்படுத்த வேண்டும். இந்த கோட்பாடு 2000 முதல் 2009 வரை உள்ள ஆண்டுகளில் இருந்து தொடங்கியது. அன்றிலிருந்து, குழந்தைகள் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பார்ப்பது முதல் சமூக ஊடகங்களில் காட்டப்படும் அழகுக்கான வரையறையால், இளம் வயதினர் தங்கள் தோற்றம் குறித்த அழுத்தத்திற்கு ஆளாவது வரை வல்லுநர்கள் குழந்தைப் பருவத்தின் ஆரம்ப கால பாதிப்புகளை நிரூபிக்க முயன்றனர்.

குழந்தைகள் மிக விரைவாக வளர்வது போல் தோன்றலாம் என்று பலர் கவலைப்படுகிறார்கள். உண்மையில் அவர்கள் மெதுவாக முதிர்ச்சி அடைகிறார்கள் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. 'ஜென் ஸி' தலைமுறையினர், முந்தைய தலைமுறைகளை விட படிப்பை முடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற வயது வந்தோர் செய்யும் வேலைகளை விரைவாக செய்கின்றனர். மேலும் டீன் ஏஜ் உள்ளவர்கள் உடலுறவு கொள்வது, டேட்டிங், மது அருந்துதல், பெற்றோர் இல்லாமல் வெளியே செல்வது போன்ற 'வயது முதிர்ந்த' செயல்களில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு தொழில்நுட்பம் இன்னும் பலவற்றை வெளிப்படுத்தி, அவர்களை அறிவுப்பூர்வமாக ஆர்வமுள்ளவர்களாக ஆக்குகிறது. இருப்பினும், அவர்கள் உண்மையில் விரைவாக வளர்கிறார்களா என்பதற்கு பல கண்ணோட்டங்கள் இருக்கலாம். முதிர்ச்சியின் அளவாக நாம் எதை நினைக்கிறோம் என்பதையும், வேகமாக வளர்வதன் உண்மையில் என்ன அர்த்தம் என்பதையும் புதிய கோணத்தில் பார்ப்பதற்கான சமயமாக இருக்கலாம். குழந்தைப் பருவம் என்றால் என்ன?நாம் வளர்ந்து வருவதை எவ்வாறு அளவிடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள, குழந்தை பருவத்திற்கும், வயது வந்தோர் பருவத்திற்கும் என்ன அர்த்தம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம் உள்ளது. ஒரு குழந்தை பருவமடைவது போன்ற உயிரியல் நிகழ்வுகளைத் தவிர்த்து, குழந்தைப் பருவத்தைப் பற்றிய நமது புரிதல் பெரும்பாலும் ஒரு சமூகக் கட்டமைப்பை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். 

ஒருவர் எப்போது, எங்கே வளர்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய வெவ்வேறு பார்வைகளை மக்கள் கொண்டுள்ளனர். இதனால் இதுகுறித்து அளவிடுவது கடினம். பெரும்பாலான நாடுகளில், 18 வயதிலிருந்து பெரியவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இது மாறுபடும். ஜப்பானில், உங்களுக்கு 20 வயது ஆகும் வரை சட்டப்பூர்வமாக குழந்தையாக இருக்கிறீர்கள். ஈரான் போன்ற பிற நாடுகளில், ஒன்பது வயதுக்குட்பட்ட தனிநபர்கள் சட்டப்பூர்வமாக பெரியவர்களாக கருதப்படலாம். குழந்தைப் பருவத்தின் வரையறைகள் வரலாற்று ரீதியாகவும் வேறுபடுகின்றன. அதாவது, 19 ஆம் நூற்றாண்டில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்வது பொதுவான நடைமுறையாக இருந்தது. மேலும 'இளைஞர்' என்ற ஒரு விஷயம் உண்மையில் 1940க்கள் வரை இல்லை. அதற்கு முன், இளம் பருவத்தினர் குழந்தைப் பருவத்திலிருந்து வயது வந்தோராக நேரடியாக மாறினர்.

பிறகு, ஒருவர் 'வளர்ந்துவிட்டார்' என்பதை எப்படி புரிந்துகொள்வது? 

"குழந்தைகளின் வளர்ச்சியின் அடிப்படை நிலைகள் மாறவில்லை," என்கிறார், குழந்தைகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் மூத்த துணைத் தலைவரும் இயக்குநருமான ஷெல்லி பாஸ்னிக். இவரது குழு நியூயார்க்கில் உள்ள கல்வி மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சி குழு . "வெளி உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிக்கான வரையறையும் அப்படியே இருக்கின்றன." என்கிறார். மேலும் அவர் பேசுகையில், "சமூக மற்றும் கலாசார அடிப்படையில் 'வளர்ச்சி' என்ற கருத்தை அளவிடுவது கடினம். குழந்தைப் பருவத்தில் பல கலாசார, மொழியியல் மற்றும் வளர்ச்சி அம்சங்கள் உள்ளன. குழந்தைகள் எவ்வளவு விரைவாக வளர்கிறார்கள் மற்றும் அவர்கள் வயதாகிறார்கள் என்பதில் எந்த ஒரு விஷயத்தையும் முதன்மையான தாக்கமாக குறிப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது." என்கிறார்.

மேலும் பொதுவாக மனிதர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்தை கவலையற்ற, மகிழ்ச்சியான தருணமாக கற்பனை செய்து கொள்வதற்கான சான்றுகளும் உள்ளன. இன்றைய குழந்தைகள் மிக வேகமாக முதிர்ச்சியடைகிறார்கள் என்று புகார் கூறும் பெரியவர்கள், தங்களின் குழந்தைப் பருவ காலத்தைப் பற்றிய பார்வையை யதார்த்ததுடன் ஒப்பிட முடியாத வகையில் கொண்டிருக்கின்றனர்.

ஊடகங்களும் குழந்தைகளும்

மேலும், பாஸ்னிக் கூறுகையில், "இதில் மாற்றமடைந்த விஷயம் என்னவென்றால், குழந்தைகளுக்கு சென்றடையும் தகவல்கள். வீடியோ தளங்கள், சமூக ஊடக தளங்கள் என பல்வேறு வகையில் அவர்களுக்கு தகவல்கள் சென்றடைகின்றன. இதனை 'ஊடகத்தால் வழங்கப்படும் சிந்தனை' என்று பாஸ்னிக் கூறுகிறார். இது இணையத்தில் பெரியவர்களை இலக்காகக் கொண்டு பகிரப்படும் தகவல்கள். முந்தைய தலைமுறைகளை விட மிக விரைவாக குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.

"இளைய வயதிலேயே வன்முறை மற்றும் பாலியல் உள்ளடக்கம் கொண்ட தகவல்கள் அவர்களுக்கு சென்றடைகிறது. இத்தகைய விஷயங்களை வயது வந்தோர் எடுத்து கொள்வது போல், முழுமையாக வளர்ச்சியடையாத குழந்தைகளின் மூளை எடுத்து கொள்ளாது," என்று டாக்டர் வில்லோ ஜென்கின்ஸ் கூறுகிறார். இவர் அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள ராடி குழந்தைகள் மருத்துவமனையில் மனநல பிரிவின் இயக்குநர். " குழந்தைகள் எந்த மேற்பார்வையுமின்றி அந்நியர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இது 'சைபர்புல்லிங்' அல்லது வயது வந்தோர் பேசும் உரையாடல்களுக்கு வழிவகுக்கலாம். இத்தகைய விஷயங்களை குழந்தைகள் கையாளும் நிலையில் இல்லை." என்றார்.

தொழில்நுட்பம் நன்மை செய்வதாக இருந்தாலும் சரி, தீமை செய்வதாக இருந்தாலும் சரி, இளம் வயதினர் சமூக ஊடகத்தை பயன்படுவது குறித்து பல வீண் பயங்கள் உள்ளன என்று ஜென்கின்ஸ் குறிப்பிடுகிறார். இது அதற்கு முந்தைய தலைமுறை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் டிவி பார்ப்பதை குறித்து எவ்வாறு கவலையடைந்தானாரோ, அதனுடன் ஒப்பிடப்படுகிறது. உண்மையில், முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத தகவல்கள் இந்த தலைமுறையினருக்கு கிடைப்பது நல்ல விஷயம்தான். தொழில்நுட்பமானது குழந்தைகளை சுதந்திரமாக அறிவைத் தேடவும், விமர்சன ரீதியாக சிந்திக்கவும் உதவுகிறது. குழந்தைகள் வளர்ச்சி, தொழில்நுட்பம் பாதிக்கிறது என்ற கருத்து அவ்வளவு உண்மையானதில்லை. கடந்த சில தசாப்தங்களாக, அமெரிக்காவிலும் பல நாடுகளிலும் குழந்தை வளர்ப்பு தீவிரமடைந்துள்ளது. மேலும் இன்று குழந்தைகள் முந்தைய தலைமுறைகளை விட கட்டமைக்கப்பட்ட விளையாட்டும், பாடம் சாராத செயல்பாடுகளும், பெற்றோரின் மேற்பார்வையும் கிடைத்துள்ளன. "குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில், குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் கட்டுப்படுத்தப்படுவதைப் பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன," என்கிறார் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான வில்லியம் கோர்சாரோ.

இந்த போக்கு கொரோனா தொற்றுகாலத்தில் மேலும் அதிகப்படுத்தியது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக வீட்டிலேயே தங்கினர். பல்கலைக்கழகத்தில் சேருவதற்குப் பயணம் செய்ய முடியவில்லை. இது சுதந்திரத்தின் அளிக்கும் முதல் அனுபவத்தில் இருந்து அவர்களை விலகி வைத்தனர். சில வழக்கமான கட்டுப்பாட்டால், அவர்களால் சில வருடங்களுக்கு முன்பிருந்த குழந்தைகள் வளர்ந்த விகிதத்தில் வளர முடியவில்லை. ஆனால் , முகத்தில் மாஸ்க் அணிவது போன்ற நடவடிக்கையால் சில கசப்பான யதார்த்தையும் சமூகப் பொறுப்புகளையும் பெரியவர்களைப் போன்று எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது குறித்த பார்வை மாறுபடலாம்

ஒரு வகையில்பார்த்தால், குழந்தைகள் உண்மையில் மிகவும் மெதுவாக வளர்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களின் நெருங்கிய நிஜ வாழ்க்கை தோழர்களாக இருக்கும் பட்சத்தில், டிஜிட்டல் உலகில் இருந்து தள்ளி இளமையாக இருக்கிறார்கள். இன்னொரு வகையில், பார்த்தால், இன்றைய உலகில் குழந்தைகள் எப்படி முதிர்ச்சியடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். உண்மையில், சொந்த ஊருக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றிய பரந்த பார்வை, தொழில்நுட்பத்தால் ஏற்படும் நட்பு வட்டங்கள் ஆகியவை அவர்களை வளர்ந்தவர்களாக காட்டுகிறது.

குழந்தைகள் முதிர்ச்சியடையும் விகிதத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. மேலும் சூழ்நிலைகள் மிகவும் தனித்துவமானவை. குழந்தைப் பருவம் எங்கு முடிகிறது என்றும், இளமைப் பருவம் எங்கு தொடங்குகிறது என்பது பற்றிய நமது புரிதல் மிகவும் மங்கலானவை. சமூகம் நிலையானது அல்ல. அது தொடர்ந்து மாறி வருகிறது. அதனால் குழந்தைப் பருவம் எப்படி மாறுகிறதோ அதுவும் தொடர்ந்து மாறி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் வயதை மீறி விஷயம் என்பது சிக்கலாக தோன்றலாம் ஆனால் அவர்களின் பெற்றோருக்கு இணையம், தொலைக்காட்சி அல்லது தொலைபேசி இல்லாத வாழ்க்கை பற்றி எப்படி தெரியாதோ, இன்றைய குழந்தைகளுக்கு இதற்கான வித்தியாசம் தெரியாது. ஜெஸ்ஸிகா க்ராஸின் கூடுதல் தகவலுடன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: