காஃபி, மிளகாய் மூலம் பசி உணர்வைத் தடுக்க முடியுமா?

    • எழுதியவர், ஜெஸிக்கா பிராட்லி
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

பரபரப்பான வாழ்க்கையில் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை எப்படியாவது ஆரோக்கியமான உணவுகளில் இருந்து பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறோம், இல்லையா? ஆனாலும், நாம் சாப்பிட்ட பின்பும் கூட, இன்னும் கொஞ்சம் உணவுக்கு மனம் ஆசைப்படுகிறது. உண்மையில் அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை வேறொரு உணவு சாப்பிடுவதன் மூலம் மாற்ற முடியுமா? அப்படியோர் உணவு இருக்கிறதா?

பசிக்கும்போது சாப்பிடுவதற்கும், நன்றாக சாப்பிட்ட பின்பும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவதற்கும், அடிக்கடி எதாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு இக்கட்டுரையில் பதில் அறிந்து கொள்வோம், வாங்க!

அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டுமென்ற உணர்வை மிளகாய், இஞ்சி உள்ளிட்டவைகள் குறைக்க வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London. ) உள்ள இம்பீரியல் நியூட்ரிசன் அண்ட் ஃபுட் நெட்வொர் துறையின் (Imperial Nutrition and Food Network) பணி புரியும் பேராசிரியர் காரி ஃப்ராஸ்ட் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இது தொடர்பாக கண்டறியப்பட்டுள்ளது.

விலங்குகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டையும் உணவில் சேர்த்து கொள்வதால் அவ்வளவாக பசி எடுக்காது என்பதும், இது மனிதர்களுக்கு எப்படி என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிளகாயில் உள்ள கெப்சைசின் (capsaicin) என்ற பொருள் பசியை தூண்டாமல் இருக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பசி உணர்வைத் தடுக்கும் ஆய்வில் என்ன தெரியவந்தது?

அமெரிக்காவின் ஓஹையோவில் உள்ள பவுலிங் கிரீன் பல்கலைக்கத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் துணை பேரராசிரியரான மேரி ஜோன் லூடி (Mary-Jon Ludy) என்பவர் தன் உணவு முறையில் அதிகமாக மிளகாய இருக்குமாறு பார்த்து கொண்டார்.

மேலும், அவர் தனது ஆய்வகத்திற்கு 25 பேரை அழைத்து அவர்களுக்கு தக்காளி சூப் அருந்த கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் நான்கிலிருந்து ஐந்து மணிநேரம் அங்கேயே இருந்திருக்கிறார்கள். அப்போதுதான், மிளகாய் சேர்ந்த உணவினால் பசி குறைகிறதா என்பதை கண்டறிய முடியும்.

25 நபர்களுக்கும், சிறிது நேரம் கழித்து, உணவு வழங்கப்பட்டுள்ளது. அதுவும், 'நீங்கள் வேண்டுமளவு உண்ணலாம்' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

ஒரு கிராம் அளவு மிளகாயுடன் சூப் குடித்தவர்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் 10 கலோரிகளை அதிகமாக எரித்துள்ளனர். மாதம் ஒரு முறை மிளகாயை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கும், வாரத்தில் மூன்று முறைக்கு மேல் மிளகாயுடன் கூடிய உணவு சாப்பிட்டவர்களுக்கும் நன்றாக வித்தியாசம் தெரிந்திருக்கிறது. அதவாது, மிளகாயை உணவில் அடிக்கடி சேர்ந்த்து கொள்பவர்களுக்கு சாப்பிட்டவுடன் மீண்டும் சாப்பிட விட வேண்டும் உணர்வு குறைவாக இருந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கெப்சைசினை கேப்சியூலாக சாப்பிடுவதை விட, தக்காளி சூப் உடன் சேர்ந்து எடுத்து கொண்டவர்களுக்கே உடலில் கொழுப்பு குறைந்துள்ளதாக லூடி தெரிவித்துள்ளார்.

மிளகாய் எந்தளவிற்கு பலனளிக்கும்?

உணவு முறையில் அதிகளவு மிளகாய் சேர்த்து கொள்வதால் பசி உணர்வு குறையும் என்பதெல்லாம் நீடித்த பலன் இல்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன். இவையெல்லாம் தற்காலிக பலன்களை மட்டுமே கூறுவதாக ஃப்ராஸ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

அவருடைய ஆய்வின்படி, 32 ஆய்வுகளில் மிளகாய் மற்றும் கிரீன் டீ போன்றவை பசி உணர்வை மட்டுப்படுத்தாது என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக தெரிவிக்கிறார்.

பசியை மட்டுப்படுத்த காஃபி உதவுமா?

நாம் அடிக்கடி சாப்பிடாமல் இருப்பதையும், அதுபோன்ற உணர்வையும் தடுப்பதில் காஃபி முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுவதுண்டு. ஆனால், அதுவும் உண்மையில்லை. கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழத்தின் துணை பேராசிரியர் மேத்யூ ஸ்கூபர்ட்( Matthew Schubert) கூறுகையில், காஃபி குடிப்பதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. காஃபி குடிப்பதால் உணவு சிறுகுடலுக்குச் செல்வதற்கான நேரம் எடுத்தும். இது பசியை தூண்டுவதுட்ன தொடர்புடையது என்றும் அவர் கூறுகிறார்.

அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்க என்ன வழி?

ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஆற்றலுடன் அடிக்கடி பசி உணர்வும் ஏற்படாது என்கிறது ஆய்வு. இருப்பினும், இதனால் நமக்கு ஏற்படும் அதீத பசி உணர்வை தடுப்பதாக எந்த ஆய்வுகளும் கூறவில்லை.

அதைப்போல, உணவில் அதிகளவு ஃபைபர் எடுத்துக்கொண்டால் மட்டுமே அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம். அதிக அளவு ஃபைபர் உள்ள உணவுவை சாப்பிடுவதன் மூலம், நாம் திருப்தியாக உண்ட ஒரு உணர்வு ஏற்படும். பசி ஏற்படாது. ஆனால், நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஃபைபரின் அளவு மிகவும் முக்கியம். குறைவான அளவு உள்ள ஃபைபர் உணவுகளை எடுத்து கொண்டால் அடிக்கடி சாப்பிட வேண்டுமென்ற உணர்வை தடுக்க முடியாது என்றும் ஃப்ராஸ்ட் கூறுகிறார்.

ஒரு நாளைக்கு 30 கிராம் அளவுக்கு காய், முழு தானியங்களில் இருந்து கிடைக்கும் ஃபைபர் எடுத்து கொள்ளலாம். ஆனால், பிரிட்டனில் உள்ளவர்கள் 15 கிராம் ஃபைபர் மட்டுமே தங்கள் உணவில் சேர்த்து கொள்கின்றனர்.இவர்கள் தினமும் 30 கிராம் ஃபைர் எடுத்துகொண்டால் அடிக்கடி எழும் பசி உணர்வில் மாற்றம் ஏற்படும். ஆனால், அதை நீடித்த ஒன்றாக கருத முடியாது என்பதை அறிவுறுத்துகிறார் ஃப்ராஸ்ட்.

நம் அன்றாட டயட்டில் அதிக ஃபைபர் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் பசி உணர்வு குறையும் என்று ஆய்வுகள் கூறினாலும், இது ஒரு சிறிய பரிசோதனை அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் நன்றாக சாப்பிட்ட ஒரு உணர்வை, அப்பாடா வயிறு முழுக்க சாப்பிட்டாயிற்று என்ற உணர்வை தரும் உணவுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், இதற்கான விடை இன்னும் கண்டறியப்படவில்லை. ஆய்வுகளின் அடிப்படையில், புரதம் அதிகம் உள்ள உணவுகள் உங்களின் பசியை குறைக்கும் என்று சொல்லப்பட்டாலும், அதன் பலன் குறைவாகவே உள்ளது. மேலும், அதிகளவு ஃபைபர் உள்ள உணவுகளை ஒப்பிடுவது என்பதும் கடினமானது என்கிறார் கனடாவின் வான்கோவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழத்தின் மார்க்கெட்டிங் மற்றும் பிகேவியரல் அறிவியல் துறையின் துணை பேராசிரியர் யான் கார்நில்.

தண்ணீர் குடிப்பது பசி உணர்வைத் தடுக்குமா?

நமக்கு ஏற்படும் பசி உணர்வை குறைப்பதற்கு எந்த உணவுப் பொருளை டயட்டில் சேர்க்கலாம் என்று யோசிப்பதற்கு பதிலாக, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்தாலே போதுமானது. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே நமக்கு ஏற்படும் பசியை குறைக்கும் என்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கில்லிங் ஸ்கூல் ஆஃப் குளோபல் பப்ளிக் ஹெல்த் என்ற கல்லூரியின் பேராசிரியர் மார்டின் கோஹீல்மியர்.

உணவு உண்பதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பவர்கள் குறைவாக சாப்பிடுவார்கள் என்று ஆராய்ச்சி முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பசியை குறைப்பதற்கு எதாவது ஒரு உணவு இருக்குமானால், உயிர் வாழ அதை நாம் கைவிட்டுதான் ஆக வேண்டும் என்று கூறுகிரார் கெரி ஃப்ராஸ்ட். ஆனால், நமக்கு அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு எல்லாம் வெகு காலத்திற்கு நீடிக்காது. எல்லாம் தற்காலிகமானதுதான். ஏனெனில், பசியை குறைக்க உணவுபொருட்கள் மூலம் உதவ முடியும்; அதனால் நாம் குறைவாக சாப்பிடலாம் என்று மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

"நாம் அதிகப்படியான உணவை உட்கொள்ள பழகியது சமீபத்தில்தான். மேற்கத்திய சமூகத்தில் இது நிகழ்ந்தது சமீப காலத்தில்தான் என்கிறார் ஃப்ராஸ்ட். பரிணாம வளர்ச்சி பயண காலத்தின் முழுக்க நாம் மிகக் குறைந்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தோம். ஆனால், நம் உளவியல் நிலையே நம்மை அதிக உணவு உட்கொள்ள பழக்கியது. "என்றார் ப்ராஸ்ட்.

"பசி தூண்டுதலை குறைக்க/ தடுக்க ஏதேனும் உணவுப் பொருள் இருந்தால், உயிர்வாழ நீங்கள் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்."

எந்த உணவும் பானமும் நம் பசியை நீண்ட காலத்திற்கு தடுக்க முடியாது என்பதற்கு மற்றொரு காரணம், நமது உடல்கள் ஒரு நிலையான எடை அளவை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கோல்மியர் கூறுகிறார்.

"உடல் எடையை மோசமாகப் பாதுகாக்கும் வழிமுறைகள் உள்ளன. பரிணாம வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் பார்த்தால், மனிதகுலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக பட்டினி இருந்திருக்கிறது. அதற்கு காரணம் பசி மனிதனை கொன்றுவிடும் என்பதால் அல்ல. மாறாக அது மனித உடலை பலவீனப்படுத்துகிறது. இதன் மூலம் மனித உடல் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்று கோல்மியர் விளக்கமளிக்கிறார்.

இது குறித்து கோல்மேயர் கூறுகையில், " நாம் எவ்வளவு உட்கொள்ளுகிறோம் என்பதைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகும் என்று குறிப்பிடுகிறார்.

"உடலை ஒரு பெரும் இயந்திரமாக பார்த்தால், வெளியில் இருந்து அதற்கு கிடைக்க வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன; நம் உடலுக்குத் போதுமான அளவு தண்ணீர், மேக்ரோ நியூட்ரியன்ட்கள் மற்றும் என்ன சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்." என்று அவர் அறிவுறுத்துகிறார்.

நம் உடலுக்குத் அன்றாடம் பல ஊட்டச்சத்துக்கள் தேவையாக உள்ளன. நமது உணவில் அது குறைவாக இருந்தால், நம் பசியைத் தூண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

"இது ஒரு முழுமையான அமைப்பு. நீங்கள் தொடர்ந்து அதை கவனித்து லூப் செய்து மீண்டும் கட்டமைக்க வேண்டும். உடலுக்கு என்ன தேவை, எந்தெந்த உணவுகளில் என்ன இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்ள முடியும்? பசியைத் தூண்ட நம் உடலில் மிக சக்திவாய்ந்த முக்கியமான அமைப்புகள் உள்ளன." என்று எச்சரிக்கிறார் கோல்மீயர்

நினைவாற்றலும் பசியைத் தூண்டும்

நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் நினைவாற்றல் ஆகியவைகளாலும் பசி தூண்டப்படுகிறது. எனவே, அதை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி, டயட்டில் சமச்சீரான உணவுகளைச் சேர்ப்பத்தான். உடலுக்குத் தேவையானவற்றை அன்றாடம் சாப்பிட்டால், கூடுதலாக உண்ண வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார், கோல்மீயர்.

நமது உளவியல் நிலைக்கும் பசி தூண்டுதலுக்கும் தொடர்பிருப்பதுதான் இங்குள்ள குறைப்பாடு. இது குறித்து பல தசாப்தங்களாக ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

1987- ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரையில், உணவைப் பார்ப்பதும், அதனை நுகர்வதன் மூலம், நம் மூளைக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது. அதாவது, அந்த உணவை ஜீரணிக்கத் தயாராவதற்கு உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது என்று விளக்குகின்றன ஆய்வுகள்.

உணவு நம்மை திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கும் போது அது பசியின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பசி என்பது நம்பிக்கைகள், எதிர்பார்ப்பு மற்றும் நினைவாற்றலால் இயக்கப்படுவதாக கார்னில் கூறுகிறார். பெரும்பாலும் நீங்கள் சாப்பிட்டதை எவ்வளவு நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறார் கார்னில்.

அதாவது, நாம் குறைவாக சாப்பிட்டோம் என்று நினைப்பது, நம்மை மேலும் இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். ஆனால், நாம் நிறைவாக சாப்பிட்டோம் என்ற உணர்வு நம்மை நிறைவடையச் செய்யும் என்று அவர் கூறுகிறார்.

ஒரு உணவை "ஃபில்லிங்" ("filling" ) என்று குறிப்பிடுவது, அதே உணவை "லைட் " ("light")என்று குறிப்பிடுவது இரண்டுக்குமான வேறுபாட்டை நமக்கு விளக்குகிறது ஆய்வு. அதாவது, ஃபில்லிங் என்று சொல்லப்படும் உணவுகளைச் சாப்பிடும் போது நமக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. ஆனால், அதே 'லைட்' என்று குறிப்பிடும்போது, நாம் குறைவாக சாப்பிட்டுவிட்டோம் என்று நினைத்து மீண்டும் சாப்பிட தூண்டுகிறது.

வார ஷாப்பிங் மூலம் வாங்கியவற்றில் நீண்ட காலத்திற்கு உங்கள் பசி உணர்வை நிரப்புவதாக உறுதியளிக்கும் உணவுகள் இருக்கலாம், ஆனால் உங்கள் உடலின் செயல்முறைகளுடன் ஒன்றிணைந்து செயல்பட ஒரே ஒரு வழி இருக்கிறதென்றால், அது சரிவிகித உணவை சாப்பிடுவதுதான். அதோடு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை தவறாமல் செய்ய வேண்டும்.

நாம் எப்போதும் இயற்கையான உணர்வுகளை ஏமாற்ற முடியாது. நீண்ட நேரம் பசியைத் தடுக்க முடியாது என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடுகளை ஈடுசெய்ய தேவையான அளவு ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடலாம். இதனால், அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை தடுக்க முயற்சிக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: