You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குவாண்டம் கணினி: முதல் முறை வாங்கிய பிரிட்டன், இது என்ன செய்யும்? 10 தகவல்கள்
- எழுதியவர், லிவ் மெக்மேஹன்
- பதவி, தொழில்நுட்ப குழு
பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் குவாண்டம் கணினியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. அப்பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஸ்டீஃபன் டில் இதனை "மைல்கல் தருணம்" என கூறியுள்ளார்.
பிரிட்டன் நிறுவனமான ஆர்க்கா கம்ப்யூட்டிங் (Orca Computing) இதனை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு துறையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"புரட்சிகரமான இந்த தொழில்நுட்பத்தின் புதிய பயன்பாடுகளை கண்டறிவோம்" என ஆர்க்கா கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் முர்ரே தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் குவாண்டம் கணினி என்ன என்பதையும் வழக்கமான கணினிகளிடமிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் பார்ப்போம்.
குவாண்டம் கணினி என்றால் என்ன?
- வழக்கமான கணினிகளால் தீர்க்க முடியாத கணக்கீடுகளை குவாண்டம் கணினிகளால் தீர்க்க முடியும் என்றும், மிக சிக்கலான கணக்கீடுகளை மிகவும் துரிதமாக முடிக்கும் திறன் பெற்றவை இவை என்றும், இந்த குவாண்டம் கணினியை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
- நாம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வழக்கமாக பயன்படுத்தும் கணினிகள், பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்ற பைனரி எண் மதிப்பை கொண்டுள்ள 'பிட்' எனப்படும் அலகின் வாயிலாக செயல்படுகின்றன.
- ஆனால், குவாண்டம் கணினிகள் க்யூபிட் என்ற அலகின் அடிப்படையில் செயல்படுகின்றன.
- இந்த க்யூபிட் அலகு என்பது 0 மற்றும் 1 இலக்கங்களின் சாத்தியமான சேர்க்கைகளை குறிக்கிறது. ஒரே நேரத்தில் பலநிலைகளில் இருக்கும் இந்த திறன் சூப்பர்பொசிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறை வாயிலாக, குவாண்டம் கணினிகள் பைனரி இலக்கங்களை இணைத்து, வழக்கமான கணினிகளால் செய்ய முடியாதவற்றை செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- குவாண்டம் கணினிகளின் சக்தியைப் பயன்படுத்த பல க்யூபிட்டுகள் ஒன்றாக இனைக்கப்பட வேண்டும். இந்த செயல்முறைக்கு என்டாங்கிள்மென்ட் என்று பெயர்.
- மேலும், ஒவ்வொரு க்யூபிட்டும் கூடுதலாக சேர்க்கப்படும்போதும் அதன் கணக்கீட்டு இரட்டிப்பாகும்.
- இதன்மூலம் குவாண்டம் கணினிகளால் வழக்கமான கணினிகள் மூலம் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத சிக்கல்கள், சில நிமிடங்களில் தீர்க்கப்படும் என, நிபுணர்களும் இயற்பியலாளர்களும் கூறுகின்றனர்.
- குவாண்டம் கணினி தொழில்நுட்பம் புரிந்துகொள்வதற்கு சிக்கலான ஒன்றாகும். லேப்டாப், செல்போன் மட்டுமல்ல, வியக்கவைக்கும் வேகத்தில் செயலாற்றும் சூப்பர் கம்ப்யூட்டர்களைவிட முற்றிலும் வேறுபட்ட வகையில் இவை செயல்படும் என, பிபிசியின் தொழில்நுட்ப ஆசிரியர் ஸோ கிளெய்ன்மேன் தெரிவித்துள்ளார்.
- காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்படுதல், புதிய மருந்துகளை உருவாக்குதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் குவாண்டம் கணினிகளை பயன்படுத்துவதுதான் அடிப்படையான திட்டமாகும்.
- ஆனால், குவாண்டம் கணினிகளால் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை என, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சசெக்ஸ் செண்டர் ஃபார் குவாண்டம் டெக்னாலஜிஸின் தலைவர் பேராசிரியர் வின்ஃப்ரைட் ஹென்சிங்கெர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்