குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? - உலகெங்கும் 75 நாடுகளில் பரவல்

Symptoms of monkeypox

பட மூலாதாரம், Getty Images

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது.

தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டம் ஜூலை 23ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், "75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன," என்று கூறினார். இந்த பாதிப்பால் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொலைதூர பகுதிகளில் குரங்கம்மை பாதிப்பு மிகவும் சாதாரணமானது. குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிகவும் அரிதானது.

இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு பெரும்பாலும் மிதமாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து விடுவார்கள் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

இந்தியாவில் மூவருக்கு பாதிப்பு

குரங்கம்மை பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் முதலாவதாக குரங்கம்மை பாதிப்பு, ஜூலை 14ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த அந்த நபருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, துபாயில் இருந்து கேரளத்துக்கு வந்த 31 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் கேரளாவுக்கு வந்த 35 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. மலப்புரத்தை பூர்விகமாகக் கொண்ட அவர், ஜூலை 6ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

தற்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா கூறினார்.

அண்டை மாநிலமான கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலும் குரங்கம்மை வைரஸ் பாதிப்புக்கான பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.

monkeypox virus

பட மூலாதாரம், Science Photo Library

காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.

14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.

தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.

குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: