You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரிய கிரகணம்: டிசம்பர் 4ம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? இந்தியாவிலிருந்து காண முடியுமா?
- எழுதியவர், ஷோபனா எம்.ஆர்
- பதவி, பிபிசி தமிழ்
விண்வெளி நிகழ்வுகள் பிரமிப்பை உருவாக்குபவை; வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணமும் அத்தகைய சிறப்புகளை கொண்டதாக உள்ளது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? எந்தெந்த நாடுகளில் இதை காணலாம்? விலங்குகளால் இதை உணர முடியுமா? என்ற கேள்விகளுடன் சென்னையிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் அறிவியல் அலுவலர் லெனினை பிபிசி தொடர்புகொண்டது.
"இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைக் காண முடியாது என்றாலும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் இணையதளத்தில் நேரடியாக காண முடியும்.
இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும்" என்கிறார் லெனின்.
சூரியன், நிலவு மற்றும் பூமி ஒரே நேர் கோட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) என்று அழைக்கப்படுகிறது. இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் மட்டுமே தெரியும்.
இதுவே, பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) என்பது சூரியன், நிலவு மற்றும் பூமி நேர்கோட்டில் இல்லாமல் இருக்கும். இந்த பகுதி சூரிய கிரகணம் தென் அரைக்கோளம் பகுதிகளில் காண முடியும்.
சூரிய கிரகணம் என்பது என்ன?
மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம்.
எந்தெந்த நாடுகளில் பார்க்கலாம்?
"இந்த சூரிய கிரகணம் தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென்பகுதியில் பகுதி சூரிய கிரகணமாக தெரியும். " என்கிறார் பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் செளந்தர ராஜபெருமாள்.
என்ன சிறப்பு?
"மேலும், நடக்கவிருக்கும் இந்த கிரகணத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இந்த கிரகணம் 'ரிவர்ஸ் போலார் சோலார்' (Reverse Polar Solar) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, பூமியை நிலவு மிகவும் வேகமாக மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், இந்த நிகழ்வின்போது, நிலவு கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலும். ", என்று தெரிவிக்கிறார் செளந்தர ராஜபெருமாள்.
விலங்குகளால் உணரமுடியுமா?
"இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் ஒரு நிமிடம் 54 நொடிகள் இருளை உருவாக்கும். இருள் ஏற்படுவதாலும், அப்படி ஏற்படும்போது நட்சத்திரங்களே தெரியும் என்பதால் விலங்குகளும் பறவைகளும் சற்றே குழம்பும். வெளிச்சம் இருக்கும் பகுதியை தேடி செல்லும்", என்று கூறுகிறார் லெனின்.
எப்படி பார்க்கலாம்?
"எந்த சூரிய கிரகணத்தையும் நாம் வெறும் கண்களால் பார்க்க கூடாது. இதுவே சந்திர கிரகணத்தை நாம் கண்களால் பார்க்கலாம். சூரிய கிரகணம் பொருத்தவரையில், அதற்குரிய ஆங்கிகரிக்கப்பட்ட ஃபில்டர்கள் பொருத்திய கண்ணாடிகள் வழியாகவே பார்க்க வேண்டும். அதுவும், வெகு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க வேண்டும். ஏனென்றால், சூரிய கிரகணத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், அதற்குரிய கண்ணாடி இருந்தாலும், நீண்ட நேரம் பார்க்க கூடாது", என்று அறிவுறுத்துகிறார் லெனின்.
பிற செய்திகள்:
- 'உயிர் மூச்சு உள்ளவரை இயக்கத்தைக் காப்பாற்றுவேன்': வி.கே. சசிகலா
- எதிர்காலத்தில் ஹார்ட் டிஸ்குகளுக்கு பதில் டி.என்.ஏ-வில் தரவுகளை சேமிக்க முடியுமா?
- ஒமிக்ரான் கொரோனா திரிபு இந்தியாவில் கண்டுபிடிப்பு: இருவருக்கு உறுதி
- மழையின் துயரம் வடியாத செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் - களத்தில் பிபிசி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொன்விழா: செல்வச் செழிப்பில் மிளிரும் பாலைவன நாட்டின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்