You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாசா விண்கலத்தில் உடைந்த கதவு: கீழே சிந்தும் சிறுகோள் துகள்கள்
பூமியிலிருந்து பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர நாசாவால் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த விண்கலம் அளவுக்கு அதிமான மாதிரிகளை எடுத்துவிட்டதால் மாதிரிகளில் சில கீழே விழுகின்றன.
இந்த ஒஸிரிஸ்-ரெக்ஸ் விண்கல திட்டத்திற்கு பின்னால் உள்ள அதிகாரிகள் இந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த வாரம் தொடக்கத்தில் பென்னு எனும் சிறுகோளில் தரை இறங்கி உள்ளது.
உள்ளே இருக்கும் கூர்மையான பாறை ஒன்றால் வெட்டப்பட்டு, இந்த விண்கலத்தில் உள்ள கொள்கலன் ஒன்றின் கதவில் விரிசல் விட்டுள்ளதாகவும், அதில் இருந்து மிக மிகக் குறைந்த அளவு மாதிரிகள் கீழே சிந்துவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
அந்த விண்கலத்தை பாதுகாப்பாக தரை இறக்க நாசா முயற்சிக்கிறது.
400 கிராம் மாதிரிகளை அந்த விண்கலம் சேகரித்துள்ளதாக இந்த திட்டத்தின் தலைவர் டண்டே லெளரட்டா தெரிவித்துள்ளார்.
இதனைவிட இந்த விண்கலம் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், "என்னுடைய பெரும் கவலை சேகரித்த துகள்கள் வெளியே சிந்துவதுதான். நாங்கள் எங்கள் சொந்த வெற்றியால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்," என கூறி உள்ளார்.
இது குறித்து பேசி உள்ள நாசா அறிவியல் பிரிவின் துணை நிர்வாகி தாமஸ், "துகள்கள் மேலும் சிந்தாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்," என தெரிவித்துள்ளார்.
இந்த ஒஸிரிஸ் -ரெக்ஸ் விண்கலம் பூமியில் இருந்து 320 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னு எனும் அந்த சிறுகோளில் செவ்வாய்க்கிழமை தரை இறங்கியது.
2023ஆம் ஆண்டு இந்த விண்கலம் பூமி திரும்பியவுடன் அது எடுத்துவரும் மாதிரிகளை ஆய்வு செய்தால் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூரிய குடும்பம் எப்படி உருவாகியது என்பதை கண்டுபிடிக்க உதவலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
சூரிய குடும்பத்தின் உருவாக்கத்தின் எச்சங்களை இந்த சிறுகோள் கொண்டிருக்கலாம்.
2016ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த விண்கலம், அடுத்தாண்டு மார்ச் மாதம் புவியை நோக்கி திரும்பும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :