You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் "நடக்கும்" மீன் - ஆராய்ச்சியாளர்கள் வெளியிடும் வியப்பூட்டும் தகவல்கள்
ஆஸ்திரேலியாவில் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடலடிப் பவளப்பாறை அமைந்த வடக்குக் கடல் பகுதியில், இதுவரை கண்டிராத "நடக்கும்" மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மத்திய பசிஃபிக் பகுதியில் காணப்படும் இந்த வகை மீன், ரினோபியஸ் அக்ரிலோபா எனப்படும் தேள் மீன் வகையை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கத்துக்கு மாறான இருப்பிடம் அல்லாத பிற கடல்பகுதியில் இந்த வகை மீன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அதன் மார்புப்பகுதியோடு ஒட்டி இருக்கும் துடுப்புகளால் கடலுக்கு அடியில் உள்ள தரையில் நடப்பது போல் காட்சியளிக்கும் என்பதால், இது "நடக்கும் மீன்" என அழைக்கப்படுகிறது.
கடலுக்கடியில் டிரோன்
ஸ்மிட் ஓஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்ட RV Falkor என்ற கப்பல் மூலமாகவே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் இதுவரை ஆய்வு செய்யடாத இடங்களை படம்பிடிக்கவும், மாதிரிகளை சேகரிக்கவும் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு டிரோன் ஒன்று அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வுக்குழுவில், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிவற்றின் ஆய்வாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தின் ராபின் பீமேன் கூறுகையில், நடக்கும் மீனை அக்கடல் பகுதியில் கண்டுபிடித்தது தங்கள் குழுவிற்கு மிகுந்த வியப்பளித்ததாக தெரிவித்தார்.
"பார்ப்பதற்கு அதிசயமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. அழகான சிவப்பு நிறத்தில் இருந்த அந்த மீன், தனது துடுப்புகளை கைகள் போல பயன்படுத்தி நடந்து சென்றது" என்று அவர் குறிப்பிட்டார்.
வேறு சில புதிய வகையான கறுப்பு பவளப்பாறைகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், கிரேட் பேரியர் ரீஃப் கடல் பகுதியில் அடியில் சுமார் 40ல் இருந்து 50 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளின் மாதிரிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு, கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்கள் குறித்த ஆழமான புரிதலுக்கு உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பிற செய்திகள்:
- ரஷ்யாவுக்கு விரைவில் திரும்புகிறார் நவால்னி - அதிபர் புதினை சந்திக்க திட்டமா?
- "கிழக்கு லடாக் எல்ஏசி மோதலில் சீன ராணுவத்துக்கு பலத்த சேதம்" - ராஜ்நாத் சிங்
- இலங்கை: திலீபனுக்கு தடையை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட சிவாஜிலிங்கம் கைது
- சசிகலா எப்போது விடுதலையாவார்? சிறை தண்டனை நாட்கள் எவ்வாறு கணக்கிடப்படும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: