ஜெயலலிதா தோழி சசிகலா விடுதலை எப்போது? ரூ. 10 கோடி அபராதத்தொகை செலுத்த அனுமதி கோரி மனு

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத்தொகையை செலுத்த அனுமதிக்கக் கோரி பெங்களூரு சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர்கள் ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் வி.என். சுகாதரன் சார்பில் அவருக்கான அபராத்தொகை நீதிமன்றத்தில் ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டது.

இந்த நிலையில், வி.கே. சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆகலாம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட தகவல் மூலம் தெரிய வந்தது.

ஆனால், அவர் செப்டம்பர் மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகளும் உள்ளன என்கிறார் அவரது வழக்கறிஞர்.

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார் வி.கே. சசிகலா.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இவருடைய உறவினர்களான ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோரும் இதே சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்வுசெய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கான தண்டனையை உறுதி செய்ததால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. இதற்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தலைமையில் அதிமுக இயங்கி வந்தது.

சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்திருந்தார். ஆனால், சசிகலா சிறை சென்ற சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் தரப்பினரை ஒதுக்கிவிட்டு எடப்பாடி கே. பழனிச்சாமி செயல்பட ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நிலையில், வி.கே. சசிகலாவின் விடுதலை, கூடுதலான அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. அவர் சிறையிலிருந்து எப்போது விடுதலையாவார் என்பது அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெங்களூரப மத்திய சிறைத் துறையிடம் சசிகலாவின் விடுதலை தொடர்பாக கேள்விகளை அனுப்பி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றுள்ளார்.

அதன்படி, "வி.கே. சசிகலா விடுதலை செய்யப்படும் தினம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியாக இருக்கும். ஆனால், அதற்குள் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை அவர் செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அவர் 2022 பிப்ரவரி 27ஆம் தேதி விடுவிக்கப்படுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அவர் சிறை விடுப்பு எடுத்தால், விடுதலை பெறும் தேதி மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனையை கணக்கிட்டது எப்படி?

சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சிறைக்குச் சென்றார். ஆகவே நான்காண்டு சிறை தண்டனையின் முடிவில் அவர் 14.02.2021ல் விடுதலையாக வேண்டும்.

ஆனால், இந்த சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டு, 1997ல் சில நாட்களும் பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கல் டி குன்ஹா விதித்த தண்டனையை அடுத்து 2014ல் சில நாட்களும் அவர் சிறையில் இருந்தார். இப்படி மொத்தம் 35 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

தனது தண்டனை காலத்தில் இரண்டு முறை அவர் சிறை விடுப்பு எடுத்திருக்கிறார். மொத்தமாக 17 நாட்கள் அவர் சிறை விடுப்பில் வெளியில் இருந்துள்ளார். ஏற்கனவே தண்டனை அனுபவித்த 35 நாட்களில் இந்த 17 நாட்களைக் கழித்துவிட்டால், அவர் 2021 ஜனவரி 27ல் விடுதலை அடைவார் என கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு

இருந்தபோதும், வி.கே. சசிகலா இந்த மாத இறுதியிலேயே விடுதலையாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன்.

"வி.கே. சசிகலாவின் விடுதலை தேதி 2021 ஜனவரி 27 என்பது சரிதான். ஆனால், நன்னடத்தைக்கு என அளிக்கப்படும் சலுகைக் காலம் இதில் கணக்கிடப்படவில்லை.

கர்நாடகா சிறை விதிகளின்படி ஒரு கைதிக்கு மாதம் மூன்று நாட்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் சிறை சென்ற பிப்ரவரி மாதம், அவர் சிறை விடுப்பு எடுத்த மாதங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

ஆகவே அவர் சலுகை பெறக்கூடிய மாதங்கள் என்று கணக்கிட்டால் 43 மாதங்கள் இருக்கின்றன. இந்த 43 மாதங்களுக்கு 129 நாட்கள் தண்டனை குறைப்பு கிடைக்கும். அதன்படி சசிகலா இந்த ஆண்டு செப்டம்பர் 27ல் இருந்து அக்டோபர் ஒன்றாம் தேதிக்குள் விடுதலை ஆவார்" என்கிறார் அவர்.

ஆனால், நன்னடத்தைக்கான இந்த சலுகை வி.கே. சசிகலாவுக்கு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

"இந்த நன்னடத்தை விதிகளை ஒரு கைதி உரிமையாகக் கோரமுடியாது என்பது உண்மைதான். ஆனால், இது ஒன்றும் சிறப்புச் சலுகை அல்ல. சிறப்புச் சலுகை என்றால் அதனை சிறையின் அதிகாரிகள் மனது வைத்தால்தான் பெற முடியும். ஆனால், இது சிறை விதிகளின்படி இயல்பாகவே வழங்கக்கூடிய சலுகை. இதுவரை கர்நாடகா சிறைகளில் எல்லோருக்குமே இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. வி.கே. சசிகலாவுக்கு இந்தச் சலுகை வழங்கப்படாவிட்டால், கர்நாடகா சிறை வரலாற்றில் அதுதான் முதன்முறையாக இருக்கும்" என்கிறார் ராஜா செந்தூர்பாண்டியன்.

ஆர்.டி.ஐயில் கேள்வி கேட்டவவர், சசிகலாவுக்கு நன்னடத்தை சலுகை வழங்கப்படுமா, அவை எத்தனை நாட்கள்? என்ற கேள்வியை எழுப்பாததால், அது குறித்து கர்நாடகா சிறைத் துறை பதிலளிக்கவில்லை என்றும் சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்தத் தொகை செலுத்தப்பட்டுவிடும் என்றும் ராஜா செந்தூர் பாண்டியன் பிபிசியிடம் தெரிவித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு என்பது மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு. 1991-1996 காலகட்டத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது தன் வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் பிரதான குற்றவாளிக்கு துணையாக இருந்ததாக வி.கே. சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட ஜெ. ஜெயலலிதா, வி.கே. சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஜெயலலிதா அப்போது வகித்து வந்த முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் தீர்ப்பளித்த கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, வழக்கிலிருந்து நால்வரையும் விடுவித்தார்.

இதற்குப் பிறகு கர்நாடகா அரசு இது தொடர்பாக மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்குள் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், மற்ற மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: