புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு

    • எழுதியவர், மேட் மெக்கிராத்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது.

புதியதாக நடப்பட்டு வரும் காடுகள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொரு ஆய்வு கூறகிறது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, மரம் நடுவது என்பது மட்டுமே தீர்வாகாது என்பதையே இந்த இரு ஆய்வறிக்கைகளும் பொதுவாக கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, மிகவும் மலிவான மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாக செடிகள் நட்டு மரம் வளர்ப்பது பார்க்கப்பட்டது.

இதற்கு முன்பு வெளியான ஆய்வுகளில், கரியமில வாயுவை உள்ளிழுத்து தன்னுள் தக்கவைத்துக்கொள்வதற்கான திறனை மரங்கள் கொண்டுள்ளன என்று கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல நாடுகள் பருவநிலை மாற்றத்தை கையாள, அதிக அளவில் மரம் நடுவதை ஒரு முக்கிய திட்டமாக கையில் எடுத்தன.

ஐக்கிய ராஜ்ஜியத்தில், கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், எவ்வளவு அதிகமான மரங்களை நடுவதாக வாக்குறுதி அளித்தனர் என்பதும் முக்கிய விஷயமாக கவனிக்கப்பட்டது.

அமெரிக்காவில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, டிரில்லியன் ட்ரீஸ் என ஒரு திட்டத்தை ஆதரித்தார்.

இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் சட்டம்கூட, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 'பான் சாலன்ஜ்' என்ற திட்டமும் மிகவும் பிரபலமானது. இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள், சீரழிக்கப்பட்ட மற்றும் காடழிப்பு செய்யப்பட்ட 350 மில்லியன் எக்டர் நிலப்பரப்பில், புதியதாக செடிகள் நட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 40 நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளன.

ஆனால், இவ்வாறு புதிய காடுகளை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பான் சாலன்ஜ் திட்டத்தின்கீழ், உலக நாடுகள் கொடுத்துள்ள வாக்குறுதியின் படி, அவர்கள் நடப்போகும் செடிகளில் 80 சதவிகிதம், ஒற்றை வளர்ப்பு தோட்டங்களாகவோ அல்லது, சில பழங்கள், ரப்பர் உள்ளிட்டவற்றை அளிக்கும் அளவான வகைகள் கொண்ட தோட்டமாகவோ இருக்கின்றன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

புதிய ஆய்வை எழுதியுள்ளவர்கள், அதிக மரங்களை நடுவதற்காக தனியார் நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு நிதிச்சலுகை வழங்கப்பட்டுள்ளன என்பதை கூர்ந்து கவனித்துள்ளார்கள்.

இந்த சலுகைகள், புவியில் அதிக அளவிலான செடிகள் வளர்க்கப்பட முக்கிய விஷயமாக பார்க்கப்படுகின்றன.

அவர்கள் சிலியை ஒரு உதாரணமாக பார்க்கின்றனர். அந்த நாட்டில், 1974 முதல் 2012 ஆம் ஆண்டு வரை, மரம் நடுவதற்காக மானியம் அளிக்கும் ஆணை உள்ளது. உலகளவில் காட்டை உருவாக்கும் திட்டத்திற்கு இது உந்துசக்தியாகப் பார்க்கப்பட்டது.

புதிய காடுகளை உருவாக்க செடிகள் நடப்பட்டால், அதற்கு அந்நாட்டில் 75% மானியம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே இருக்கும் காடுகளுக்கு இது பொருந்தாது என்றாலும், பட்ஜெட் தயாரிப்பில் இருந்த வரம்புகள் மற்றும் சட்டங்களை அமலாக்குவதில் இருந்த கவனக்குறைவுகளால், சில நில உரிமையாளர்கள், இயற்கையாக அமைந்திருந்த காடுகளை அழித்துவிட்டு, லாபம் அளிக்கும் மரங்களை புதியதாக அந்த இடங்களில் நட்டனர்.

இந்த மானியத்திட்டத்தால், மரங்களால் சூழப்பட்டுள்ள இடங்களின் அளவு விரிவடைந்துள்ளது என்னும்போதிலும், இயற்கையான காட்டின் அளவு குறைந்துள்ளது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

சிலியில் இருக்கும் இயற்கை காடுகளில் பல்லுயிர் தன்மை மிகவும் அதிகமாக இருந்து, அதிகமான கரியமிலத்தை தன்னுள் தக்கவைத்துக்கொள்ளும் என்னும் போதிலும், இந்த புதிய மானிய திட்டத்தில்கீழ் நடப்பட்டு வளர்ந்த மரங்களால் அவ்வாறு கரியமிலத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனதும், அதன்மூலம், பல்லுயிர் தன்மை குறைவதற்கான சூழலை அது தூண்டுதலாக அமைந்துவிட்டது என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

"புதிய மரங்களை வளர்க்க மானியம் அளிக்கும் திட்டங்கள் முறையே கட்டமைக்கப்படாமலோ, சரியாக அமலாக்கப்படாமலோ இருந்தால், அது மக்களின் பணத்தை அதிகமாக வீணாக்குவதோடு, அதிக கரியமிலத்தை வெளியிடவும், பல்லுயிர் சூழலை இழக்கும் ஆபத்தையும் உருவாக்கி விடுகிறது" என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் எரிக் லாம்பென். இவர் ஸ்டான்ஃபோர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

"இந்த திட்டங்கள் எதை குறிக்கோளாக கொண்டுள்ளதோ, அதற்கு எதிர்மறையான விளைவயே உருவாக்கிவிடும்."

இரண்டாவதாக நடத்தப்பட்ட ஆய்வு, புதியதாக உருவாகியுள்ள இந்த காடுகள் எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுத்துக்கொள்கின்றன என்பதை கணக்கிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட அளவுகோளை வைத்தே, இதுவரை நடந்துள்ள அனைத்து ஆய்வுகளும், மரங்கள் எவ்வளவு கரியமில வாயுவை காற்றிலிருந்து இழுத்துக் கொள்கின்றன என்று கணக்கிடுகின்றன.

உள்ளூர் சூழலைப் பொருத்தே இந்த அளவுகோல் இருக்கும் என்று கணக்கிடும் ஆய்வாளர்கள், வடக்கு சீனாவின் சூழலை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். காரணம், கோபி பாலைவனப் பகுதியில் ஏற்படும் புழுதியை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும் அந்த அரசு முன்னெடுத்த மிகப்பெரிய காடுகளை உருவாக்கும் பணிகளுமே ஆகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளிலிருந்து 11,000 மண் மாதிரிகளை எடுத்த ஆய்வாளர்கள், கரியமிலத்தன்மை குறைவாக உள்ள மண்ணில் நடப்படும் செடிகள், மரங்களாக மாறும்போது, அவை இயற்கையான கரியமிலத்தன்மையை அதிகப்படுத்தவே செய்வதை கண்டறிந்துள்ளனர்.

ஆனால், ஏற்கனவே கரியமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த மரங்கள் வளரும்போது, அதன் அளவை மரங்கள் குறைக்கின்றன.

புதிய செடிகளை நடுவதன்மூலம், எவ்வளவு இயற்கையான கரியமில அளவை சரிசெய்துவிட முடியும் என்று முன்பு நாம் கொண்டிருந்த அனுமானங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டவையாக தெரிவதாக இந்த ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

"மீண்டும் காடுகளை உருவாக்குவது மட்டும் ஒற்றைச்செயல் அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இதல் பல முக்கிய சிக்கல்களை கவனிக்க வேண்டும், பல்வேறு பகுதிகளை சரியாக கையாள வேண்டும், மீண்டும் காடுகளை உருவாக்குவது மட்டுமே, பருவநிலை மாற்றத்தால் வரும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வாக இருக்காது." என்கிறார், இந்த ஆய்வை முன்னெடுத்து செல்லும், கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் அன்பிங் சென்.

இந்த இரு ஆய்வுகளும், Nature Sustainibility என்ற பக்கத்தில் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: