கொரோனா வைரஸ் ஏ.சி மூலம் பரவுமா? வீட்டில் பயன்படுத்தப்படும் ஏ.சி மூலம் ஆபத்து ஏற்படுமா?

கொரோனா வைரஸோடு சேர்ந்து கோடை காலமும் உச்சகட்டத்தில் இருந்து வருவதால் வீடுகளில் ஏ.சி பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆனால் ஏ.சி இயந்திரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதால் 'சென்ட்ரலைஸ்ட் ஏர் கண்டிஷனிங்' வசதியை வர்த்தக நிறுவனங்களில் இயக்கக் கூடாது என ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் இந்திய அரசு தெரிவித்திருந்தது.

'சென்ட்ரலைஸ்ட் ஏர் கண்டிஷனிங்' என்பது மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் வசதி. ஒரு கட்டத்தின் ஒவ்வொரு தளத்துக்கும், அறைக்கு அல்லது பகுதிக்கு என ஒவ்வொரு தனி குளிரூட்டல் இயந்திரம் இருக்காது.

ஒட்டுமொத்த கட்டடத்துக்கும் குளிரூட்டல் வசதிக்கு என மையப்படுத்தப்பட்ட இயந்திரங்களின் அமைப்பு இருக்கும்; இவற்றில் அனைத்து குளிரூட்டல் இயந்திரகளுக்கும் ஒரே கட்டுப்பாடுதான். அதாவது ஒவ்வொரு கருவிக்கும் தனியாக வெப்பநிலையை குறைக்கவோ, கூட்டவோ முடியாது.

மையப்படுத்தப்பட்ட குளிரூட்டல் வசதியைப் பயன்படுத்தக்கூடாது என்கிறது இந்திய அரசு.

இந்த அறிவிப்பு வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும்தானா, வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சிகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவாதா என மக்களிடையே தொடர்ந்து பல சந்தேகங்கள் இருந்து வருகின்றன.

தொடர்பில் இல்லாதவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று

கடந்த ஜனவரி மாதம் சீனாவின் குவாங்சு நகரில் உள்ள உணவகத்திற்கு வுஹான் நகரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உணவருந்துவதற்காக வந்தது. இந்த குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது பின்னர்தான் தெரிய வந்தது.

அந்தக் குடும்பம் அங்கு வந்து சென்ற சில நாட்களுக்கு பிறகு, அதே உணவகத்தில் உணவருந்திய 3 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மூன்று குடும்பங்களுக்கு இடையே எந்த ஒரு தொடர்பும் இருக்கவில்லை.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அந்த உணவகத்தின் குளிர்சாதனப் பெட்டிகளின் வழியாக மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்துதான் ஏ.சிக்கும் கொரோனா பரவுவதற்கும் இருக்கும் தொடர்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழத் தொடங்கின.

ஏ.சி மூலம் கொரோனா பரவுமா?

"ஜலதோஷம், ஃப்ளூ காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களை போல, கொரோனா வைரஸும் காற்று மூலம் பரவாது. காற்றிலும் மிதக்காது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, காற்றில் சில நிமிடங்கள் இருக்கும் அந்த வைரஸ் பின்னர் தரையில் விழுந்து விடும்," என மும்பை ஐஐடியின் தொற்று நோயியல் நிபுணரான சம்புதா செளத்ரி 'தி பிரிண்ட்' எனும் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஆனால் ஷாப்பிங் மால்கள் போன்ற சென்ட்ரல் ஏர் கண்டிஷனிங் வசதி செய்யப்பட்டிருக்கும் இடங்களில் பலதரப்பட்ட மக்கள் வந்து செல்வார்கள் என்பதால், அங்கு ஏ.சி வழியாக கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் எச்சரிக்கிறார்.

ஏனெனில் செண்ட்ரல் ஏர் கண்டிஷனிங் வசதி செய்யப்பட்டிருக்கும் இடங்களில், பொதுவாக ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால், வெளிக்காற்று உள்ளே வருவதற்கான வாய்ப்பும், உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு. ஒருவேளை ஏ.சிக்குள் வைரஸ் துகள் உள்ளிழுக்கப்படும் பட்சத்தில், கிருமித் தொற்றுடைய அந்த ஏ.சி காற்றை அந்த இடத்திலிருக்கும் அனைவரும் மீண்டும் மீண்டும் சுவாசிக்க வேண்டி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் நேரிடையாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவுவதை விட, ஏ.சி மூலம் தொற்று பரவும் எண்ணிக்கை மிக மிகக் குறைவுதான் என சம்புதா கூறுகிறார்.

வீட்டில் பயன்படுத்தப்படும் ஏ.சி மூலம் ஆபத்து ஏற்படுமா?

``கொரோனா வைரஸ் காற்றில் அதிக நேரம் தங்கியிருக்காது என்பதால், உங்கள் வீட்டில் யாரும் அந்த வைரஸால் பாதிக்கப்படாத பட்சத்தில், வீட்டில் இருக்கும் ஏ.சிகளால் தொற்று பரவ வாய்ப்பில்லை. எனவே அது குறித்து பயப்படத் தேவையில்லை,`` என்கிறார் சம்புதா செளத்ரி.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் மற்றும் அந்த வைரஸால் பாதிக்கபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏ.சி உள்ள அறைகளில் தனிமைப்படுத்தாமல் நல்ல காற்றோட்டம் கொண்ட அறைகளில் தனிமைப்படுத்துவது நல்லது எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.

கார் ஏ.சி-கள் பாதுகாப்பானவையா?

"குடும்ப உறுப்பினர்களுடன் காரில் பயணிக்கும்போது ஏ.சி பயன்படுத்துவதால் பிரச்சனையில்லை. ஆனால் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீண்ட கார் பயணங்களை தவிர்க்கலாம்," என அப்போலோ மருத்துவமனையின் புற்றுநோயியல் மருத்துவர் டோடுல் மொண்டல் தெரிவிக்கிறார்.

``ஒருவேளை நீங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுடன் கார் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தால், ஏ.சி பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்," எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதவிர இந்த கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதன கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து Indian Society of Heating Refrigerating and Air Conditioner Engineers என்ற அமைப்பின் பரிந்துரைகளை ஆராய்ந்து இந்திய அரசு சில வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.

வீட்டு ஏ.சிகளுக்கான சரியான வெப்பநிலை எது?

அரசு வழிகாட்டுதல்களில், 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், ஈரப்பதம் அதாவது

ஈரப்பத (Humidity) அளவை 40 முதல் 70 சதவிகித அளவும் வைத்துக் கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏ.சி பொறுத்தப்பட்ட அறைகளில் நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும் எனவும் அறையின் ஜன்னலில் சிறிதளவு திறந்து வைப்பது நல்லது எனவும் அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசிக்கு அருகே எக்ஸாஸ்ட் ஃபேன் பொறுத்தப்பட்டிருந்தால், அதனை இயக்கத்திலேயே வைப்பது நல்லது.

ஏர் கூலர்கள்

ஏர் கூலர்கள் பயன்படுத்தும் போது, வெளிக்காற்று அறைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அறையின் ஜன்னல்களை சற்று திறந்து வைத்துக் கொள்வது நல்லது. அதே போல ஏர் கூலர்களில் உள்ள காற்று சுத்தகரிப்பான்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

பெரும்பாலான உள்ளூர் தயாரிப்பு ஏர் கூலர்களில் இந்த சுத்தகரிப்பான்கள் இருக்காது என்பதால் அதை தனிப்பட்ட முறையில் பொருத்திக் கொள்வது நல்லது என அரசு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஏ.சியால் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம்மும் இது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும் அதற்கான சாத்தியக்கூறு இருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிப்பதால், ஏ.சி தொடர்பாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: