You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான்-2ன் கருவி நிலவின் வளிமண்டலத்தில் புதிய வாயுவைக் கண்டறிந்தது
நிலவின் வளிமண்டலத்தில் 'ஆர்கான்' என்ற வாயுவின் சமதானியை சந்திரயான்-2இன் உட்கருவி ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்தத் தகவலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தற்போது நிலவில் கண்டுபிடிக்கட்டுள்ள ஆர்கான்-40 எனப்படுவது ஆர்கான் வாயுவின் சமதானியாகும்.
ஒரு தனிமத்தின் அணுக்கருக்களில் ஒரேயளவு எண்ணிக்கையான புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையில் நியூட்ரான்களையும் கொண்டிருந்தால் அது அந்தக் குறிப்பிட்ட தனிமத்தின் சமதானி ஆகும்.
நிலவை சுற்றியுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை 'நிலவின் புறவெளி மண்டலம்' (lunar exosphere) என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.
இந்த காற்று மண்டலம் மிகவும் மென்மையானது என்பதால் மிக மிக அரிதாகவே வாயு அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன.
பூமியின் சராசரி கடல் மட்டம் அருகே உள்ள காற்று மண்டலத்தின் ஒரு கன சென்டிமீட்டர் காற்றில் சுமார் ஒரு லட்சம் கோடி - கோடி (10க்குப் பின் 18 பூஜ்ஜியங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்) அணுக்கள் இருக்கும். ஆனால் நிலவின் புற வளிமண்டலத்தின் ஒரு கன சென்டிமீட்டர் காற்றில் பத்தாயிரம் முதல் பத்து லட்சம் அணுக்களே இருக்கும்.
நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் Chandra's Atmospheric Composition Explorer-2 (CHACE-2) எனப்படும் சேஸ்-2 என்பது ஒரு நிறமாலை மானியை (spectrometer) உள்ளடக்கியது.
இது நிலவின் புற வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களை கண்டறியும் திறனுடையது.
ஆர்கான்-40இன் அடர்த்தியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் உண்டாகும் மாற்றங்களை வைத்து சேஸ்-2 அதன் இருப்பைக் கண்டறிந்தது.
நிலவின் இரவு நேர வெப்பத்தில் திரவமாக ஆர்கான்-40, பகல் பொழுது தொடங்கும்போது மீண்டும் வாயுவாக புற வளிமண்டலத்தில் வெளியிடப்படும். இந்த மாறுதல்களே ஆர்கான்-40 இருப்பதை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்