You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.
இந்தப் பயணத்தின் சிறப்பு
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும்.
இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.
2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது.
150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.
சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும்?
நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது.
உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும்.
ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.
நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்