You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் உடலில் எங்கு கொழுப்பு இருந்தால் ஆபத்து?
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சரியான அளவு உடல் எடையை கொண்டிருந்தும் பக்கவாதம் மாறும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தாக்கக்கூடிய பெண்கள் பெரும்பாலும் கால்களைவிட, வயிற்றில் அதிக கொழுப்பை கொண்டவர்களாக உள்ளனர் என்று 'யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' எனும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தொப்பையை கொண்ட பெண்களுக்கும், பக்கவாதம் அல்லது இதயப் பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு நடத்தப்பட்ட விதம்
சரியான உடல் எடை, அதாவது 18 முதல் 25க்கு உட்பட்ட உடல் நிறை குறியீட்டு எண் கொண்ட 18 வயதுக்கு அதிகமான 2,600 பெண்களின் உடல் நலன் இந்த ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டது.
1990களின் மத்திய பகுதியில், 'வுமன் ஹெல்த் இனிஷியேடிவ்' என்ற பெயரில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் கொழுப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் முடிவில், இடுப்பு மற்றும் தொடையில் கொழுப்பு கொண்ட பெண்களைவிட, தொப்பை கொண்ட பெண்கள் அதிகளவில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
நடுத்தர வயது பெண்கள்
உள்ளுறுப்பு கொழுப்பு எனப்படும் வயிற்று பகுதியை சுற்றி சேகரமாகும் கொழுப்பு, இரண்டாம் வகை நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வளர்சிதை மாற்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகும்.
கால் பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருப்பதற்கான காரணம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை என்றும், அதே சமயத்தில் இது உடலில் வேறு எங்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
30 வயதிற்கு மேல் பெண்களின் வாழ்க்கைப்போக்கில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றமே வயிற்றுப்பகுதியில் கொழுப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் பெண்களின் ஒட்டுமொத்த உடல் எடையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாங்கள் மென்மேலும் துல்லியமாக அளவீடுகளை மையாக கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டதாக கூறுகிறார் நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் சீ.
"எங்களது ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களும் சராசரியான உடல் எடையை கொண்டவர்கள். எனவே, சராசரியான உடல் எடையை கொண்டிருந்தாலும், வயிறு அல்லது கால் உள்ளிட்ட எந்த பகுதியில் அதிக கொழுப்பு உள்ளது என்பது பொறுத்தே அவரது உடல்நிலை அமைகிறது," என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.
தீர்வு என்ன?
கால் பகுதியில் உள்ள கொழுப்பைவிட, வற்றுப் பகுதியிலுள்ள கொழுப்பை குறைப்பதற்கு பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேராசிரியர் சீ கூறுகிறார்.
"வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை இடமாற்றம் செய்வதற்கு உதவும் குறிப்பிட்ட உணவுமுறை இருக்கிறதா என்பதில் இன்னும் தெளிவில்லை. இதற்கான பதிலை நாங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கும் வரை, பெண்கள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்