You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்வதற்கான சாத்தியமான ஆதாரங்களை கண்டறிந்திருந்தது. இந்நிலையில், முதல் முறையாக தொடர்ந்து தண்ணீர் பாய்வதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.
ஏரிப் படுகை போன்ற நீர் ஆதாரங்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் முன்னொரு காலத்தில் இருந்தது என்று நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டறிந்திருந்தது.
இருப்பினும், கிரகத்தின் காலநிலை அதன் மெல்லிய வளிமண்டலத்தின் காரணமாக குளிர்ந்து விட்டதால், நீரின் பெரும்பகுதி பனிக்கட்டியாக மாறிவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவியின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
"இது அநேகமாக மிகப்பெரிய ஏரி அல்ல" என்று ஆய்வு நடத்திய இத்தாலிய தேசிய கல்வி நிறுவனத்தின் ஆஸ்ட்ரோஃபிக்ஸ் துறையின் பேராசிரியர் ராபர்டோ ஓரோஸி கூறுகிறார்.
தண்ணீரின் அடுக்கு எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை ஆராய்ந்தறிய முடியவில்லை. ஆனால், ஆராய்ச்சிக் குழுவினர் அது குறைந்தது ஒரு மீட்டர் ஆழம் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
"இது உண்மையிலேயே தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் என்ற தகுதியை கொண்டுள்ளது. இது ஒரு ஏரிதான். பூமியில் பனிப்பாறைகள் உருகுவதால் பாறைக்கும், பனிக்கட்டிக்கும் இடையேயுள்ள இடைவெளியில் உருவாகும் அமைப்பு அல்ல" என்று கூறுகிறார் பேராசிரியர் ஓரோஸி.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :