"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?" - தெரிந்துகொள்வது எப்படி?

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - "உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்"

பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும் பகிர உள்ளோம். அந்த வகையில் இந்த வாரம், பல்வேறு இணையதளத்திலுள்ள உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டால் அதை அறிந்துகொள்ள உதவும் ஒரு இணையதளம் குறித்து....

"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டவுடன் தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்"

பட மூலாதாரம், iLexx

தனிநபர் தகவல் திருட்டு ஒருவரின் வாழ்க்கையையே பொருளாதார ரீதியாகவும், சமூகத்திலுள்ள மதிப்பு ரீதியாகவும் தலைகீழாக புரட்டிப்போடக்கூடியது. செயலிகள் முதல் பலரும் பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் சமூக இணையதளங்கள் வரை அனைத்தும் ஹேக்கிங் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

நாம் ஒரு சில முறையே பயன்படுத்திய இணையதளங்களுக்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் மின்னஞ்சல், பயனர் பெயர், கடவுச் சொல்லை கொடுத்திருப்போம். எனவே, தினசரி பயன்படுத்தாத அல்லது அறிமுகம் இல்லாத இணையதளங்கள் ஹேக் செய்தால் உங்களது முக்கிய தகவல்கள் பொதுவெளியில் வெளியாகி, அதே பயனர் பெயர்/ கடவுச்சொல்லை கொண்டு உருவாக்கப்பட்ட மற்ற இணையதளங்களில் தொடங்கிய கணக்குகளும் பறிபோக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், உங்களது மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட கணக்குள்ள இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டால் அல்லது எதிர்காலத்தில் ஹேக் செய்யப்பட்டால் அதுகுறித்த தகவல்களை வழங்கும் https://haveibeenpwned.com/ என்ற இணையதளம்.

"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டவுடன் தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்"

பட மூலாதாரம், haveibeenpwned

மேற்குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று, உங்களது மின்னஞ்சல் முகவரியை அளித்தால், அதை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணையதள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரங்களையும் அளிக்கும். இந்த தளம் புகுபதிகை எதையும் கோராது என்பதுடன், எதிர்காலத்தில் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் எச்சரிக்கை விடுப்பதற்கான வசதியும் இந்த தளத்தில் உள்ளது.

Presentational grey line

உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர்.

பறக்கும் கார்களை தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

சித்தரிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிக்கப்பட்டது)

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் தனது பறக்கும் கார் திட்டத்தை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சாலைப்போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்துவதாகவும், நேர விரயம் செய்வதாகவும் வேகமாக மாறிவருவதால் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸ், ஹெலிகாப்டரை போன்று செங்குத்தாக மேலெழும்பி, தரையிறங்கும் (EVTOL) மற்றும் அதிகபட்சமாக 400 கிலோமீட்டர் வேகத்தில் நான்கு அல்லது ஐந்து பேரை சுமந்துகொண்டு தொடர்ந்து 800 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் கார் தயாரிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மின்சாரத்தில் இயங்கும் இந்த காரை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், இது தனிப்பட்ட, வர்த்தக, சரக்கு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்குமென்று கூறியுள்ளது.

Presentational grey line

உலகின் முதலாவது கைபேசி கிரிப்டோகரன்சி வேலட் அறிமுகம்

உலகின் முதலாவது கைபேசி கிரிப்டோகரன்சி வாலட் அறிமுகம்

பட மூலாதாரம், TWITTER

பிரபல இணையதள பிரௌசரான (உலவி) ஒபேரா, கைபேசிக்கான உலகின் முதலாவது கிரிப்டோகரன்சி வேலட்டை அறிமுகம் செய்துள்ளது.

பிட்காயின், ஈத்திரியம் போன்ற பலவகையான கிரிப்டோகரன்சி என்னும் மின்னணு பணங்களின் பரிமாற்றத்திற்கு உலகின் பல நாடுகளிலும் தடைவிதிக்கப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு குறைந்தபாடில்லை. இந்நிலையில், "எதிர்காலத்தில் பணப்பரிமாற்றத்தை ஆட்சி செய்யபோகும் கிரிப்டோகரன்சியை ஒபேரா கைபேசி செயலியிலேயே இணைத்து அதற்கான முன்னோட்ட பதிப்பை வெளியிடுவதாக" அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Presentational grey line

தொடர்புடைய செய்திகள்:

Presentational grey line

இதன் மூலம், கிரிப்டோகரன்சி பறிமாற்றங்களை பிரைவேட் மோடில் கைபேசியிலேயே மேற்கொள்ள முடியும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியின் பீட்டா (முன்னோட்ட) பதிப்பில் ஈத்திரியம் என்ற மின்னணு பண வகையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், விரைவில் அனைத்து வகை கிரிப்டோகரன்சிகளும் இதில் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலங்கள் ட்விட்டரில் திடீரென அதிக ஃபாலோயர்களை இழந்தது ஏன்?

பிரபலங்கள் ட்விட்டரில் திடீரென அதிக ஃபாலோயர்களை இழந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

கடந்த சில தினங்களாக ட்விட்டரிலுள்ள பிரபலங்கள் அதிக ஃபாலோயர்களை இழந்த செய்தி விவாதத்திற்குள்ளாகி வருகிறது.

உதாரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 4,00,000 ஃபாலோயர்களையும், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் 1,00,000 ஃபாலோயர்களையும், இந்திய பிரதமர் நரேந்திர மோதி 3,00,000 ஃபாலோயர்களையும் இழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ட்விட்டரில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் மற்றும் சந்தேகத்திற்கிடமான வகையில் பதிவிட்டதால் ஏற்கனவே முடக்கப்பட்ட கணக்குகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே பிரபலங்கள் உள்பட பல ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது ஃபாலோயர்களை இழந்துள்ளதாகவும் டிவிட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :