You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பயணத்தின் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கிய தானியங்கி பேருந்து
ஓட்டுநர் இல்லாமல் செயல்படும் சிறிய ரக தானியங்கி பேருந்து ஒன்று தனது பயணத்தின் முதல் நாளிலேயே விபத்தில் சிக்கியது.
இப்பேருந்து சில பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது எதிரே மெதுவாக வந்த லாரியொன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் ஏற்பட்டது என்றும், மேலும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபதேற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற தானியங்கி சிற்றுந்துகள் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
கூகுளின் தாயக நிறுவனமான ஆல்பாபட்டை சேர்ந்த வேமோ, தனது தானியங்கி டாக்ஸி சேவையை அரிசோனாவில் தொடங்கவுள்ளதாக அறிவித்த மறுதினமே இவ்விபத்து நடந்துள்ளது.
தற்போது லாஸ் வேகாஸில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி சிற்றுந்தின் இயக்க அமைப்பு முறையை பிரான்சை சேர்ந்த நிறுவனமான நவ்யா உருவாக்கியுள்ளது. இதே நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை லண்டனிலும் பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சிற்றுந்து அதிகபட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றாலும், சராசரியாக 25 கிலோமீட்டர் வேகத்தில் ஒரே சமயத்தில் 15 பேர் வரை சுமந்து செல்கிறது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய லாஸ் வேகாஸ் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், "இதுவொரு சிறு விபத்துதான்" என்றும், வழக்கமான சில பரிசோதனைகளுக்கு பிறகு வரும் வியாழக்கிழமை முதல் சிற்றுந்து மீண்டும் பயன்பாட்டுக்கு வருமென்றும் தெரிவித்தார்.
"சிற்றுந்து தான் செய்ய வேண்டியதை செய்தது மற்றும் வாகனத்தை நிறுத்தியது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த லாரியை இயக்கிய ஓட்டுநர், தனது வாகனத்தை நிறுத்தவில்லை" என்று அந்நகர பொதுத் தகவல் அதிகாரி ஜேஸ் ரெட்கே தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் கூட தானியங்கி வாகனங்கள் விபத்தில் சிக்கியிருந்தாலும், அவை பெரும்பாலும் மனிதர்களின் தவறுகளாலேயே நிகழ்ந்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரிசோனாவில் சவாரி-பகிர்வு நிறுவனமான உபேரால் சோதிக்கப்பட்ட ஒரு தானியங்கி வாகனம் விபத்தில் சிக்கியது.
அதேபோல், பகுதி-தானியங்கி அமைப்பை கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் எஸ் ரக காரொன்று கடந்த 2016ல் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதுகுறித்த விசாரணையில் கணினியில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் விபத்திற்கான காரணிகளில் ஒன்றாக தெரியவந்ததையடுத்து, டெஸ்லா நிறுவனம் அதன் தொழில்நுட்பத்தின் நுட்பங்களை ஓட்டுனர்களுக்கு தெளிவுபடுத்துவமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டாலும் கூட தானியங்கி கார்கள், தற்போதிருக்கும் சாலைகளை பாதுகாப்பானவைகளாக மாற்றவல்லவையே என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தானியங்கி கார் இயக்க அமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும் கூட, அத்தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்த வாரம் வெளியிட்டுள்ள ராண்ட் கார்பொரேஷன் என்னும் ஆய்வு நிறுவனத்தின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உயிர்களை காப்பாற்றும் வாய்ப்பை தவறவிடும் மனித ஓட்டுநர்களை விட பல மடங்கு பாதுகாப்பான முழுமையான தானியங்கி வாகனங்களுக்காக காத்திருப்பதாக" அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்