உலகம் முதல் உள்ளூர் வரை இன்று
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று தாக்கியவர்கள் எண்ணிக்கை 16,00,427 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய நிலவரம் குறித்து அறிந்துகொள்ள பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கத்துக்கு செல்லுங்கள்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
பிரேசிலின் வடக்கு மாநிலமான ரொரைமாவில் யனோமாமி பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பழங்குடியின மக்களுக்கு வைரஸ் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மனித உரிமை குழுக்கள் கவலைகளை எழுப்பியுள்ளன. இதே பழங்குடியினத்தை சேர்ந்த இருவர் சமீபத்திய நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் இதை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றும் தன்னார்வ குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
பிரேசிலில் இதுவரை 17,857 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தில் அது நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு சார்பில் தினமும் நடத்தப்பட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பேசிய தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "கொரோனா தொற்று குறித்து 12 குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது. அவர்களிடம் முதல்வர் கருத்துக்களைக் கேட்கிறார். இன்று மருத்துவர் குழுவினரிடம் நேரடியாகவும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமும் கருத்துக்களைக் கேட்டார். "நோய் கட்டுக்குள் வந்த பிறகு ஊரடங்கை நீக்கினால்தான் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இதுவரை எடுத்த முயற்சி வீணாகிவிடும்" என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். நாளை பிரதமருடன் காணொளிக் காட்சி மூலம் ஒரு ஆய்வு இருக்கிறது. அதற்குப் பிறகு, இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படும்" என்று கூறினார். கொரோனாவுக்கான உபகரணங்களை மத்திய அரசுதான் வாங்கி, மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் நேற்று தமிழகம் வந்திருக்க வேண்டிய ரேபிட் சோதனை கிட் இன்னும் வரவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்."'ரேபிட் டெஸ்ட் கிட்' நேற்று வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் இதனை வாங்குவதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வாங்கி நமக்குத் தர வேண்டும். ஆகவே ஓரிரு நாட்களில் வந்துவிடும்" என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அயர்லாந்தில் வரும் மே 5 ஆம் தேதி வரை முடக்க நிலை நீட்டிக்கப்படுவதாக அந்த நாட்டின் பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்துள்ளார்.
“நாம் விடாமுயற்சியுடன் இருப்பதோடு, ஒழுக்கத்தை கடைபிடித்து, நமக்கு முன்னுள்ள சவாலை எதிர்கொள்ள வேண்டும்” என்று லியோ தெரிவித்துள்ளார்.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. எனவே, வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி, முடக்க நிலையை வரும் மே மாதம் 5ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,786 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும். இதன் மூலம், அந்த நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 94 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் அடிக்கடி தவறான முடிவுகள் கிடைப்பதால், இந்த நோய் தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டுள்ள அனைவரையும் பாதிக்கப்பட்டவர்களாக கணக்கில் கொள்ளும் பாணியை அதிகாரிகள் கடைபிடிக்க தொடங்கியுள்ளதால் ரஷ்யாவில் வரும் நாட்களில் பாதிப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.
ரஷ்யாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் மையமாக விளங்கும் அந்த நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்ளூர் அரச நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்ட 96 பேருக்கு மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் தாக்கத்திலிருந்து மீண்ட இவர்களுக்கு எப்படி இரண்டாவது முறையாக வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்று தென்கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறுவதைவிட ஏற்கனவே ஏற்பட்டிருந்த நோய்தொற்று மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கலாம் என்று தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் உடலில் இருந்த நோய்த்தொற்று மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கலாம் அல்லது தவறான பரிசோதனையின் காரணமாக இவர்கள் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தவறான முடிவு கிடைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு முறை கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஒருவருக்கு அந்த நோய்த்தொற்றை எதிர்க்க வல்ல நோய் தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டுவிடும் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் நம்பி வரும் சூழ்நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மொகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி வழி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விரைவாக விலக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வாறு முடிவெடுத்த நாடுகளில் கோவிட் 19 நோய் துரித கதியில் பரவியதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் - மீண்டு வருகிறதா மலேசியா?
இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் மேலும் 866 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்தில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,114ஆக உயர்ந்துள்ளது.
அதே போன்று, வேல்ஸில் 29 பேரும், வடக்கு அயர்லாந்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுதான். இதன் மூலம், பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,019ஆக அதிகரித்துள்ளது.
வெறும் 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட பெல்ஜியத்தில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிகப் பெரியதாக தோன்றினாலும், இதில் பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் மருத்துமனைகள் அல்லாத இடங்களிலும், நோய்த்தொற்று பரவலின் தொடக்க கட்டத்திலும் நிகழ்ந்தவையாக உள்ளன.
ஜப்பானில் முதல் முறையாக சுமோ மல்யுத்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்கனவே கொரோனா தொற்று பரவலால் சுமோ மல்யுத்த போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் இதுவரை 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அதன் அரசு ஊடகமான என்.எச்.கே. தெரிவிக்கிறது.
அது பிற நாடுகளைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை என்ற போதும் அங்கு ஏழு பிராந்தியங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் மேலும் 77 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இன்று தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 761ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 896 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மொத்தம் 206 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து விரிவாக படிக்க: கொரோனா வைரஸ்: 20 ஆண்டுகளுக்கு பின்னர் சுத்தமான இலங்கை
பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே 1ஆம் தேதி வரை முடக்க நிலை/ ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 14ஆம் தேதி வரை முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை நீட்டித்துள்ள இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பாக நேற்று (வியாழக்கிழமை) தங்களது மாநிலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முடக்க நிலையை நீட்டிப்பதாக இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசா அறிவித்திருந்தது.
வெளிநாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதால் இந்தியாவில் அந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவக் கூடும் என்ற கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால், உள்நாட்டு தேவையான ஒரு கோடி மாத்திரைகளை விட 1.30 கோடி மாத்திரைகள் அதிகமாக கைவசம் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தியாவில் முழுவதும் நேற்று 16,002 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 0.2 சதவீதத்தினருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இந்தியாவில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அரசுக்கு ஆலோசனை தெரிவிக்க அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சருடன் மருத்துவ ஆலோசனைக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐசிஎம்ஆரைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் கௌர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து விரிவாக படிக்க: தமிழகத்தில் கொரோனா: ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க பரிந்துரை
கொரோனா வைரஸ் பாதிப்புகள், உயிரிழப்புகள் குறித்த செய்திகளுக்கு மத்தியில் இதோ ஓர் நற்செய்தி .
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் பகுதியை சேர்ந்த 101 வயதாகும் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.
“கால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரியவந்தவுடன் நாங்கள் அதிர்ந்துவிட்டோம். ஆனால், இந்த வயதில் அவர் போராடி மீண்டு வந்துள்ளது எங்களை வியப்புக்குள்ளாகியுள்ளது” என்று அந்த முதியவரின் மருமகள் பிபிசியிடம் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து இந்த முதியவர் வீட்டிற்கு செல்வதாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலின் காரணமாக நாய்கள் மற்றும் பூனைகளை செல்லப்பிராணிகளாக மறுவகைப்படுத்த சீனா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த வாரம், சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடைவிதித்த முதல் நகரமாக ஷென்சென் உருவெடுத்தது.
இதுதொடர்பாக சீனாவின் வேளாண்துறை முன்மொழிந்துள்ள வரைவு கொள்கையில், "மனித நாகரிகத்தின் முன்னேற்றத்துடன், நாய்களும் பாரம்பரிய வீட்டு விலங்குகளிலிருந்து, நெருங்கிய செல்லப்பிராணிகளாக மாறிவிட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன அரசின் இந்த வரைவு கொள்கை குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி தென் கொரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது.
தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மக்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முகக்கவசமும், கையுறையும் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு வரும் மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த தென் கொரியாவிலும் இன்று (வெள்ளிக்கிழமை) 27 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை தென் கொரியாவில் 10,450 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் நோய்கட்டுப்பாட்டு மற்றும் நோய்த்தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாக விளங்கிய தேகு நகரில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கூட நோய்த்தொற்று பதிவுசெய்யப்படவில்லை.
