லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம்

பட மூலாதாரம், Reuters
இரான் - அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்கள் "முற்றிலும் தவறானது" என பிரிட்டன் வெளியுறவு செயலாளர் யவெட் கூப்பர் தெரிவித்திருந்தார்.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான் - நோயல் பேரட் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் பெறுவதற்கான வழி மற்றும் ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கான ஆதரவை இரான் கைவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இஸ்ரேலின் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனென்றால் அவை நேற்று இரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட போர்நிறுத்தத்தை மட்டுப்படுத்துகிறது," என அவர் தெரிவித்தார்.
"திரும்பவே முடியாத நிலைக்கு மிக அருகில் நாம் வந்துள்ளோம். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமைதியை நாம் உறுதியுடன் தொடர வேண்டும்," என இத்தாலி பிரதமர் ஜியொர்ஜியா மெலோனி தெரிவித்தார்.
இந்நிலையில் தெஹ்ரானில் உள்ள ஸ்பெயின் தூதரத்தை மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவேல் அல்ப்ரேஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறுவதோடு சர்வதேச சட்டத்தையும் மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.


















