நேரலை, "முடிவு அமெரிக்காவின் கைகளில்" - போர்நிறுத்தம் குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. "கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்" - நேட்டோவை விமர்சித்த டிரம்ப்

    நேட்டோ, டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, மார்க் ருட் மற்றும் டிரம்ப் (கோப்புப் படம்)

    நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டை வெள்ளை மாளிகையில் சந்தித்த பிறகு மீண்டும் அந்த அமைப்பை தாக்கிப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த காலங்களில் நேட்டோ தன்னை ஆதரிக்கவில்லை எனக் கூறும் டிரம்ப் எதிர்காலத்திலும் ஆதரிக்காது எனத் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ட்ரூத் சோசியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நமக்கு அவர்கள் தேவைப்பட்டபோது நேட்டோ நம்மிடம் இல்லை. மீண்டும் நமக்கு தேவைப்படுகிறபோதும் அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள். பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் பனிப் பகுதியான கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்." எனத் தெரிவித்திருந்தார்.

    கிரீன்லாந்தை அமெரிக்கா உடன் இணைக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனது முந்தைய கருத்தைக் குறிப்பிட்டு டிரம்ப் பேசியிருந்தார். நேட்டோ கூட்டாளிகளில் பலரும் கூட இதனை எதிர்த்திருந்தனர்.

    இதற்கிடையே டிரம்ப் உடனான சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்தமனதோடும் நடந்ததாக நேட்டோ தலைவர் மார்க் ருட் சி.என்.என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாதுகாப்பாக இருக்கிறது என முற்றிலும் நம்பிக்கை உடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  2. அசாமில் 126 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவு

    அசாம், சட்டப்பேரவைத் தேர்தல்

    பட மூலாதாரம், Dilip Sharma

    படக்குறிப்பு, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

    அசாமில் 126 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அனைத்து இடங்களுக்குமான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

    அசாமில் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.49 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    இதில் 1,24,82,213 ஆண் வாக்காளர்கள், 1,24,75,583 பெண் வாக்காளர்கள் மற்றும் 343 திருநர் சமூக வாக்காளர்களும் அடங்குவர்.

    இந்த முறை அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா மற்றும் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் இடையேயான போட்டியாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

    ஹிமாந்தா பிஸ்வ சர்மா ஜலுக்பாரி தொகுதியில் போட்டியிடுகையில் கௌரவ் கோகோய் ஜோர்ஹாட் தொகுதியில் களம் காண்கிறார். வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

  3. போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனானில் தொடரும் தாக்குதல்கள்

    லெபனான்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லெபனான்

    இரான் - அமெரிக்கா இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லெபனானில் தனது போர் இன்னும் முடிவடையவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    புதன்கிழமை அன்று இந்த மோதல் காலத்தின் மிகப் பெரிய குண்டுவீச்சை எதிர்கொண்டது லெபனான். சுமார் 182 பேர் கொல்லப்பட்டதாகவும் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பெய்ரூட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடந்த இடத்தில் முன்களப் பணியாளர்கள் சேதமடைந்த கட்டடங்களில் பாதிக்கப்பட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹெஸ்போலா அமைப்பு தெரிவிக்கிறது. இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா அமைப்பு போர்நிறுத்த மீறல்களுக்கான பதிலாக தனது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என சமூக ஊடகப் பதிவின் மூலம் கூறியுள்ளது.

    லெபனானுக்கு எதிரான “இஸ்ரேலிய - அமெரிக்கா ஆக்கிரமிப்பு” நிற்கும் வரை தாக்குதல்களைத் தொடர்வதாகவும் ஹெஸ்போலா எச்சரித்துள்ளது.

  4. "முடிவு அமெரிக்காவின் கைகளில்" - போர்நிறுத்தம் குறித்து இரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

    இரான், இஸ்ரேல், அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (கோப்புப் படம்)

    அமெரிக்கா தனக்கு போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இரான் - அமெரிக்க போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் தெளிவாக இருக்கின்றன. போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் நீடித்த போருக்கு இடையே ஒன்றை அமெரிக்கா தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது." என்றார்.

    மேலும் அந்தப் பதிவில், "லெபனானில் நடைபெற்று வரும் படுகொலையை உலகமே பார்த்து வருகிறது. தற்போது முடிவு அமெரிக்காவின் கைகளில் தான் இருக்கிறது. அமெரிக்கா அதன் உத்தரவாதங்களின்படி நடக்கிறதா அல்லது இல்லையா என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு அதனை ஆதரித்த இஸ்ரேல் அது 'லெபனானுக்குப் பொருந்தாது" என்றும் அறிவித்தது.

    எனினும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தப் போர்நிறுத்தம் லெபனானிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

  5. வணக்கம் நேயர்களே!

    இன்று (09-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது மோகன்.

  6. 'போர் நிறுத்தத்திற்காக இரான் கெஞ்சியது' - அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர்

    'போர் நிறுத்தத்திற்காக இரான் கெஞ்சியது' - அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர்

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஊடகங்களிடம் பேசுகையில், ''இரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது, ஆனால் இனி அது அவ்வாறு இல்லை'' என்று கூறினார்.

    அதிபர் டொனால்ட் டிரம்பைப் பாராட்டிய ஹெக்செத், "அவர் வரலாறு படைத்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

    “அதிபர் டிரம்ப் இதைச் சாத்தியமாக்கினார், இரான் இந்தப் போர் நிறுத்தத்திற்காகப் கெஞ்சியது, இது நம் அனைவருக்கும் தெரியும்” என்றார்

  7. தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் மாற்றம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் மாற்றம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆகியோரையும் மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சாய்க்குமார் ஐ.ஏ.எஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐ.பி.எஸ் ஆகியோர் நியமனம் செய்வதாக தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள முதலமைச்சர், ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை மாற்றி ஒரு தலைபட்சமான அரசியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதற்கு கண்டனம்” என குறிப்பிட்டுள்ளார்.

    ''நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக வின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது, அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பாஜக.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  8. இரான் நாட்டிற்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளுக்கு 50 சதவீத வரி - டிரம்ப்

    இரான் நாட்டிற்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளுக்கு 50 சதவீத வரி - டிரம்ப்

    பட மூலாதாரம், Getty Images

    இரான் நாட்டிற்கு ராணுவ உதவி செய்யும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட ஒரு செய்தியில், இரான் நாட்டிற்கு ராணுவ ரீதியாக உதவும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    “இரான் நாட்டிற்கு ராணுவ ஆயுதங்களை விநியோகம் செய்யும் அனைத்து நாடுகளும், அமெரிக்காவிற்கு விற்கப்படும் தங்களது அனைத்துப் பொருட்கள் மீதும் 50 சதவீத வரியைச் சந்திக்க நேரிடும். இது உடனடியாகச் நடைமுறைக்கு வரும். இதில் யாருக்கும் எந்தவித விலக்கும் அளிக்கப்படாது.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

  9. திருப்பரங்குன்றம் வழக்கு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை

    மதுரை, திருப்பரங்குன்றம்
    படக்குறிப்பு, கோப்புப் படம்

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரித்து வந்தார். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்கலாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் வரை இந்த இடைக்கால தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  10. தமிழ்நாடு தலைமை செயலாளர் மாற்றம் - தேர்தல் ஆணையம் உத்தரவு

    தலைமைச் செயலாளர்

    பட மூலாதாரம், TNDIPR

    தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தலுக்கான தயார் நிலையை ஆய்வு செய்ததன் அடிப்படையில் 1990ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    மாற்றப்பட்டுள்ள தலைமைச் செயலாளர் தேர்தல் முடியும்வரை, தேர்தல் தொடர்பான வேறு எந்த பொறுப்பிலும் நியமிக்கப்பட மாட்டார் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  11. இரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனே வெளியேற அறிவுரை

    MEA

    பட மூலாதாரம், RAMIL SITDIKOV/POOL/AFP via Getty Images

    இரானில் உள்ள இந்தியத் தூதரகம், அங்கு வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்கு ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் முடிந்தவரை விரைவாக இரானை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

    அந்த அறிவுறுத்தலில், "சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, இரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் முடிந்தவரை விரைவாக இரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இது தூதரகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், மேலும் தூதரகம் பரிந்துரைக்கும் வழிமுறைகள் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தூதரகம் மேலும் தெளிவுபடுத்துகையில், "தூதரகத்தைத் தொடர்புகொள்ளாமல், எந்தவொரு சர்வதேச தரைவழி எல்லை நோக்கியும் பயணிக்க முயற்சிக்கக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகக் குறிப்பிடப்படுகிறது," என்று கூறியுள்ளது.

    தூதரகம் அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது: கைபேசி எண்கள்: +989128109115, +989128109102, +989128109109, +989932179359

    மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in

  12. "இரான் மறு கட்டமைப்புக்கு தயாராகலாம்" - டிரம்ப் கூறியது என்ன?

    டிரம்ப்

    பட மூலாதாரம், Tom Williams/CQ-Roll Call, Inc via Getty Images

    போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இரான் இப்போது தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு அமெரிக்காவும் உதவும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்: "இன்று உலக அமைதிக்கு ஒரு மிக முக்கியமான நாளாகும். இரானும் இதையே விரும்புகிறது; ஏனெனில், 'போதும்' என்ற நிலை வந்துவிட்டது. மற்ற அனைவரும் இதையேதான் விரும்புகின்றனர்."

    "ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா உதவும். பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்; இதன் மூலம் பெருமளவிலான பொருளாதார ஆதாயமும் ஈட்டப்படும்." என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில், "இரான் இப்போது தனது மறுகட்டமைப்பு பணிகளைத் தொடங்கலாம். அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும் நாங்கள் தயாராக இருப்போம்; அனைத்தும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய நாங்கள் உறுதுணையாக நிற்போம். இது நிச்சயம் நடைபெறும் என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். அமெரிக்காவில் தற்போது ஒரு பொற்காலம் நிலவிவருவதைப் போலவே, மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் இது ஒரு பொற்காலமாக அமையக்கூடும்," என்று தெரிவித்தார்.

    போரின்போது நடைபெற்ற தாக்குதல்களில் சேதமடைந்த தனது உள்கட்டமைப்புகளுக்கு இழப்பீடு கோரப்போவதாக இரான் அறிவித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரானின் மறுகட்டமைப்பு பணிகளுக்குத் நிதியுதவி அளிப்பாரா என்பது குறித்து டொனால்ட் டிரம்ப் எவ்விதத் தெளிவுபடுத்தலையும் வழங்கவில்லை.

  13. மத்திய கிழக்கில் தொடரும் தாக்குதல்கள்

    இரான், இஸ்ரேல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, இரண்டு வார போர்நிறுத்தத்தைக் கொண்டாட இரான் தலைநகர் தெஹ்ரானில் திரண்ட மக்கள்

    அமெரிக்கா - இரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு நாடுகளில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

    இரான்:

    புதன்கிழமை காலையில், இஸ்ரேல் இரானைத் தொடர்ந்து தாக்கி வருவதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக ஏஎஃப்பி செய்தி முகமைக்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்த பிறகும் இது பதிவாகியுள்ளது.

    இஸ்ரேல்:

    ஜெருசலேமிலும் தாக்குதல்கள் பதிவாகியுள்ள நிலையில் பல வெடிப்புகளைக் கேட்டு உணர்ந்ததாக அங்குள்ள பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பஹ்ரைன்:

    குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தி ‘சைரன் ஒலிக்கப்பட்டதாக’ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கத்தார்:

    தங்கள் நாட்டை நோக்கி வந்த ஏவுகணைகளை இடைமறித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:

    இரானிலிருந்து வரும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் டிரோன்களை தங்களின் நாடு எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்தது.

    சௌதி அரேபியா:

    சௌதி சிவில் பாதுகாப்பு இயக்குநரத்தின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ரியாத்தில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளரின்படி, சௌதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில மணி நேரங்களில் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். அதில் முதல் எச்சரிக்கைக்கு அபாயமில்லை என்கிற சமிக்ஞை கொடுக்கப்பட்டுவிட்டது.

  14. வணக்கம் நேயர்களே!

    இன்று (08-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது மோகன்.

  15. இன்று தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் பேசியது என்ன?

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
    படக்குறிப்பு, கோப்புப் படம்

    இன்று சீர்காழியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மெட்ரோ பற்றி மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் கூறியதைக் குறிப்பிட்டு பேசினார்.

    அப்போது, "மதுரையில் பாஜக எம்.எல்.ஏ வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ கிடைக்கும் என பேசுகிறார். முதலில் அவருக்கு மதுரை மெட்ரோவுக்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்கிறேன். அவர் பிரதமரோ அந்த துறையைச் சார்ந்த ஒன்றிய அமைச்சரோ கிடையாது. பாஜகவை ஜெயிக்க வைத்தால் தான் மெட்ரோ தருவோம் என வெளிப்படையாக கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்." என்று பேசினார்.

    அதே போல இன்று சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் ''ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள்'' எனக் குறிப்பிட்டு பேசினார்.

    அப்போது அவர், "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலே மிகப்பெரிய ஊழல் 2ஜி ஊழல். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருவர் சிறைக்குச் சென்றார்கள்." என்று பேசினார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பேசிய அவர், "இவர்களின் அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், பணம் மற்றும் திரை கவர்ச்சி என்பதில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய ஆட்சி அதிகாரத்தின் செயல்திட்டம் என்பது சலுகை, மானியம், போனஸ், இலவசம். இன்று 60 ஆண்டுகளில் இதைத்தவிர வேறு சொற்களை கேட்டதுண்டா?" என்றார்.

  16. 'ஒட்டுமொத்த 'நாகரிகமும்' இன்றிரவு அழியும்' - இரானுக்கு டிரம்ப் புதிய எச்சரிக்கை

    அமெரிக்கா, இரான்

    பட மூலாதாரம், EPA

    படக்குறிப்பு, கோப்புப் படம்

    அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இரான் தவறினால் "ஒட்டுமொத்த 'நாகரிகமும்' இன்றிரவு அழியும்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், "ஒட்டுமொத்த 'நாகரிகமும்' இன்றிரவு அழியும். அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்படாது." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்தப் பதிவில், "அது நடக்க நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடந்துவிடும். எனினும் தற்போது முழு ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அங்கு வித்தியாசமான, புத்திசாலித்தனமான மற்றும் தீவிரம் குறைவான மனங்கள் இருப்பதால் புரட்சிகரமான, அற்புதமான ஒன்று நடக்கலாம், யாருக்குத் தெரியும்?"

    "இன்று இரவு நமக்குத் தெரிந்துவிடும். உலகின் மிகவும் நீண்ட மற்றும் சிக்கலான வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. 47 ஆண்டுகால அச்சுறுத்தல், உழல் மற்றும் மரணம் இறுதியாக முடிவுக்கு வரும். இரானின் சிறந்த மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

  17. இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து தாக்கும் இரான்

    இரான், இஸ்ரேல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, திங்கள் அன்று இரான் செலுத்திய ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலை தாக்கியது

    இரான் மற்றும் லெபனான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் புதிய தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் இரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

    நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான காணொளியை இஸ்ரேலின் அவரச சேவை பகிர்ந்துள்ளது. இது இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் நிகழ்த்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் எவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படாத நிலையில் இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையின்படி நேற்று மட்டும் 133 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே குர்திஸ்தான் தலைநகரான எர்பிலில் நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராக் அதிபர் தெரிவித்துள்ளார்.

    இது இரான் நிகழ்த்திய டிரோன் தாக்குதல் என குனா செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    கடந்த சில மணி நேரங்களில் தங்களை நோக்கி செலுத்தப்பட்ட 18 டிரோன்களை அழித்ததாக சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இரவில் இரானிலிருந்து வந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்தது.

  18. துருக்கியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி

    துருக்கி, இஸ்தான்புல்

    பட மூலாதாரம், Reuters

    துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி துருக்கி ஊடகங்களில் வெளியாகியுள்ளன. துருக்கி அரசு ஊடகங்கள் வழங்கும் செய்தியின்படி, இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    துருக்கி, இஸ்தான்புல்

    பட மூலாதாரம், Reuters

    உள்ளூர் ஊடகங்கள் சொல்வது என்ன?

    மூன்று சந்தேக நபர்கள் ரைஃபிள் ஏந்தியதோடு ராணுவ சீருடையும் அணிந்திருந்தனர். இந்தச் சம்பவம் பற்றி விவரமறிந்த வட்டாரங்கள் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறுகையில், "துருக்கியில் தற்போது எந்த இஸ்ரேலிய ராஜீய ஊழியர்களும் இல்லை." என்று தெரிவித்தனர்.

    இந்த தாக்குதல் இந்திய நேரப்படி மதியம் 2:45 மணிக்கு நடந்ததாக துருக்கி தொலைக்காட்சியான என்டிவி தெரிவிக்கிறது.

    தூதரகம் வெளியே அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அந்த சேனலில் ஒளிபரப்பட்டுள்ளது.

    துருக்கி, இஸ்தான்புல்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, துருக்கி காவல்துறையினர் சிறப்பு பிரிவினர் தூதரகத்துக்கு வெளியே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  19. வணக்கம் நேயர்களே!

    இன்று (07-04-2026) இரவு வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது மோகன்.

  20. ஆர்டெமிஸ்-2 விண்வெளி வீரர்களுடன் பேசிய டிரம்ப்

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images

    படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்

    ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்றும், ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்கிறது என்று அவர் கூறினார்.

    நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேர், விண்வெளியில் இதுவரை எந்த மனிதனும் செல்லாத, பூமியிலிருந்து தொலைதூர பகுதியை அடைந்துள்ளனர்.

    "நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது, ஆனால் நீங்கள் செய்வது போல் எதுவும் இல்லை; நிலவைச் சுற்றி வந்து, பூமியிலிருந்து மிகத் தொலைவான தூரத்திற்கான சாதனையை படைத்துள்ளீர்கள்," என்று டிரம்ப் ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களிடம் கூறினார்.

    டிரம்ப் மேலும் கூறுகையில், "மனிதர்கள் இதுபோன்ற ஒரு காட்சியைக் கண்டதில்லை. இது மிகவும் சிறப்பானது," என்றார். பின்னர் அவர் ஆர்டெமிஸ் குழுவுக்கும் நாசாவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்தத் திட்டம் முடிந்த பிறகு வெள்ளை மாளிகையில் ஆர்டெமிஸ் குழுவினரைச் சந்திப்பதாக டிரம்ப் கூறினார். அவர், "நானும் மிகவும் வேலையாக இருக்கிறேன், ஆனாலும் நேரம் ஒதுக்குவேன். அமெரிக்க மக்கள் சார்பாக, உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்," என்றார்.

    இந்தத் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், கிறிஸ்டின் கோச், விக்டர் குளோவர் மற்றும் கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.