You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தியாவின் ரஸ்புடின்' தீரேந்திர பிரம்மச்சாரி: இந்திரா காந்திக்கு நெருக்கமாகி இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திய சாமியார்
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சக்தி வாய்ந்த பிரதமரின் யோகா குரு என்பதால், தீரேந்திர பிரம்மச்சாரி மிகப்பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்களை வரிசையில் காத்திருப்பார்கள்.
நீல நிற டொயோட்டா காரை அவர் தானே ஓட்டிச்செல்வார். இது மட்டுமின்றி, அவரிடம் 4 இருக்கைகள் கொண்ட செஸ்னா, 19 இருக்கைகள் கொண்ட டோர்னியர் மற்றும் மால்-5 விமானங்கள் உள்ளிட்ட பல தனியார் ஜெட் விமானங்கள் இருந்தன. பிரம்மச்சாரியே அவற்றையும் இயக்குவார்.
கோபம் வந்தால் எந்த அதிகாரியையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய மற்றும் அமைச்சர்களின் துறைகளை கூட மாற்றக்கூடிய அளவிற்கு அவரது அரசியல் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால், தனது சுயசரிதையான 'மேட்டர்ஸ் ஆஃப் டிஸ்க்ரீஷன்: ஆன் ஆட்டோபயக்ராஃபியில்', தீரேந்திர பிரம்மச்சாரியின் ஆதிக்கத்தை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"நான் வீட்டுவசதி துறை இணையமைச்சராக இருந்தபோது, இந்திரா காந்தியின் யோகா குரு திரேந்திர பிரம்மச்சாரி, டெல்லியின் கோல் டாக் கானா(போஸ்ட் ஆபிஸ்)அருகே உள்ள ஒரு அரசு நிலத்தை தனது ஆசிரமத்தின் பெயருக்கு மாற்றும்படி என்னை வற்புறுத்தினார். மதிப்புமிக்க அரசு நிலத்தை அவருக்குக் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. கோப்பு மேலும் செல்ல நான் அனுமதிக்கவில்லை. இறுதியாக, அவர் பொறுமையிழந்தபோது, ஒரு நாள் மாலையில் என்னை தொலைபேசியில் அழைத்து, அவரது வேலையைச் செய்யவில்லை என்றால், என்னை பதவியில் இருந்து குறைப்பேன் என்று மிரட்டினார்."
ஒரு வாரம் கழித்து, அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, உமாசங்கர் தீட்சித் கேபினட் அமைச்சராக ஆக்கப்பட்டு, இந்தர் குமார் குஜ்ராலுக்கு மேல் வைக்கப்பட்டார்.
"சுவாமி என்னை எப்படி மிரட்டினார் என்ற முழு கதையையும் அடுத்த நாள் நான் இந்திரா காந்தியிடம் சொன்னபோது, அவர் எனக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உமாசங்கர் தீட்சித்தும் அந்த நிலத்தை தீரேந்திர பிரம்மச்சாரிக்கு கொடுக்க மறுத்துவிட்டார். இதன் விளைவு சில நாட்களுக்குப் பிறகு அவரும் மாற்றப்பட்டார். ஆணைக்கு கீழ்ப்படியும் அமைச்சர்கள் பதவியில் அமர்த்தப்பட்டனர்," என்று குஜ்ரால் எழுதுகிறார்.
யோகாவுக்கு அப்பாற்பட்ட பங்கு
இது மட்டுமின்றி 1963-ல் கூட, தனது யோகா மையத்திற்கான மானியத்தை புதுப்பிக்குமாறு அப்போதைய கல்வி அமைச்சர் கே.எல்.ஸ்ரீமாலியிடம், தீரேந்திர பிரம்மச்சாரி கோரிக்கை விடுத்தார். கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட மானியத்தின் கணக்குதணிக்கை அறிக்கையை அளிக்குமாறு ஸ்ரீமாலி அவரிடம் கேட்டார். பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்திரா காந்தி இந்த விஷயத்தை எழுப்பினார்.
நேருவும் ஸ்ரீமாலியிடம் பேசினார். ஆனால் அவர் பிரம்மச்சாரியின் கோரிக்கையை ஏற்கவில்லை. காமராஜர் திட்டத்தின் கீழ் ஸ்ரீமாலி 1963 ஆகஸ்டில் ராஜினாமா செய்தார். ஆனால் நேரு அமைச்சரவையில் இருந்து அவர் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக சிலர் கருதுகின்றனர்.
தனக்கு நிலம் கிடைக்க உதவாததால், தனது தந்தை டி.கே.சிங்கை பதவி நீக்கம் செய்ததாக தீரேந்திர பிரம்மச்சாரி பெருமையடித்துக் கொண்டிருந்தார் என்று நிதி கமிஷனின் தலைவராக இருந்த என்.கே.சிங் விசாரணை அதிகாரிகளிடம் கூறினார்.
அப்போது டி.கே.சிங் நாட்டின் நிதித்துறை செயலராக இருந்தார். அவரது மகன் என்.கே.சிங்கும் உயர் பதவிகளை அடைந்தார்.
பிரம்மச்சாரி 1924 பிப்ரவரி 12 ஆம் தேதி பிகாரின் மதுபனி மாவட்டத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் அவரது பெயர் திரேந்திர சௌத்ரி. 13 வயதில், அவர் வீட்டை விட்டு வெளியேறி, லக்னெளவுக்கு அருகிலுள்ள கோபால்கேடாவில் மகரிஷி கார்த்திகேயரிடம் யோகா பயிற்சி பெற்றார்.
நேரு மற்றும் இந்திரா இருவருக்கும் யோகா கற்பித்த தீரேந்திர பிரம்மச்சாரி
1958ஆம் ஆண்டு அவர் டெல்லியை அடைந்தார். இந்திரா காந்தியுடனான சுவாமியின் முதல் சந்திப்பு காஷ்மீரில் உள்ள ஷிகர்கரில் நடந்ததாக இந்தியா டுடே பத்திரிகையிடம் யஷ்பால் கபூர் தெரிவித்தார்.
"பிரம்மச்சாரி முதலில் நேருவுக்கு யோகா கற்பிக்கத் தொடங்கினார். சில நாட்களில் லால் பகதூர் சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற பல அரசியல்வாதிகளும் அவரது சிஷ்யர்கள் ஆனார்கள். 1959 இல் அவர் விஸ்வயதன் யோகா ஆசிரமத்தை நிறுவினார், இது பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறக்கப்பட்டது," என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் கேத்தரின் ஃபிராங்க் எழுதியுள்ளார்.
இந்த ஆசிரமம் கல்வி அமைச்சகத்திடமிருந்து பெரும் மானியம் பெற்றது. மேலும் சுவாமிக்கு வீட்டுவசதி அமைச்சகத்தால் ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது என்றும் கேத்தரின் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியான டோரதி நார்மன் தனது 'இந்திரா காந்தி: லெட்டர்ஸ் டு அன் அமெரிக்கன் ஃபிரண்ட்' என்ற புத்தகத்தில், "நான் இப்போது யோகாவை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். அழகான ஒரு யோகி எனக்கு யோகா கற்றுத் தருகிறார் என்று 1958 ஏப்ரல் 17 ஆம் தேதி இந்திரா எனக்கு எழுதினார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"உண்மையில் அவரது (தீரேந்திர பிரம்மச்சாரியின்) முகம் மற்றும் அவரது கவர்ச்சியான உடல் அமைப்பு அனைவரையும் அவர் பக்கம் ஈர்த்தது. ஆனால் அவருடன் பேசுவது ஒரு வகையான தண்டனை. ஏனென்றால் அவர் மிகவும் மூடநம்பிக்கை கொண்டவர்,"என்று டோரதி மேலும் எழுதுகிறார்.
பிரம்மச்சாரி எப்போதுமே கம்பளி ஆடைகளை அணிந்ததில்லை
மூத்த பத்திரிக்கையாளர் திலீப் பாப், 1980 நவம்பர் 30 ஆம் தேதி இந்தியா டுடேயில் வெளியான 'சுவாமி தீரேந்திர பிரம்மச்சாரி, காண்ட்ரவர்ஷியல் குரு' என்ற கட்டுரையில், சுவாமியை ஆறடி ஒரு அங்குலம் உயரமும் மெலிந்த மனிதராகவும், உடலில் மெல்லிய துணியை மட்டுமே அணிந்தவராகவும் விவரித்தார்.
அவர் கையில் எப்போதும் ஒரு வெள்ளை தோல் பை இருந்தது. அது ஒரு பெண்ணின் கைப்பையைப் போன்றது என்றும் அவர் எழுதுகிறார்.
"அவர் எல்லையற்ற முரண்பாடுகளைக் கொண்டவர். அவர் பல முகங்களைக் கொண்ட ஒரு துறவி. அவர் எந்த அதிகாரபூர்வ பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் அவருக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளது. அவர் ஆடம்பரமாக வாழும் ஒரு துறவி. நேரடியாக பிரதமந்திரியை அணுகக்கூடிய யோகா குருவாக அவர் இருந்தார். அவரைப்பார்த்து அனைவரும் பயப்படுவார்கள், ஆனால் அவரை மதிக்கவும் செய்தார்கள்," என்று பாப் எழுதினார்.
தீரேந்திர பிரம்மச்சாரி ஒருபோதும் கம்பளி ஆடைகளை அணிந்ததில்லை. ஸ்ரீநகரின் குளிர்காலமாக இருந்தாலும் சரி, மாஸ்கோவில் பூஜ்ஜியம் டிகிரிக்கு குறைவான தட்பநிலை இருந்தாலும் சரி, தீரேந்திர பிரம்மச்சாரி எப்போதும் தனது உடலில் மஸ்லின் துணியை மட்டுமே சுற்றியிருப்பார்.
"அப்போது அவருக்கு 60 வயதாக இருந்தபோதிலும், 45 வயதுடையவர் போலவே தோற்றமளித்தார்," என்று திலிப் பாப் எழுதியுள்ளார்.
இந்தியாவின் 'ரஸ்புடின்'
இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்த நட்வர் சிங், "சுவாமி எனக்கு யோகா கற்றுத் தந்தார். அவருடைய வேலையை அவர் நன்கு அறிவார். நாலைந்து மாதங்களில் எனது ஆஸ்துமாவை அவர் குணப்படுத்தினார்" என்கிறார்.
அவர் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசு தொலைக்காட்சி தூர்தர்ஷனில் யோகா நிகழ்ச்சியை நடத்துவார். இது நாடு முழுவதும் யோகாவை பிரபலப்படுத்துவதில் பங்களித்தது. 70களில், பிரம்மச்சாரி சஞ்சய் காந்தியுடன் மிகவும் நெருக்கமாகி, ஒரு வகையில் காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார்.
"யோகா கற்பிப்பதாகக் கூறி இந்திரா காந்தியின் அறைக்குள் தனியாக நுழையக்கூடிய ஒரே மனிதர் பிரம்மச்சாரி ஆவார். படிப்படியாக, இந்திரா காந்தியுடன் அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக, அவர் இந்தியாவின் ரஸ்புடின் என்று அழைக்கப்பட்டார்."என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் கேத்தரின் ஃபிராங்க் எழுதுகிறார்.
ஆனால் இந்திரா காந்தியின் நண்பராக இருந்த பி.டி.டாண்டன், கேத்தரின் ஃபிராங்கின் கூற்றை வெறும் வதந்தி என்று கூறி முற்றிலுமாக நிராகரித்தார். ஜவஹர்லால் நேருவே பிரம்மச்சாரியிடம் தனது மகளுக்கு யோகா கற்றுத்தருமாறு கேட்டுக் கொண்டார் என்றும் சில சமயங்களில் நேருவே பிரம்மச்சாரியிடம் யோகா கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
எமர்ஜென்சி காலத்தில் பிரம்மச்சாரிக்கும் இந்திராவுக்கும் இடையே அதிகரித்த நெருக்கம்
எமர்ஜென்சி காலத்தில், இந்திரா காந்திக்கு மற்றவர்கள் மீது அவநம்பிக்கை அதிகரித்ததால், அவர் மீது பிரம்மச்சாரியின் தாக்கம் அதிகரித்தது.
"பிரம்மச்சாரி இந்திரா காந்தியின் பயத்தை அதிகரித்து, அவருக்கும் சஞ்சய்க்கும் தீங்கு விளைவிக்க விரும்பும் நபர்களைப் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். எதிரிகள் அவருக்கு எதிராக எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலமாக தீக்கு விளைவிக்க சதி செய்கிறார்கள் என்று விளக்குவார். பின்னர் பல்வேறு சடங்குகள் மற்றும் மந்திரங்கள் மூலம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் அவர் சொல்வார்,"என்று புபுல் ஜெயகர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார்.
"இந்திரா காந்தி இந்த விஷயங்களில் அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பல அரசியல் விஷயங்களிலும் அவரது ஆலோசனையை பெற்றார். அதில் பிரம்மச்சாரியின் சுயநலம் மறைந்திருக்கலாம் என்பதைக்கூட இந்திரா யோசிக்க மாட்டார்," என்று புபுல் ஜெயகர் மேலும் எழுதுகிறார்.
சுங்க வரி செலுத்தாமல் விமானம் இறக்குமதி
இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பிரம்மச்சாரி தனது செல்வத்தை எவ்வாறு பெருக்கினார் என்பதை ஷா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்திரா காந்தி மீது பி.என்.ஹக்ஸர் மற்றும் காஷ்மீர் பிரிவின் செல்வாக்கு இருந்தவரை, பிரம்மச்சாரியின் கை அவ்வளவாக ஓங்கியிருக்கவில்லை. ஆனால் சஞ்சயின் வலு அதிகரிக்க அதிகரிக்க, இந்திரா மீதான சுவாமியின் செல்வாக்கும் அதிகரித்தது.1976 ஆம் ஆண்டில் எமர்ஜென்சிக்குப் பிறகு, அமெரிக்க விமான நிறுவனத்திடம் இருந்து நான்கு இருக்கைகள் கொண்ட எம்-5 விமானத்தை வாங்குவதற்கு அரசிடம் அவர் அனுமதி கோரினார். அந்த அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது," என்று கேத்தரின் ஃபிராங்க் எழுதுகிறார்.
"இந்த விமானத்திற்கு இறக்குமதி வரி விதிக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி காஷ்மீரில் தனியார் விமான ஓடுதளம் அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த இடம் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால், பல பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டன," என்று கேத்தரின் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன
1977 தேர்தலில் இந்திரா காந்தியின் தோல்விக்குப் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் காஷ்மீரில் உள்ள அபர்ணா ஆசிரமத்திற்குச் சென்றனர். பளிங்குத் தரையுடன் கூடிய ஒரு பிரமாண்டமான கட்டிடத்தையும், அது ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டனர். இந்த கட்டிடத்தில் நான்கு குளியலறைகள் இருந்தன மற்றும் பத்து தொலைபேசிகள் நிறுவப்பட்டிருந்தன.
"ஆடம்பர வாழ்க்கை மற்றும் எல்லா வகையான வசதிகளையும் வழங்கும் வகையில் ஆசிரம வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுக்கான விடுமுறை இல்லமாக கட்டப்பட்டதாகத் தெரிகிறது,"என்று ஷா கமிஷன் பின்னர் தனது அறிக்கையில், குறிப்பிட்டது.
ஆனால் 1980ல் தேர்தல் முடிந்து இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் பதவிக்கு திரும்பியபோது, தீரேந்திர பிரம்மச்சாரி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் வாபஸ் பெறப்பட்டன.
"அவர் மீண்டும் பிரதமரின் இல்லத்தின் ஒரு பகுதியாக மாறினார். மேலும் காந்தி குடும்பத்தின் சாப்பாட்டு மேசையில் அடிக்கடி காணப்பட்டார். ஆனால் அவருக்கு எப்படி சாப்பிடுவது என்று தெரியாது. அவர் மிக அதிகமாக சாப்பிடுவார். 60 வயதாக இருந்தாலும் அவர் மிகவும் கவர்ச்சியாகவும், மெலிந்த உடலோடும் இருந்தார்," என்றும் கேத்தரின் ஃபிராங்க் எழுதுகிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பாபாக்களைப் பற்றிய 'குரு' என்ற புத்தகத்தின் ஆசிரியரான பவ்தீப் கங், " "அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த ஜனதா அரசு இந்திரா மற்றும் சஞ்சய் ஆகியோருக்கு எதிராக இருந்தபோதிலும் பிரம்மச்சாரி தங்களுடன் உறுதியாக இருந்ததற்காக சஞ்சய் தீரேந்திர பிரம்மச்சாரியைப் பாராட்டினார். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு வெகுமதி அளிக்கப்பட்டு அவர் மீதான எல்லா வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அவரது விமானமும் அவரிடமே திருப்பி அனுப்பப்பட்டது," என்று எழுதியுள்ளார்.
"சஞ்சய் ஒரு சிறந்த விமானி. ஆனால் நான் அவரை வானத்தில் அதிக அக்ரோபாட்டிக்ஸ் காட்ட தடை விதித்திருந்தேன்."என்று சஞ்சய் இறந்த ஒரு நாள் கழித்து தீரேந்திர பிரம்மச்சாரி கூறினார்.
பின்னர் சஞ்சய் காந்தியின் இறுதிச் சடங்குகள் தீரேந்திர பிரம்மச்சாரியின் மேற்பார்வையில் நடைபெற்றது.
சஞ்சய் காந்தியுடன் நெருக்கம்
சப்தர்ஜங் சாலையில் உள்ள இந்திரா காந்தியின் பங்களாவிற்கு தீரேந்திர பிரம்மச்சாரியின் அணுகலை அதிகரிப்பதில் சஞ்சய் காந்தி முக்கிய பங்கு வகித்தார்.
ராமச்சந்திர குஹா தனது 'இந்தியா ஆஃப்டர் காந்தி' புத்தகத்தில், "நீண்ட முடி கொண்ட தீரேந்திர பிரம்மச்சாரி முதலில் இந்திரா காந்தியின் வீட்டிற்கு யோகா ஆசிரியராக நுழைந்தார். ஆனால் பின்னர் அவரது விருப்பமான மகனின் ஆதரவுடன் நீண்ட காலம் அங்கேயே இருந்தார்," என்று எழுதியுள்ளார்.
1979 ஆம் ஆண்டில், நிகில் சக்ரவர்த்தி தனது 'மெயின்ஸ்ட்ரீம்' இதழில் சுவாமியை சஞ்சய் காந்தியின் குழுவில் முக்கியமானவர் என்று விவரித்தார். 1977ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தபோது, அவருக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் டிபி மிஸ்ராதான் அவருக்கு ஆறுதல் சொல்ல முதலில் அங்கு சென்றார்.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் இந்தர் மல்ஹோத்ரா, "சஞ்சய் மற்றும் திரேந்திர பிரம்மச்சாரி மீண்டும் மீண்டும் அறைக்குள் நுழைந்ததால் இந்திராவுடன் தனியாக பேசுவது முற்றிலும் சாத்தியமற்றதாக இருந்தது என்று டிபி மிஸ்ராவே என்னிடம் கூறினார்."என்று குறிப்பிட்டுள்ளார்.
தீரேந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் விமானங்களை ஓட்டுவதை விரும்பினர். சஞ்சயின் மாருதி தொழிற்சாலையில் சுவாமி மூன்று லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். அவரது மால்-5 விமானத்தை சஞ்சய் 'பறக்கும் பயிற்சிக்காக' பயன்படுத்தினார். இந்த விமானத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் அமேதி மற்றும் பரேலிக்கு செல்வது வழக்கம்.
மேனகாவை வீட்டை விட்டு வெளியேற்றியபோது பிரம்மச்சாரி உடனிருந்தார்
மகன் இறந்த பிறகு இந்திரா காந்தி தீரேந்திர பிரம்மச்சாரியை அதிகம் சார்ந்து இருந்தார். தனிப்பட்ட விஷயங்களில் கூட அவருக்கு நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார்.
குஷ்வந்த் சிங் தனது சுயசரிதையான ' ட்ருத், லவ் அண்ட் லிட்டின் மேலிஸ்' புத்தகத்தில்," வீட்டில் நடந்த ஒரு சண்டைக்குப்பிறகு இந்திரா காந்தி தனது மருமகள் மேனகா காந்தியை வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தபோது, தீரேந்திர பிரம்மச்சாரி அங்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மேனகா மற்றும் அவரது சகோதரியுடன் சண்டையின் போது விஷயம் இந்திரா காந்தியின் கையை மீறிப்போனதும் அவர் சத்தமாக அழத் தொடங்கினார். தீரேந்திர பிரம்மச்சாரி அவரை அறைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று எழுதியுள்ளார்.
"பிரம்மாச்சாரி ஒரு பெரிய பங்களாவை வைத்திருந்தார். அதில் அவர் பெரிய கறுப்பு மாடுகளை வளர்த்தார். அவற்றின் பால் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று அவர் நம்பினார்."என்று குஷ்வந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள், பிரதமரின் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது விஸ்வயதன் யோகா ஆசிரமத்தில் அவரது தரிசனத்திற்காக வரிசையில் நிற்பது வழக்கம்.
பிரம்மச்சாரியை இந்திரா காந்தியிடம் இருந்து தள்ளிவைத்த ராஜீவ் காந்தி
இந்திரா காந்தியின் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தீரேந்திர பிரம்மச்சாரியின் செல்வாக்கு குறையத்தொடங்கியது. ராஜீவ் காந்தியின் எழுச்சியுடன், பிரம்மச்சாரியின் வீழ்ச்சி தொடங்கியது.
"பிரம்மாச்சாரியும் ராஜீவும் எதிரெதிராக இருந்தனர். பிரம்மச்சாரி சாதுர்யமானவர், வெளிப்படைத்தன்மை இல்லாதவர். மேற்கத்திய வாழ்க்கையுடன் சிறிதும் சம்பந்தம் இல்லாதவர். இந்திராவின் வீட்டில் சுவாமி காணப்படுவதை ராஜீவ் விரும்பவே இல்லை. அவரை அங்கிருந்து அகற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர் தாமதம் செய்யவில்லை," என்று கேத்தரின் ஃபிராங்க் எழுதுகிறார்.
சஞ்சயின் மரணத்திற்குப் பிறகுதான் அவரது தோழர்கள் பலர் பிரம்மச்சாரிக்கு எதிராக நின்றார்கள்.
"யாராவது பிரதமருடனான தனது தொடர்பை பிரச்சாரம் செய்வதாக இருந்தால் அதில் கண்டிப்பாக சுயநலம் இருக்கும் என்று கமல்நாத் பகிரங்கமாக கூறியிருந்தார்."என்று புபுல் ஜெயகர் எழுதுகிறார்.
தூர்தர்ஷனில் அவரது யோகா கற்பித்தல் திட்டம் எந்த காரணமும் கூறாமல் திடீரென நிறுத்தப்பட்டபோது அவரது செல்வாக்கு குறைந்து வருவதற்கான மற்றொரு அறிகுறி தெரிந்தது.
பிரதமர் இல்லத்தில் பிரம்மச்சாரி நுழைய தடை
"அடுத்த நாள் அவர் பிரதமர் இல்லத்திற்குள் நுழைய பிரம்மச்சாரி அனுமதிக்கப்படவில்லை. பிரம்மச்சாரியை வெளியேற்ற ராஜீவ் முடிவு செய்ததாக எங்கும் செய்தி பரவியது. பிரம்மச்சாரி காரணமாக இந்திரா காந்திக்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்று ராஜீவ் கருதினார்," என இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறான 'இந்திரா எ பொலிட்டிகல் அண்ட் பெர்சனல் பயக்ராஃபி' என்ற புத்தகத்தில் இந்தர் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அவரிடம் செல்ல சுவாமி கடைசி முயற்சியை மேற்கொண்டார். இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டபோது, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார்.
ராஜீவின் அறிவுறுத்தலின் பேரில், தீரேந்திர பிரம்மச்சாரி அங்கிருந்து அமைதியாக இறக்கிவிடப்பட்டதாகவும், இந்திரா காந்தியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தில் அவர் மீண்டும் வர அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் விற்றது தொடர்பாக தீரேந்திர பிரம்மச்சாரி மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்குப் பிறகு, டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம், அதை இலவசமாகப் பயன்படுத்தி வந்த பிரம்மச்சாரியிடம் கேட்கப்பட்டது.
அவருடைய பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. சம்பள உயர்வுக்காக அவரது ஆசிரம ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
விமான விபத்தில் மரணம்
சஞ்சய் காந்தியைப் போலவே தீரேந்திர பிரம்மச்சாரியும் ஜூன் மாதத்தில் விமான விபத்தில் இறந்தார். தனது ஆசிரமத்தை விரிவுபடுத்துவதற்காக சில காலத்திற்கு முன்பு வாங்கிய நூறு ஏக்கர் நிலத்தை அப்போது அவர் வான்வழியே ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
மோசமான வானிலை நிலவுவதால்புறப்பட வேண்டாம் என்று அவரது விமானி அறிவுறுத்தினார். ஆனால் பிரம்மச்சாரி அவருடைய அறிவுரையைக் கேட்கவில்லை. மாந்தலாயில் தரையிறங்க முயன்ற போது, அவரது விமானம் முட்புதரில் விழுந்து நொறுங்கியது.
அவர் இறந்த பிறகு நியூயார்க் டைம்ஸ் அவரைப் பற்றி மூன்று பத்திகள் கொண்ட கட்டுரையை வெளியிட்டது. ஆன்மிகத்தின் பலத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்ட முதல் நபர் தீரேந்திர பிரம்மச்சாரி அல்ல. ஆனால் அவருக்கு முன் எந்த ஒரு துறவியும் இவ்வளவு காலம் மற்றும் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்