You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி இந்திய அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் ஆய்வு
- எழுதியவர், ஜார்ஜ் ரைட்
- பதவி, பிபிசி நியூஸ்
இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் பங்கு தொடர்பாக பிபிசி ஆவணப்படத்தில் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதை இந்தியாவில் பகிரவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடியாதவாறும் இந்திய அரசு முடக்கியது.
பிபிசி அறிக்கை
இந்த நிலையில், பிபிசியின் இந்திய அலுவலகங்களில் அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக பிபிசி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுடெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். பல ஊழியர்கள் இப்போது அலுவலக கட்டடத்தை விட்டு புறப்பட்டுள்ளனர், ஆனால் சிலர் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
"இந்த நேரத்தில் நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவளித்து வருகிறோம். மேலும் இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும் என்று தொடர்ந்து நம்புகிறோம்."
"எங்களது செய்தி மற்றும் ஊடக பணிகள் வழக்கம் போல் தொடர்கிறது, மேலும் இந்தியாவில் எமது பார்வையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், பிபிசி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த புதன்கிழமை நண்பகலில் வந்தனர். ஆனால், அவர்கள் கட்டடம் அருகே நுழைய முடியாதவாறு போலீஸார் தடுத்தனர்.
மேலும், பிபிசிக்கு எதிராக அவர்கள் வைத்திருந்த பேனர்கள் மற்றும் பதாகைகளை போலீஸார் கைப்பற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் "பிபிசி இந்தியாவை விட்டு வெளியேறு" என கோஷமிட்டனர். பிறகு போலீஸார் அவர்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
நடவடிக்கைக்கு எதிர்வினை
இந்திய எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "இந்த நடவடிக்கை, விரக்தியில் மூழ்கிய மோதி அரசு விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
"இத்தகைய மிரட்டல் தந்திரங்களை கடுமையான முறையில் நாங்கள் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற, சர்வாதிகார அணுகுமுறை இனியும் தொடர முடியாது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா "உலகின் மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பு பிபிசி" என்று விமர்சித்துள்ளார்.
"நீங்கள் விஷத்தை கக்காத வரையில், ஒவ்வொரு அமைப்புக்கும் வாய்ப்பளிக்கும் நாடு இந்தியா" என்று அவர் கூறியுள்ளார்.
வருமான வரித்துறையினரின் ஆய்வு நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும் ஆய்வு நடக்கும் நேரத்துக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சங்கங்கள் எதிர்ப்பு
இந்தியாவில் உள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நடவடிக்கைகள் குறித்து தமது "ஆழ்ந்த கவலையை" வெளிப்படுத்தியுள்ளது.
"அரசாங்கக் கொள்கைகள் அல்லது ஆளும் அமைப்பை விமர்சிக்கும் ஊடகங்களை மிரட்டுவதற்கும் துன்புறுத்துவதற்கும் அரசுத் துறைகளை பயன்படுத்தும் போக்கின் தொடர்ச்சி இவை " என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை "சர்வே" செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளது.
சமீப காலங்களில் தனக்கு எதிராகவும், ஆளும் அமைப்புக்கு எதிராகவும் உள்ள ஊடகங்களை விரோதமாக அரசாங்கம் கருதுகிறது. அதன் ஒரு பகுதியாக அத்தகைய ஊடகங்கள் மீது நடக்கும் தாக்குதலின் அங்கமாகவே இந்த ஆய்வு உள்ளது என்று இந்திய பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் எதிர்ப்பு
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்திய பிரிவு, "ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான பிபிசியின் ஆழமான செய்திகள் தொடர்பாக அதை துன்புறுத்தவும் மிரட்டவும் முயற்சி நடக்கிறது," என்று குற்றம்சாட்டியுள்ளது.
"வருமான வரித் துறையின் பரந்த அதிகாரங்கள், எதிர்க்குரல்களை அமைதிப்படுத்த மீண்டும் ஆயுதமாக்கப்படுகின்றன" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரத்தின் போது மோதியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பும், பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்ற 'வெளியிடப்படாத அறிக்கையை' ஆவணப்படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்து யாத்ரீகர்கள் சென்ற ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட மறுநாள் கலவரம் தொடங்கியது. டஜன் கணக்கானோர் அதில் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 1,000க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
அந்த வன்முறையில் "தண்டனை கிடைக்காத சூழலுக்கு" மோதியே "நேரடி பொறுப்பு" என்று வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.
2005ஆம் ஆண்டில், "மத சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கு" பொறுப்பாகக் கருதப்படும் வெளிநாட்டு அதிகாரிகளின் நுழைவைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மோதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது.
இந்த விவகாரத்தில் நரேந்திர மோதி நீண்ட காலமாகவே தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்ததுடன் கலவரத்திற்கும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 2013இல், உச்ச நீதிமன்ற குழுவும் அவர் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
பிபிசி அழைப்பை நிராகரித்த அரசு
இந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்க இந்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டதாகவும் ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் பிபிசி கடந்த மாதம் கூறியது.
"அந்த ஆவணப்படம் 'கடுமையாக ஆராயப்பட்டது' என்றும், 'பரந்த அளவிலான கருத்துக்கள், சாட்சிகள்' மற்றும் நிபுணர்கள் அதற்காக அணுகப்பட்டனர். பாஜகவில் உள்ளவர்களின் பதில்கள் உட்பட பல தரப்பினரின் கருத்துக்களை வழங்கியுள்ளோம்" என்றும் பிபிசி குறிப்பிட்டிருந்தது.
புதிய விஷயமல்ல
அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைப்புகளை குறி வைப்பது இந்தியாவில் அசாதாரணமான விஷயம் அல்ல.
2020ஆம் ஆண்டில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அதன் இந்திய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியது.
மற்ற உள்ளூர் அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகள் கல்வி, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வரும் ஆக்ஸ்பாம் அமைப்பின் அலுவலகத்திலும் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டில் அரசாங்கத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்ட பின்னர், வருமான வருத்துறை அதிகாரிகள் நான்கு ஊடகங்களில் சோதனை நடத்தியதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற லாப நோக்கமற்ற குழுவின் கூற்றுப்படி, நரேந்திர மோதி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அந்த குழுவின் உலக பத்திரிகை சுதந்திர குறியீடு பட்டியலில் இடம்பிடித்துள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2014ஆம் ஆண்டில் இருந்து 10 இடங்கள் குறைந்த நிலையாகும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்