You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலர் தினம்: முத்தங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
அன்பை வெளிப்படுத்தும் எளிய வழிகளுள் ஒன்று முத்தமிடுதல். முத்தங்களில் பலவகைகள் உண்டு. எங்கு, யாருக்கு, எந்த தருணத்தில் முத்தமிடுகிறோம் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தமும் மாறுகிறது. பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரம் கொண்டாடப்படுகிறது. இதில், பிப்ரவரி 13ஆம் தேதி 'முத்த தினமும்' பிப். 14 அன்று 'காதலர் தினமும்' கொண்டாடப்படுகிறது.
காதல் உறவுகளில் மட்டுமல்லாமல், பெற்றோர்கள், பெரியவர்கள், நண்பர்களிடம் அன்பை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் முத்தமிடலாம். அந்த வகையில், காதல், அன்புடன் எப்போதும் பிணைந்திருக்கும் முத்தத்தின் பல்வேறு வகைகள் மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நெற்றியில் முத்தமிடுதல்
அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாதபோது நெற்றியில் முத்தமிடுதல் ஒன்றே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. அரவணைப்பையும் பாதுகாப்பையும் உணர்த்தும் வகையில் நெற்றியில் முத்தமிடலாம். காதலர்கள் 'ரொமான்டிக்' தருணங்களில் நெற்றியில் முத்தமிட்டாலும், அதனையும் தாண்டி அன்பு, புரிதல், நம்பிக்கை, அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இவ்வகை முத்தம் இருக்கிறது. காதலர்கள், தம்பதிகள் மட்டுமின்றி, பெற்றோர், குழந்தைகள், நண்பர்களுக்கும் நெற்றியில் முத்தமிட்டு தங்கள் அன்பைப் பகிரலாம்.
கைகளில் முத்தமிடுதல்
கைகளில் முத்தமிடுதல் பெரும்பாலும் காதல், ரொமான்டிக் ஆகியவற்றுடன் தொடர்புடையது அல்ல. நம்மைவிட வயதில் பெரியவர்கள், உயர்மட்ட பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு நம் மரியாதையை தெரியப்படுத்தும் விதமாகவே பெரும்பாலும் கைகளில் முத்தமிடுகிறோம். காதல் உறவின் ஆரம்பகாலங்களில் தனக்குப் பிடித்தமானவருக்கு காதலை தெரியப்படுத்துவதற்காகவும் கைகளில் முத்தமிடலாம்.
தலையில் முத்தமிடுதல்
தலையில் முத்தமிடுவது ஒரு உறவில் உறுதியையும் நம்பிக்கையும் அளிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. பெரும்பாலும் குடும்பங்களில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு தலையில் முத்தமிட்டு நம்பிக்கை அளிக்கின்றார். குறிப்பாக, பெற்றோர்கள் - குழந்தைகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் ஒன்றாக இவ்வகை முத்தம் உள்ளது. ஒருவர் தலையில் முத்தமிடும்போது அதனைப் பெறுபவர்கள் பாதுகாப்பு, ஆறுதலான உணர்வுகளை அடைவர்.
கன்னத்தில் முத்தமிடுதல்
ஒருவருக்கு வாழ்த்து அல்லது அன்பை வெளிப்படுத்தும் எளிய சைகையாக கன்னத்தில் முத்தமிடுவார்கள். இந்த முத்தத்தை நீங்கள் யாரிடம் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இதன் அர்த்தமும் மாறுபடும். நண்பர்கள், குடும்பத்தினரிடமும் உங்களின் துணையிடமும் கன்னத்தில் முத்தமிட்டு பாசம், நன்றி உணர்வை வெளிப்படுத்தலாம்.
இவை தவிர, சிற்றின்பத்தை அனுபவிக்கும் வகையிலும் அதனைத் தூண்டும் வகையிலும் பல்வேறு முத்தங்கள் உள்ளன. அமெரிக்க முத்தம், பிரெஞ்சு முத்தம், கழுத்தில் முத்தமிடுதல், காதுகளில் முத்தமிடுதல் உள்ளிட்ட முத்தங்கள் நெருக்கமான உறவுகளில் மிக பரவலாக கடைப்பிடிக்கப்படும் ஒன்றாக உள்ளன.
மேலும், பல்வேறு கலாசாரங்களில் பலவித விநோத முத்தப்பழக்கங்கள் உள்ளன. அவற்றுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. சில விநோத முத்தங்கள் குறிப்பிட்ட கலாசாரத்தோடு நின்றுவிடாமல், பல்வேறு கலாசாரங்களுக்கும் வெவ்வேறு வடிவங்களில் மாறியிருக்கிறது. அத்தகைய விநோத முத்தங்கள் சில:
எஸ்கிமோ முத்தம்
ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்கள், தங்கள் மூக்கோடு மூக்கை உரசிக்கொள்வதே 'எஸ்கிமோ முத்தம்'. இது 'ஓசியானிக் முத்தம்' (Oceanic kiss) என்றும் அழைக்கப்படுகிறது. எஸ்கிமோக்கள் தங்கள் உடல் முழுவதும் ஆடை அணிந்திருப்பதால், அவர்களின் மூக்கு, கண்கள் மட்டுமே வெளியில் தெரியும் வகையில் உள்ளது. எஸ்கிமோக்கள் மட்டுமின்றி பல்வேறு கலாசாரங்களிலும் இந்த முத்தம் பரவியுள்ளது. எஸ்கிமோக்கள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் ஒன்றாக இவ்வகை முத்தத்தைக் கொடுக்கின்றனர்.
மலேய் முத்தம்
டார்வின் குறிப்பிட்ட 'மலேய் முத்தத்தில்' (Malay Kiss) பெண்கள் தரையில் அமர்ந்தும் ஆண்கள் ஒருவிதத்தில் தொங்கிக்கொண்டும், ஒருவரையொருவர் நுகர்ந்து பார்ப்பார்கள். தன் துணையின் வாசனையை அறிவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
கண் இமைகளை கொறிக்கும் முத்தம்
'தி சயின்ஸ் ஆஃப் கிஸ்ஸிங்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஷெரில் ஆர். கிர்ஷென்பௌம் இவ்வகை முத்தம் குறித்துக் கூறுகையில், "ட்ரோப்ரியண்ட் தீவுகளில் ஒரு விநோத பழக்கம் இருந்தது. காதலர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு, நெருக்கமாக உணரும்போது ஒருவரையொருவர் தங்கள் கண் இமைகளை லேசாக கொறிக்கின்றனர். இதை நம்மில் பலரும் 'ரொமான்டிக்' என நினைக்க மாட்டோம். ஆனால், தன் துணை குறித்து அறிவதற்கான உத்திகளுள் ஒன்றாக அது உள்ளது.
ஒருவரையொருவர் நெருக்கமாக, அவர்கள் மீதான நம்பிக்கையை உணரும் ஒன்றாக இது உள்ளது. இது நம்பிக்கை மற்றும் பிணைப்பு சார்ந்து" என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்