You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புல்வாமா தாக்குதல்: "உயிரிழந்த வீரர்களின் உன்னத தியாகத்தை இந்தியா மறக்காது" - பிரதமர் நரேந்திர மோதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியாவின் மத்திய ரிசர்வ காவல் படையினர் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் அது.
2019 பிப்ரவரி 14 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணி வரையில், லாடூமோட் என்பது தெற்கு காஷ்மீரில் உள்ள ஓர் இடம். அவ்வளவுதான்.
அடுத்த நிமிடம் அது மாறிவிட்டது. நிரந்தரமாக மாறிவிட்டது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் சென்ற வாகனங்களின்மீது, வெடிபொருட்கள் நிரப்பிய மாருதி சுசுகி ஈக்கோ வாகனத்தை தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் மோதச் செய்து 40 வீரர்களைக் கொன்ற இடமாக லாடுமோட் மாறியது.
கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த பயங்கரவாத செயல்களில், இதுபோன்ற பயங்கரமான சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது.
இன்று, "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்வோம். அவர்களுடைய உன்னத தியாகத்தை என்றும் இந்தியா மறக்காது. வலிமையான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது," பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சி.ஆர்.பி.எஃப். பொருத்த வரையில், இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் சண்டையை எதிர்கொள்வதோ அல்லது தங்கள் வாகனங்கள் மீது தாக்குதல் நடப்பதோ புதிது அல்ல.
ஆனால் அதுபோன்ற தாக்குதல் மறுபடி நடக்காத வகையில் அதற்கு அடுத்த ஓராண்டில் எந்த அளவுக்கு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்ள புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு கழித்து சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரியிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், ``எதிரிகளின் கொடூரமான திட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் மட்டுமின்றி, தீவிரவாதிகள் உருவாகும் சூழ்நிலையை அழிக்கும் வகையிலும் தேவையான சாதனங்களை வாங்குவது மற்றும் உத்திகளை உருவாக்குவது என சிஆர்பிஎப் தொடர்ந்து சீர்திருத்தங்களைச் செய்து கொண்டே இருக்கிறது,'' என்று தெரிவித்தார்.
தாக்குதலை தடுத்திருக்கக் கூடிய அளவில் தகவல் சேகரிக்க முடியாமல் போன, புலனாய்வுத் துறையின் தோல்வி பற்றியும், வீரர்கள் சென்ற வாகனங்களுக்குப் பாதுகாப்பு அளித்ததில் இருந்த குறைபாடுகள் பற்றியும் தாக்குதல் நடந்த நேரத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
``புல்வாமா தாக்குதல் என்பது ஏதோ குறைபாடு காரணமாக நடந்தது அல்ல. எனவே யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கும் அவசியம் இல்லை. எந்த வகையிலான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் அன்றைய தினம் பயிற்சி பெற்றிருந்தோம். ஆனால் வெடிபொருள்கள் ஏற்றிய வாகனத்தில் வரும் தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கவில்லை. படிக்காத பாடத்தில் இருந்து தேர்வில் கேள்வி வருவதைப் போல அது இருந்தது,'' என்று தன் பெயரைத் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் அப்போது கூறினார்.
இருந்தபோதிலும், தீவிரவாதிகள் வாகனங்களையே வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தியது முதல்முறையாக புல்வாமா தாக்குதலில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நவ்கம் என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவர் வெடிபொருள் நிரப்பிய தனது காரை மோதி வெடிக்கச் செய்ததில் காவல் துறையினர் 3 பேரும், பொது மக்கள் ஆறு பேரும் கொல்லப்பட்டனர் என்று தெற்காசிய தீவிரவாதச் செயல்கள் குறித்த இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சந்தர்ப்பங்களிலும் வாகனங்கள் கார் வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிஆர்பிஎஃப் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.பி.எஸ். பன்வரிடம் பிபிசி இதுபற்றிக் கேட்டது. ``சிஆர்பிஎஃப் என்பது அதிரடி தாக்குதலுக்கான படை. ஒரு பிரச்னை முடிந்ததும் அடுத்த பிரச்னையைக் கையாளச் சென்றுவிடும். என்னைப் பொருத்த வரையில், புல்வாமா சம்பவம் ஒரு பெரிய தவறு என்று நினைக்கிறேன். அதிலிருந்து சிஆர்பிஎஃப் எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை,'' என்று அவர் கூறினார்.
புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு, பிப்ரவரி 17ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வி.கே.சிங் உள்ளிட்டோர், இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும்," என்பது போன்ற கருத்துகளைத் தெரிவித்தன.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 26, 2019 அன்று நள்ளிரவு 3 மணியளவில், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்தியாவில் புல்வாமாவை போன்ற மற்றொரு தாக்குதல் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகப் பெரிய முகாமை தாக்கி அழித்ததாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அப்போது தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்