You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணி ரூப்மதி: கணவரை தோற்கடித்த நபரை ஏற்க மறுத்து விஷம் அருந்தியவரின் காதல் கதை
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, செய்தியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர்
இது 16ஆம் நூற்றாண்டில் மால்வாவில் நடந்த ஒரு கதை. இன்றைய டெல்லிக்கு தெற்கே சுமார் 700 கி.மீ தொலைவில், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் சங்கமிக்கும் இடத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி அமைந்துள்ளது.
நர்மதா நதி இங்கு பாய்கிறது. தண்ணீர் ஓடும் இசை கேட்கிறது. ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது பாஸ் பகதூருக்கு ஒரு குரல் கேட்டது என்று எழுத்தாளர் மாலதி ராமசந்திரன் கூறுகிறார்.
"மல்லிகையின் நறுமணத்தைச் சுமந்து வரும் காற்று, பாடலின் இனிமையை மெல்லிசை துணுக்குகளாகச் சுமந்து வந்தது. அவர் அந்தக் குரலைத் தேடிச் செல்கிறார். அப்போது ஒரு பெரிய மரத்தடியில் ஒரு பெண் பாடிக்கொண்டிருப்பதைக் காண்கிறார். அப்படியே மயங்கி நின்றுவிடுகிறார். பாடகி முக்கிய ராகத்தில் பிரவேசிக்கிறார். பாஸ் பகதூர் அவளுடன் சேர்ந்து பாடுகிறார்."
பாஸ் பகதூர் என்பது மியான் பய்சித்தின் அரச குடும்பப் பெயர். அவர் மத்திய இந்தியாவில் உள்ள மால்வா பிரதேசத்தின் ஆட்சியாளர். இருந்தபோதிலும் அவர் இசையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். வரலாற்றாசிரியர் அபுல் ஃபசல் இவரை 'தனித்துவமான பாடகர்' என்று வர்ணித்துள்ளார்.
அழகும் குரலும் சேர்ந்த ஓர் அற்புதமான கலவையைக் கண்ட பாஸ் பகதூர் அதில் மயங்கிப் போனார். தன் பெயர் ரூப்மதி என்று அந்தப் பெண் சொன்னாள்.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் கேட்டபோது அதற்கு ரூப்மதி, "ரீவா (நர்மதா), மாண்டு (நகரம்) வழியாகச் செல்லும்போது நான் உங்கள் மணமகள் ஆவேன்," என்று பதிலளித்தாக ஒரு நாட்டுப்புறக்கதை தெரிவிக்கிறது.
பாஸ் பகதூர் ஆற்றில் இறங்கி ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மாண்டு வழியாகச் செல்லும்படி நர்மதை ஆற்றை கேட்டுக்கொண்டார்.
தலைநகருக்குத் திரும்பிச் சென்று ஒரு சிறப்பு வாய்ந்த புனிதமான புளியமரத்தைக் கண்டுபிடிக்குமாறும், அதன் வேர்களில் ரீவாவின் நீரிலிருந்து வெளியாகும் ஒரு நீரூற்று காணப்படும் என்றும் நதி அவரிடம் கூறியது.
பாஸ் பகதூர் மரத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் வேர்களைத் தோண்டி, நீர் மூலத்தைக் கண்டுபிடித்தார். அதன் நீரால் ஓர் ஏரியை நிரப்பினார். இப்படிச் செய்து ரூப்மதியின் நிபந்தனையை அவர் நிறைவேற்றினார். இந்த ஏரிக்கு 'ரீவா குண்ட்' என்று பெயரிடப்பட்டது.
நர்மதை மீது ராணி ரூப்மதியின் அன்பு
பாஸ் பகதூர் ரூப்மதியை தன்னுடன் அரண்மனைக்கு வருமாறு சொன்னார். தினந்தோறும் நர்மதை நதியைப் பார்க்க அனுமதிக்கப்படவேண்டும் என்று சுல்தானிடம் உறுதிமொழி பெற்ற பின்னர் ரூப்மதி இதற்கு ஒப்புக்கொண்டார் என்று மாலதி ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதியளித்தபடி பாஸ் பகதூர் அரண்மனையில் இரண்டு குவிமாடம் கொண்ட ஒரு மண்டபத்தைக் கட்டினார். ரூப்மதி தினமும் தனது அன்பான நதியை அங்கிருந்து பார்த்துக் கொண்டிருப்பார். முதல் பார்வையில் ஏற்பட்ட காதல் பற்றிய இந்தக் கதை மற்ற புத்தகங்களைத் தவிர, 1599இல் அஹ்மத் அல் உம்ரி எழுதிய புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது.
1926இல் எல்.எம்.கரம்ப் அந்தப் புத்தகத்தை 'The Lady of the Lotus: Roopmati' என்று மொழிபெயர்த்தார்.
ரூப்மதி ஒரு பேரழகி. தேவதை போன்ற அவளது அழகில் பாஸ் பகதூர் பைத்தியமாக இருந்தார். அழகுடன் கூடவே அவர் நகைச்சுவையாகப் பதில் அளிப்பதிலும், கவிதை மற்றும் ஆடல் பாடலிலும் நிகரற்றவராக இருந்தார் என்று முகமது ஹுசைன் ஆசாத் 'தர்பார்-இ-அக்பரி'யில் எழுதியுள்ளார்.
ரூப்மதி ஓர் இசைக்கலைஞராகவும் கவிஞராகவும் நினைவுகூரப்படுகிறார் என்று கரம்ப் கூறுகிறார். பீம் கல்யாண் ராகம் இவரால் உருவாக்கப்பட்டது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சையத் பஷீர் ஹசன் தனது 'முகலாயர்களின் கீழ் மால்வா' என்ற ஆய்வில், "ரூப்மதி, சடங்கு கவிதைகளுடன் தொடர்புடையவர்" என்று எழுதுகிறார்.
அல் உம்ரியின் புத்தகத்தில் ரூப்மதியின் 26 கவிதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு கவிதை இப்படிச் சொல்றது:
'காதலின் உச்சத்தை எட்டுவது கடினம்
இது கிளைகள் இல்லாத பனைமரத்தில் ஏறுவது போல
அதிர்ஷ்டசாலிகள் பலனை அடைகிறார்கள்
துரதிர்ஷ்டசாலிகள் தரையில் விழுகின்றனர்'
ரூப்மதி மற்றும் பாஸ் பகதூரின் காதல் கதை
1555இல் முஸ்லிம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட பிறகு இந்த ஜோடி 6 ஆண்டுகள் மகிழ்ச்சியில் திளைத்திருந்து.
பாஸ் பகதூர் எப்போதும் ரூப்மதியுடன் இருப்பார். ரூப்மதிக்கும் பாஸ் பகதூர் மீது ஆழ்ந்த, உண்மையான அன்பு இருந்தது என்று டாக்டர் தெஹ்சீப் ஃபாத்திமாவின் ஆய்வு தெரிவிக்கிறது.
இருவராலும் ஒருவரையொருவர் ஒரு நிமிடம்கூட பிரிந்திருக்க முடியாது. அரசாட்சியில் கவனம் செலுத்தாத அளவுக்கு பாஸ் பகதூர் ரூப்மதியின் அன்பில் மூழ்கியிருந்தார்.
"ஷேர்ஷா சூரியின் மகனான சலீம் ஷா சூரியின் சக்திவாய்ந்த அமீர் (ஆட்சியாளர்) தௌலத் கான், பாஸ் பகதூரை தாக்க விரும்பினார். தௌலத் கானுடன் சண்டையிடாமல் இருக்க உஜ்ஜைன், மாண்டு மற்றும் வேறு சில பிரதேசங்களை தன் தாய் மூலம் அவர் தௌலத் கானுக்குக் கொடுத்தார்."
"பின்னர், பாஸ் பகதூர் தௌலத் கானை ஏதோ ஒரு சாக்கில் கொன்றுவிட்டு, சாரங்பூர் நகரின் வாயிலில் தலையைத் தொங்கவிட்டு, தனது பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றினார். பின்னர் ரைசன் மற்றும் பாலேரைக் கைப்பற்றி, அவர் தனது ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். பிறகு ஆடம்பரம் மற்றும் ஆடல் பாடலில் மூழ்கிப்போனார்."
அத்தகைய சூழ்நிலையில் சிதைவு தொடங்கியது. ஆட்சி மீதான அவரது கவனக்குறைவு, ஜாகிர்தார்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொதுமக்களைத் துன்புறுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. இது முகலாய பேரரசர் ஜலாலுதீன் முகமது அக்பரை மால்வாவை நோக்கி இழுத்தது.
1561 மார்ச் மாதம் அக்பர், மஹாம் அங்காவின் மகன் ஆதம் கானின் தலைமையில் மால்வாவை நோக்கி ஒரு படையை அனுப்பினார். முகலாய படை சாரங்பூரை அடைந்தது. சாரங்பூரில் வாழ்ந்த பாஸ் பகதூர் நகரத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் நகர்ந்து தனது முகாமை உருவாக்கினார்.
ஆனால் அவரால் ஆதம் கானின் வலுவை தாக்குப்பிடிக்க முடியவில்லை. தோற்கடிக்கப்பட்ட பிறகு பாஸ் பகதூர், தென்மேற்கு திசையில் நர்மதை மற்றும் தப்தி நதிகளைக் கடந்து காந்தேஷ் நோக்கிச் சென்றார். காந்தேஷ் இப்போது மகாராஷ்டிராவில் இருக்கிறது.
விஷம் சாப்பிட்டு உறங்கிய ரூப்மதி
"பாஸ் பகதூர் அரண்மனையில் செல்வம் கொட்டிக் கிடந்தது. அனைத்து வகையான வைரங்கள், நகைகள் மற்றும் பரிசுகளால் அரண்மனை நிரம்பி வழிந்தது. பல ஆயிரம் யானைகள் இருந்தன," என்று முகமது ஹுசைன் ஆசாத் எழுதுகிறார்.
"அரேபிய மற்றும் இரானிய குதிரைகளால் குதிரை லாயங்கள் நிரம்பியிருந்தன. அபரிமிதமான செல்வம் கிடைத்ததும் ஆதம் கான் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். சில யானைகள் பேரரசர் அக்பரிடம் ஒரு வேண்டுகோளுடன் அனுப்பப்பட்டன. ஆதம் கான் அங்கேயே தங்கிவிட்டார். வெற்றிகொண்ட ராஜ்ஜியத்தை அமீர்களிடையே பகிர்ந்தளித்தார்."
ஆதம் கான் ரூப்மதியின் அழகு மற்றும் நற்பண்புகளின் பெருமையைக் கேட்டு மகிழ்ந்து ஒரு செய்தியை அனுப்பினார். அதற்கு ரூப்மதி,"போய்விடு. கொள்ளையடிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சித்திரவதை செய்யாதே. பாஸ் பகதூர் சென்றுவிட்டார், எல்லாமே போய்விட்டது. இதனால் என் இதயம் உடைந்துவிட்டது," என்று பதில் அனுப்பினார்.
ஆதம் கான் மீண்டும் ஒருவரை அனுப்பினார். இப்படிச் செய்வதால் தீர்வு கிடைக்காது என்பதை ரூப்மதி புரிந்து கொண்டார். இரண்டு மூன்று முறை தள்ளிப்போட்ட பிறகு அவரைச் சந்திப்பதாக உறுதியளித்தார்.
அந்த இரவு வந்ததும், நன்கு அலங்காரம் செய்துகொண்டு தலையில் பூச்சூடி, வாசனை திரவியம் பூசிக்கொண்டு படுக்கையில் கால் நீட்டி படுத்துக்கொண்டார். ஆதம் கான் அங்கு நேரத்தை எண்ணிக் கொண்டிருந்தார். வாக்குறுதியின் நேரம் வருவதற்கு முன்பே அவர் ரூப்மதி இருந்த இடத்தை அடைந்தார்.
"அளவற்ற மகிழ்ச்சியுடன் அவளை எழுப்ப அறைக்குள் சென்றார். அவளை யார் எழுப்புவது? அவள்தான் விஷம் சாப்பிட்டு தூங்கிவிட்டாளே..."
ரூப்மதி சாரங்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்கள் காரணமாக அக்பர், ஆதம் கான் மீது கோபமடைந்தார். தனது வளர்ப்புத் தாயின் கணவரை ஆதன் கான் கொன்றபோது அக்பர் சினமுற்று அதற்குத் தண்டனையாக ஆதம் கானை கொன்றார்.
பாஸ் பகதூர் முகலாய பேரரசரை ஏற்றுக்கொண்டு அக்பரின்கீழ் தொடர்ந்து பணியாற்றினார். பாஸ் பகதூர் பின்னர் தனது காதலியின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்