You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் விடுதலை
ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.
பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது.
விடுதலையானவர்கள் எங்கு சென்றனர்?
இந்த ஆறு பேரில் நளினியும் ரவிச்சந்திரனும் ஏற்கனவே சிறைவிடுப்பில் இருந்தனர். நளினி வேலூரிலும் ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையிலும் தங்கியிருந்தனர்.
இதையடுத்து நளினி, தான் அடைக்கப்பட்டிருந்த வேலூர் சிறைக்கு வந்து தன்னுடைய சிறை விடுப்பை ஒப்படைத்து, முறைப்படி விடுதலையானார். அதேபோல, அதே சிறையில் இருந்த சாந்தன், முருகன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.
சிறை விடுப்பில் இருந்த ரவிச்சந்திரன், மதுரை சிறைக்குச் சென்று நடைமுறைகளை பூர்த்திசெய்து நேற்று இரவு விடுதலையானார்.
முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நால்வர் காவல்துறையினர் பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டாலும் இவர்கள் வெளிநாட்டு நாட்டினர் என்பதால் இவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டடுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு வருவதை தொடர்ந்து மத்திய சிறைச்சாலையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படும் இவர்களை, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்க அனுமதிக்கவோ அரசிடம் கோரப்போவதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில், முருகன், ஜெயக்குமார் ஆகியோர் இந்தியர்களைத் திருமணம் செய்துள்ளனர். அந்த அடிப்படையில், அவர்கள் தங்களை இங்கேயே வசிக்க அனுமதிக்கக் கோரலாம் எனத் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்