You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நாளை நடத்தப்படாது" - என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக கங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையால் அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்ற நிபந்தனையில் கூறியிருந்தது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக ஆர்எஸ்எஸ் தென் மண்டல தலைவர் இரா. வன்னியராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நான்கு சுவர்களுக்கோ நடத்துமாறு கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். அதனால் நவம்பர் 6ஆம் தேதி நடக்கவிருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் ஆறாம் தேதியன்று ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவிட்டது. கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுப்பதாகக் கூறி அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், "ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது மற்ற 47 இடங்களில் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது. நீதிமன்றம் அனுமதியளித்த பிறகும் அந்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறையின் அறிக்கையை காட்டி தமிழக அரசு அனுமதி மறுக்கிறது" என்று வாதிட்டார்.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பின்னால், சூழல் மாறியிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டே மூன்று இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் அணிவகுப்பு நடத்தாமல், உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க காவல் துறை தயாராக உள்ளது. ஆனால், மீதமுள்ள 24 இடங்களில் கூட்டத்திற்கோ, பேரணிக்கோ அனுமதி வழங்க முடியாது. பல இடங்களில் கனமழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ளதால், வருவாய்த் துறை, காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது" என்று வாதிட்டது.
இதற்குப் பிறகு உளவுத் துறையின் அறிக்கையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மீதமுள்ள இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. "காவல் துறை தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன்பாக நடந்த குற்றச் சம்பவங்களையும், வழக்குகளையும்தான் காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. எனவே கோயம்புத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை, நாகர்கோவில் ஆகிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஆகவே, ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கியிருந்த மூன்று இடங்களுடன் சேர்த்து மொத்தமாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது அணிவகுப்பை நடத்தலாம். உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளில் இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
ஆனால், "இந்த அணிவகுப்பில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை மீறி நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்போது அனுமதி வழங்கப்படாத ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த புதிதாக மனு அளிக்கலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்