You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனம் பற்றிய பன்வாரிலால் புரோஹித்தின் சர்ச்சை பேச்சு - பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியது மிக மோசமான அனுபவமாக இருந்தது என்றும், துணைவேந்தர் பதவிகள் ரூ.40 முதல் ரூ.50கோடிகள் வரை விற்கப்படும் சூழல் இருந்தது என்றும், தன்னுடைய பதவிக் காலத்தில் தான் நியாயமாக 27 பதவிகளுக்கு நியமனம் செய்ததாகவும் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக இருக்கும் பன்வாரி லால் புரோஹித், சண்டிகரில் நடந்த விழா ஒன்றில் பேசும்போது, துணை வேந்தர்களை நியமிக்கும் அனுபவம் தனக்கு இருப்பதால், இதுபோன்ற பணிகளை எப்படி செய்வது என்பதை பஞ்சாப் அரசு தன்னிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று பேசினார்.
அந்த நிகழ்ச்சியிலேயே அவர் தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
புரோஹித் ஆளுநராகப் பணிபுரிந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். தற்போது அவர் துணைவேந்தர் நியமனம் பற்றி பேசியிருப்பது அவர் மீதான சர்ச்சைகளுக்கு உயிர்கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பன்வாரிலால் புரோஹித் துணை வேந்தர் நியமனம் பற்றி பேசிய விவகாரத்தில் அவரது கருத்துக்கள் அவர் மீதான சந்தேகங்களை வலுப்படுத்துவதாக தெரிகிறது என்கிறார் கல்வித்துறை செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
''பன்வாரி லால் புரோஹித், தாம் ஆளுநராக இருந்த காலத்தில் துணை வேந்தர் நியமனத்தில் பெரிய வணிகம் இருந்ததாக கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து அப்போது அவர் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று தெரியவில்லை. அவர் இதுகுறித்து ஒரு கடிதமாவது அரசுக்கு எழுதினாரா என்றும் தெரியவில்லை. தற்போது இதுகுறித்து பேசுவது ஏன் என்றும் பார்க்கவேண்டும்,''என்றார் பிரின்ஸ்.
''அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூராப்பா-வை நியமித்தவர் பன்வாரிலால் புரோஹித். சூரப்பா மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அது பற்றி விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓர் ஆணையம் அமைத்தது. ஆனால் ஆணையம் அமைத்தது குறித்து, நீதிமன்றத்தில் தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் புரோஹித். தான் நியமித்தவர் நியாயமானவர் என்று நம்பினால், விசாரணை ஆணையம் பற்றி புரோஹித் ஏன் ஆதங்கப்படவேண்டும்,''என்றும் கேள்வி எழுப்புகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
அரசியல் விமர்சகர் குபேந்திரன் பேசுகையில், தற்போது ஆளுநராக இருக்கும் புரோஹித் ஒரு காலத்தில் அரசியல்வாதியாக இருந்தவர் என்பதால், அதன் சாயம் தற்போதும் வெளிப்படுகிறது என்கிறார். ''அரசியல்வாதிகள் பலர் தங்களுக்கு ஏற்றவகையில் ஒரு சில சம்பவங்களை சித்தரிப்பார்கள். அதுபோல, புரோஹித் ஆளுநராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்த அனுபவம் அவரை தற்போது வழிநடத்துவது போல் தெரிகிறது. துணைவேந்தர் பதவி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் அப்போதே அவர் சுட்டிக்காட்டியிருக்கலாம். பஞ்சாப் ஆளுநராக இருக்கும் சமயத்தில் தனது கசப்பான அனுபவங்களை சொல்வதால் நன்மை இல்லை, துணைவேந்தர் நியமனம் குறித்து இப்போது புதிய முறையில் அவர் பேசுவது நியாயமுமில்லை,'' என்கிறார் குபேந்திரன்.
புரோஹித் சொல்வது போல துணை வேந்தர் பதவிகள் விற்கப்படுவது புதிய விவகாரமல்ல. 2000வது ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து இந்த விவகாரம் அவ்வப்போது தலைதூக்குவது வழக்கமாக உள்ளது என்கிறார் குபேந்திரன். ''2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனங்களில் முறைகேடு இருப்பதாக சர்ச்சைகள் எழுவதுண்டு. அவ்வப்போது பேசுபொருளாக மாறி அந்த பேச்சுகள் குற்றச்சாட்டுகளுடன் முடிந்துவிடும். தற்போது, புரோஹித், விலைப் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை வைத்திருந்தால், அதனை அவர் வெளிப்படுத்தலாம். சட்ட ரீதியாக இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம்,''என்கிறார் குபேந்திரன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்