You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஈ - பைக்: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களும் சிக்கல்களும்
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தைக்குள் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு நுழைந்தது. தற்போது, அக்டோபர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருசக்கர வாகன சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா ஸ்கூட்டரை, 2021ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதியன்று பெங்களூருவில் டெஸ்ட் டிரைவ் செய்த காணொளி வெளியானது. அதைத் தொடர்ந்து ஜூலை 15ஆம் தேதியன்று 499 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்திலேயே பெரும் பேசுபொருளாகியது ஓலா ஸ்கூட்டர். தற்போது, ஓலா எஸ்1 ஏர், ஓலா எஸ்1, ஓலா எஸ்1 ப்ரோ என்ற பெயர்களில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஹைபர் சார்ஜர் மூலம் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 50 கிமீ தொலைவுக்குச் செல்ல முடியும் என்று சனிக்கிழமை நடந்த அறிமுகத்தின்போது தெரிவித்தார் பவிஷ் அகர்வால். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓலா ஹைபர் சார்ஜர் நிலையங்களை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
மேலும், "இந்தியா முழுவதும் 50 ஹைபர் சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளதாக பவிஷ் அகர்வால் தெரிவித்தார். ஸ்கூட்டர் டாஷ்போர்டில் இருக்கும் தொடுதிரையில் தங்களுக்கு அருகிலுள்ள ஹைபர் சார்ஜிங் நிலையங்கள் பற்றிய விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொண்டு, ஸ்கூட்டரில் உள்ள வழிகாட்டும் வசதியைப் பயன்படுத்தி சார்ஜிங் நிலையங்களுக்குச் செல்லலாம். மேலும் ஓலாவுக்கான செயலியிலும் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஓலா பல்வேறு மென்பொருள் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிபிஎஸ் போன்றவை மட்டுமல்லாமல், கூடுதலாக நம்முடைய ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு போன்றவற்றையும் மென்பொருளில் சேகரித்து வைக்கும் வசதியை ஓலா இ-ஸ்கூட்டர் கொண்டுள்ளது," என்று அறிமுகத்தின் போது பவிஷ் அகர்வால் குறிப்பிட்டார்.
"2025ஆம் ஆண்டுக்குள் ஸ்கூட்டர், பைக் என எல்லா வடிவ இருசக்கர வண்டிகளையும் தயாரிக்கவேண்டும் என்ற ஓலாவின் இலக்கு அடையக்கூடிய தொலைவில்தான் உள்ளது," எனத் தெரிவித்தார் பவிஷ் அகர்வால்.
எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளின் மீது நம்பிக்கை குறைவு
"இன்று அறிமுகத்தின்போது அனைவரும் பெட்ரோல் வண்டிகளைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி ஓலா எலெக்ட்ரிக் வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான் என்னும் அளவுக்கு அந்நிறுவனத் தலைமை செயல் அதிகாரி பேசினார். ஆனால், பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை பேட்டரி சூடாவது மற்றும் எடை, செல்லக்கூடிய வேகம், தூரம் ஆகியவற்றைப் பொறுத்து, மைலேஜ் பெரியளவில் மாறுபடுவது ஆகியவை நிகழ்கின்றன," என்று கூறுகிறார் மோட்டார் வாகன நிபுணர் த.முரளி.
"பொதுவாகவே பேட்டரி சூடாகாமல் இருக்க காற்றோட்டம் வேண்டும். ஆனால், பெரும்பாலும் நாம் பொருட்களை வைக்க வசதி செய்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
அப்படி பொருட்களை வைத்து அந்த வெற்றிடத்தை அடைத்துவிடும்போது, காற்றோட்டம் முழுவதுமாக இருக்காது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரும்பாலும் தீ பற்றிக் கொள்ளக் காரணம் பேட்டரிகள் சூடாவது. அவை சார்ஜ் ஆகும்போது, வண்டி ஓடும்போது என்று இரண்டு முறையுமே சூடாகும். பிறகு, சார்ஜ் முடிந்தவுடன் மீண்டும் சார்ஜ் ஏற்றும்போதும் சூடாகும். ஏற்கெனவே சூடாக இருக்கும் பொருள் அடுத்தடுத்த செயல்பாடுகளால் தொடர்ந்து சூடாகும்.
99 சதவீதம் இருசக்கர வாகனங்களில் பேட்டரிகளை குளிரூட்டும் வசதி கிடையாது. அப்படியிருக்கும்போது, வெப்பநிலை மிகவும் அதிகரிக்கவே செய்யும். ஆகையால் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் குளிர்ச்சியடைவதற்கு சில மணிநேரம் தேவைப்படும். அதைக் கொடுக்க வேண்டும்.
அது மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்ற பருவநிலை இங்கு கிடையாது. சில நேரங்களில் 48 டிகிரியை சாதாரணமாகத் தாண்டக்கூடிய தட்பவெப்பநிலை கொண்ட நிலப்பகுதி இது. இவையனைத்துமே பேட்டரியின் வெப்பநிலை மீது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, பேட்டரியை குளிர்விப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை வழங்க வேண்டும். ஆனால், யாருமே அதைப் பரிந்துரைப்பதில்லை," என்று கூறுகிறார் த.முரளி.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் இன்னும் வலுவான இடத்தைப் பிடிக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அது வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
இருப்பினும், அவை அவ்வளவு விரைவாக அந்த இடத்தைப் பிடித்துவிடாது என்பதற்குச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று சார்ஜிங் வசதி. எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வது அவ்வளவு எளிதல்ல. வீட்டிலேயே சார்ஜ் செய்வதாக இருந்தால், அதற்கு ஏழு, எட்டு மணிநேரங்கள் ஆகலாம்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் சார்ஜிங் நிலையங்கள் வந்ததைப் போல் அனைத்து ஊர்களுக்கும் அந்தக் கட்டமைப்பு சென்று சேரவில்லை. பேட்டரிகளின் ஆயுள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிறது. ஓலா ஸ்கூட்டரை பொறுத்தவரை, பேட்டரியின் ஆயுள் 7 ஆண்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் மூன்று ஆண்டுகளுக்கு வாரன்டியும் உண்டு.
இருப்பினும் வழக்கமாக வாரன்டி கொடுக்கப்படும் காலகட்டம் முடியும் நேரத்திலேயே, பேட்டரியில் சார்ஜ் நிற்கும் நேர அளவும் பேட்டரியின் செயல்திறனும் குறைந்துவிடுவதாக இதுவரை இ-ஸ்கூட்டர் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்தியவர்களுக்கு அவற்றின் பேட்டரிகள் மீது நம்பிக்கை குறைவாக உள்ளது.
எலெக்ட்ரிக் வண்டிகளைப் பொறுத்தவரை, மூன்று ஆண்டுகளுக்கு வாரன்டி கொடுத்துள்ள ஓலா, பேட்டரியில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்று மிக உறுதியோடு அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், நடைமுறையில் சந்திக்கக்கூடிய சில பிரச்னைகளான சார்ஜ் நிற்கும் கால அளவு, பேட்டரியின் ஆயுள், பேட்டரியின் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போதுதான் முழுவதுமாகத் தெரியவரும்.
அப்படிப்பட்ட நடைமுறை சிக்கல்களை இந்நிறுவனம் களைந்துள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஓலாவுக்கான சந்தை இந்தியாவில் எப்படி?
எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வது, காலநிலை நெருக்கடி குறித்த சர்வதேச இலக்குகள் போன்றவற்றின் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அரசுகள் ஒருபுறம் கவனம் செலுத்துகின்றன.
அதுமட்டுமின்றி, உலகின் அதிக மாசடைந்த நகரங்களில் பல இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. கரிமத்தை அதிகமாக வெளியிடும் மூன்றாவது நாடாகவும் இந்தியா உள்ளது. ஆகவே இங்கு மக்கள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாறுவது நாட்டின் மொத்த கரிம வெளியீட்டில் தாக்கம் செலுத்தும்.
ஆனால், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின் படி, 2020-21ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க விற்பனையான எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 1,48,425 மட்டுமே. அதுவே 2021-22இல் 2,31,378 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றம் தெரிந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. அதில் அதிக விற்பனையைக் கொண்டுள்ள முன்னணி போட்டியாளர்களை ஓலா எதிர்கொள்ள வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஏதெர் இப்போது நான்காம் இடத்தில் உள்ளது. அதுபோக, இந்தியாவில் ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ் போன்ற பாரம்பர்ய நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன. ஆகவே, ஓலா வாகனத்திற்கு போட்டிக்குப் பஞ்சமிருக்காது.
ஆனால் அதேவேளையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழில் வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருவது, முன்னேற்றத்திற்கான பாதையையும் திறந்து வைத்துள்ளது. இந்த ஆண்டின் தரவுகளின் படி, மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து நாட்டின் மற்ற பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 1,40,661 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
பேட்டரியில் சார்ஜ் நிற்கும் கால அளவு, பேட்டரியின் திறனை மேம்படுத்துதல் போன்றவற்றில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஆய்வுகள் நல்ல பலன்களைக் கொடுத்தால் அதன்மூலம் அனைவருக்கும் ஏற்புடைய விலையில் வாய்ப்பு ஏற்படலாம். அது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தையையும் அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த வகை வாகனங்களுக்குத் தேவைப்படும் வெளிப்புற கட்டமைப்புகளின் தேவைகளையும் அதேவேளையில் பூர்த்தி செய்தாக வேண்டும்.
மக்கள் ஏன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தயங்குகிறார்கள்?
இந்தியாவில் மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது நிறுவனங்களுக்கு மிகக் கடினமாக இருப்பது உண்மைதான். அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களில் இதுவரை ஏற்பட்டுள்ள விபத்துகள் ஒரு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டிய சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன என்கிறார் மோட்டார் வாகன நிபுணர் த.முரளி.
"இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் 70% சாலையோரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்துமிடங்களிலும் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
"சாலைகளில் நிறுத்தும்போது வாகனத்தை எப்படி சார்ஜ் செய்வது என்ற சிக்கல் ஒன்று. இரண்டாவதாக, பருவமழை காலங்களில் பெரும்பாலான நேரம் நகர்ப்புற சாலைகள் வெள்ளநீரால் சூழ்ந்துவிடும்.
அப்படியாகும்போது, எலெக்ட்ரிக் வாகனம் நீருக்குள் இருக்கும்போது என்ன நிலைக்கு உள்ளாகும் என்ற அச்சம் ஒருபுறம் ஏற்படுகிறது. ஒருவேளை பெட்ரோல் வாகனமாக இருந்தால், தண்ணீருக்குள்ளாகவே தள்ளிக்கொண்டு போய்விடலாம், அதற்கு ஒன்றும் ஆகாது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனம் அப்படியில்லை.
தண்ணீருக்குள் அது எவ்வளவு நேரம் இருந்தால் ஒன்றும் ஆகாது என்று ஒரு வரையறை உள்ளது. ஆனால், நடைமுறையில் வெள்ளம் ஏற்பட்டால் வாகனம் சில நாட்களுக்குக்கூட தண்ணீரிலேயே இருக்க வேண்டி வரலாம்," என்றார்.
இதுமட்டுமின்றி, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் வாகன நிறுத்துமிடங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுத்திவிட்டுப் போகும்போது, அவர்கள் "அதை சார்ஜ் செய்வதற்கான மின்சாரத்திற்கு என்ன செய்வார்கள்", ஒருவேளை அலுவலகம் சென்றிருக்கும் நேரத்தில் வாகனத்தில் சார்ஜ் தீர்ந்துவிட்டால், "அலுவலகத்திலேயே சார்ஜ் செய்ய முடியுமா? அதற்கான சார்ஜிங் நிலையத்தைத் தேடி அலைய வேண்டி வரும்", இதுவே பெட்ரோல் வாகனமாக இருந்தால் ஒரு கேனை எடுத்துச் சென்று எரிபொருள் வாங்கி வந்து வாகனத்தை ஓட்டிவிட முடியும். எலெக்ட்ரிக் வாகனங்களில் அப்படிச் செய்துவிட முடியாதல்லவா!
இப்படியான நடைமுறை சிக்கல்களைக் களைய வேண்டியுள்ளது. நாடு முழுவதும் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு வருவதன் மூலம், போக்குவரத்தில் ஏற்படும் கரிம வெளியீட்டைக் குறைக்க முடியும். இந்தியாவின் மொத்த கரிம வெளியீட்டில் 10% போக்குவரத்து மூலம் வெளியாகிறது. ஆகவே இது மிகவும் அவசியமான ஒன்று தான்.
இருப்பினும், அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பொதுமக்கள் அனைவருமே அணுகும் வகையில் உற்பத்தி செய்யும் அதே நேரத்தில், அவற்றைப் பயன்படுத்த ஏதுவான வசதிகளையும் உருவாக்க வேண்டிய தேவையும் அதிகம் உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்