"எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சொன்னது தவறான தகவல்" - ஆணையம் அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கோஷம்

பட மூலாதாரம், Getty Images

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து தான் தொலைக்காட்சியில் பார்த்து மட்டுமே தெரிந்து கொண்டதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தவறான தகவல் என அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அதன் அறிக்கையில் கூறியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையின் விவரம் வெளியானதைத் தொடர்ந்து அதில் சாட்சியம் அளித்தவர்கள் பேசியது என்ன, சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு இருந்த பங்களிப்பு என்ன போன்ற விவரங்களை ஆணையம் அதன் அறிக்கையில் விவரித்திருக்கிறது.

அறிக்கையில் என்ன உள்ளது?

அருணா ஜெகதீசன் அறிக்கையில், "பிறரை போல தானும் ஊடகங்களை பார்த்துதான் ஸ்டெர்லைட் கலவரம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் ஆனால் அரசின் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி கே. ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி கே. என். சத்யமூர்த்தி ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரம் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவித்திருப்பதாக கூறிய ஆதாரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என்று தெரிய வருகிறது" என கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY

ரஜினிக்கு எச்சரிக்கை

அருணா ஜெகதீசன் அருக்கையில் ஸ்டெர்லைட் கலவரத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களிடம் பேசியது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அறிவுரையும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசு இயந்திரம் தோற்று விட்டது" என்றும் "காவல்துறை வரம்புமீறி தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும் பேசினார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி மாவட்ட ஆட்சியரகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர்" என்று பேசினார்.

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

இந்த கருத்துகளை ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக அவரிடம் விளக்கமும் கேட்டது நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்.

அதே சமயத்தில், தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிகாந்த், "எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்" எனவும் கூறியிருந்தார்.

ரஜினியின் கருத்து குறித்து ஆணையம், "உறுதி செய்யப்படாத செய்திகளை பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியை தவிர்க்க வேண்டும்," என்று கூறியுள்ளது.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பொதுமக்கள் எளிதில் நம்பி விடக்கூடிய வாய்ப்புள்ள இதுபோன்ற தருணங்களில், ஒரு தகவலை பேசும் முன்பு அதன் மூலத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும்.

பிரபலங்கள் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். இப்படி 'உறுதி செய்யப்படாத தகவல்களை பிடிவாதமாக நம்பும்' தனிநபர்களுக்கு பொதுவெளியில் இடம் கிடையாது. அவர்களே, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் மிக மிக கவனமாக பொதுவெளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்." என்று தெரிவித்திருந்தது

அறிக்கையின் பின்னணி

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை அக்டோபர் 18ஆம் தேதியன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான வகையில் காவலர் படை பயன்படுத்தப்பட்டதா, துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டனவா என்பதைக் கண்டறியவும் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்டது.

ஆணையத்தின் முக்கிய முடிவுகள்

காவல்துறை நிச்சயமாக வரம்பை மீறியுள்ளது. அதன் நடைமுறையில் செய்யத்தக்கனவற்றைச் செய்யாமல் செய்யத் தகாதவற்றைச் செய்திருக்கிறது என்று மட்டுமே ஆணையம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குக் குந்தகமின்றி, 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்தது.

விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள்/சட்டபூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க, காயமடைந்தவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தது.

உயிரிழந்த ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாகப் பாவித்து அவர் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும். அவரது தாயாருக்கு பணி வழங்கவும் பலத்த காயம் அடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது.

காணொளிக் குறிப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் அறிக்கை: பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை இதுதான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: