கேரளாவில் பெண்கள் நரபலி: தமிழ்நாட்டு நரபலிகளின் பயங்கர வரலாறு; தேரை ஓட்ட, புதையல் எடுக்க நடந்த படுகொலைகள்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் நடந்த இரு பெண்களின் நரபலி சம்பவம், இந்தியா முழுவதையும் உலுக்கியிருக்கிறது. ஆனால், புதையலை எடுக்க, தேரோட்டம் நடத்த நரபலி கொடுப்பது என தமிழ்நாடும் நீண்ட நெடிய வரலாறை கொண்டிருக்கிறது.

இந்தியாவில் அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்றாலும் குறிப்பிட்ட இந்த கேரள சம்பவத்தில் நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலத்தில் இதுபோன்ற நரபலி நிகழ்வுகள் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டாலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து இது போன்ற நரபலி நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

புதையல் வேட்டை சம்பவம்

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கொலமங்கலம் அருகே உள்ள கிராமம் ஒன்றில், லட்சுமணன் என்ற விவசாயி ஒரு வெற்றிலைத் தோட்டத்தில் ஒன்றரை அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்ட குழியில் சடலமாகக் கிடந்தார். அந்தக் குழிக்கு முன்பாக, வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம் போன்ற பொருட்களை வைத்து பூஜை செய்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதை வைத்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, சில நாட்களுக்கு முன்பாக லட்சுமணன் மகளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி, அதனை விரட்ட சிரஞ்சீவி என்ற ஒரு மந்திரவாதி வந்திருக்கிறார். அவர் பேயோட்டிவிட்டுச் செல்லும்போது, வெற்றிலைத் தோட்டத்தில் ஓர் இடத்தைக் காட்டி, அங்கு புதையல் இருப்பதாகவும் நரபலி கொடுத்து அந்தப் புதையலை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது லட்சுமணனின் நண்பர் மணி உடன் இருந்திருக்கிறார்.

இருவரும் சேர்ந்து அந்தப் புதையலை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இதையடுத்து, பேய் பிடித்த பெண் ஒருவரை பலிகொடுத்து அந்த புதையலை எடுக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தினத்தன்று அந்தப் பெண் வராத நிலையில், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

புதையல் வெறியில் இருந்த மணி, நண்பர் லட்சுமணனையே கொலைசெய்தார். பிறகு தோட்டம் முழுதும் தோண்டிப் பார்த்தும் புதையல் கிடைக்கவில்லை. இப்போது சிறையில் இருக்கிறார் மணி.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டணத்தில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நஸுருதீன் - ஷகீலா தம்பதியின் ஆறு மாத குழந்தையான ஹஜராவின் உடல், வீட்டின் பின்புறம் ஒரு தண்ணீர்த் தொட்டியில் கிடந்தது.

காவல்துறைக்குத் தெரிவிக்காமல், உறவினர்கள், ஜமாத்தினர் சேர்ந்து உடலை அடக்கம் செய்தனர். பிறகு காவல்துறை வந்து விசாரித்ததில் ஷகிலாவின் சித்தி ஷர்மிளா பேகம்தான் குழந்தையை பலி கொடுத்தது தெரியவந்தது. ஷர்மிளாவும் அவரது கணவர் அஸாருதீனும் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த நிலையில், அஸாருதீனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் புதுக்கோட்டையைச் சேர்ந்த மந்தரவாதியான சலீமை அணுகினர். அவர் உடல் நலம் சரியாக வேண்டுமென்றால் 21 கோழிகளையோ, ஒரு மனித உயிரையோ பலிகொடுக்க வேண்டுமெனக் கூறினார்.

இதைக் கேட்ட ஷர்மிளா, ஷகிலாவின் குழந்தையை நரபலி கொடுக்க முடிவுசெய்தார். இந்த வழக்கில் ஷர்மிளா, அவரது கணவர், மந்திரவாதி சலீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மந்திரவாதியின் தந்திர நரபலி

2020 ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது பணப் பிரச்னைகளுக்கு தீர்வு காண விரும்பிய பன்னீர்செல்வம் என்ற நபர், தனது மூத்த மனைவியின் நான்கு குழந்தைகளில் ஒன்றை நரபலி கொடுத்தார்.

இரண்டு மனைவிகள், ஆறு குழந்தைகளுடன் பணப் பிரச்னையால் தவித்த பன்னீர்செல்வம், வசந்தி என்ற மந்திரவாதியை அணுகினார். அப்போது, குழந்தையை நரபலி கொடுத்தால் பிரச்னை தீரும் என வசந்தி சொல்லவே, தனது 13 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார் பன்னீர்செல்வம். அது ஒரு பாலியல் வல்லுறவு சம்பவத்தைப் போல காட்சியளிப்பதற்காக, அந்தக் குழந்தையின் கீழாடையையும் கழற்றியிருந்தார்.

ஆனால், பிரேத பரிசோதனையில் வல்லுறவு ஏதும் நடக்கவில்லை என தெரிந்ததும், காவல்துறை நடத்திய விசாரணையில் பன்னீர்செல்வம், அவரது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி ஆகியோர் சிக்கினர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற மூட நம்பிக்கைகளை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கோரினார்.

தமிழ்நாட்டில் இதுபோல அவ்வப்போது நரபலி சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

நரபலிக்கான காரணங்கள் என்ன?

மேலே குறிப்பிடப்பட்ட நரபலிகளில், புதையல், பண பிரச்னை, உடல்நலத்தைச் சரி செய்வது போன்ற காரணங்களுக்காக அவை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வரலாற்றில் நரபலிக்கு மேலும் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிலப்பதிகார காலத்திலிருந்தே நரபலி குறித்த செய்திகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. கோவலன் கொலை செய்யப்பட்டு, கண்ணகியால் மதுரை எரிக்கப்பட்ட பிறகு, பாண்டிய நாட்டில் மழை வளம் குன்றியது. பஞ்சமும் பசியும் சூழ்ந்தன.

வெக்கை நோய்களும் பரவின. இவற்றைக் கண்ட கொற்கை பாண்டிய மன்னனான வெற்றிவேற்செழியன் பாண்டியன், இந்த நிலைக்குக் காரணம் கண்ணகியின் கடுங்கோபம்தான் எனக் கருதி ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டான். அதற்குப் பிறகு நல்ல மழை பெய்ததாகக் கூறப்படுகிறது.

"அன்று தொட்டு பாண்டிய நாடு மழைவறம்

கூர்ந்து வறுமை எய்தி, வெப்பு நோயும் குருவும் தொடர, கொற்கையில் இருந்த

வெற்றி வேற் செழியன், நங்கைக்கு

பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று,

நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும்

நீங்கியது" என சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரை குறிப்பிடுகிறது.

"பல்வேறு காரணங்களுக்காக நரபலி கொடுக்கப்படுவதுண்டு. குறிப்பாக, ஏதாவது ஒரு பெரிய விஷயத்தைக் கட்டும்போது நரபலி கொடுக்கப்பட்டதாக கதைகள் எழுகின்றன.

பிரமாண்டமான அணைகள் கட்டப்படும் போது மனிதர்களை பலி கொடுத்ததாக செய்திகள் வரும். ஏன், பாம்பன் பாலம் கட்டப்பட்டபோது கூட பலி கொடுக்கப்பட்டதாகச் சொல்வார்கள். ஆனால், அது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் கிடையாது.

அதேபோல, பெரிய கண்மாய்கள், அணைகள் உடையும்போது யாரையாவது பலி கொடுத்தால் அதன் வேகம் குறையும் என்ற நம்பிக்கை உண்டு.' உன்னைக் கொண்டு உடைப்பிலதான் போடனும்' என்று சொல்லப்படுவதற்கு இதுதான் அர்த்தம்," என்கிறார் ஆய்வாளர் ஏ.கே. பெருமாள்.

அதேபோல, பணம், புதையல் ஆகியவற்றுக்காக நரபலி கொடுத்திருப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது என்கிறார் அவர். அதற்கு உதாரணமாக பொன்னிறத்தாள் கதை என்ற நாட்டுப்புற கதையை உதாரணமாகச் சொல்கிறார்.

பொன்னிறத்தாள் கதை இதுதான்:பொன்னிறத்தாள் நிறத்திற்கு ஏற்ப பொன்னிறமானவள். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது, தோழிகளோடு குளிக்கச் செல்கிறாள். அப்போது திருடர்களிடம் தனியாகச் சிக்கிக் கொள்கிறாள். அவர்கள், ஒரு கோவில் கொள்ளைக்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நிறைமாத கர்ப்பிணியை பலி கொடுத்தால், கொள்ளை நன்றாக நடக்குமென நினைக்கிறார்கள். ஆகவே பொன்னிறத்தாளைக் கொன்று, வயிற்றிலிருந்து சிசுவை எடுத்து அதையும் கொல்கிறார்கள். ஆனால், அதைக் கண்ட காளி கோவிலைவிட்டு வெளியே வந்து திருடர்களைக் கொல்கிறது என்று போகிறது கதை.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் செ. ராசு தொகுத்த 'கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்' புத்தகம் பழந்தமிழ் நாட்டில் இருந்த நரபலி குறித்த செய்திகளைத் தருகிறது. "கோவில் விழாக்களின்போது இடையூறு ஏற்பட்டால், நரபலியிடும் வழக்கம் இருந்தது. ஆடவர், பெண்டிர் இருபாலரும் பலியிடப்பட்டுள்ளனர். மேலும், தலைவர்களுக்காக தம் தலையை குடிமக்கள் அரிந்துகொண்டுள்ளனர்" என்கிறார் ராசு.

அதற்கு ஆதாரமாக ஆறகளூர் திருக்காமீசுரமுடையார் கோவிலில் 1509ல் தேரோட்டம் நடக்கும்போது ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதை சேலம் மாவட்ட கல்வெட்டுகளை மேற்கோள்காட்டி கூறுகிறார் அவர்.

மேலும், அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பட்டயங்களில் பல்வேறு நரபலி குறித்த செய்திகள் காணப்படுகின்றன. 'ஆவுலப்பம்பட்டி பட்டயம்' என்ற பட்டயத்தில், தேரோடுவதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பலிகொடுக்க முயன்ற நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரக்கநாட்டு எல்லையில் இருக்கும் கரியகாளி அம்மன் கோவில் தேர் ஓட வேண்டுமென்றால், நரபலி கொடுக்க வேண்டுமென அந்த ஊர்ப் பெரிய மனிதனான பவளாத்தாக் கவுண்டர் கனவில் காளி வந்து சொல்கிறாள்.

இதைக் கேட்டு, அந்த ஊரில் இருந்த உருமன் என்ற பட்டியலினத்தவரை பலி கொடுக்கக் கேட்கிறார்கள். உருமன் தன் மனைவியை பலி கொடுக்க முன்வருகிறான். ஆனால், தேர் ஏறியும் அவனது மனைவி சாகவில்லை.

இதையடுத்து வாரக்க நாட்டுக்கு உருமனையே காணியாளன் ஆக்குகிறார்கள் ஊர்ப் பெரிய மனிதர்கள் என்கிறது ஆவுலப்பம்பட்டி பட்டயம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் மல்லிகுந்தத்தில் கிடைத்த மற்றொரு பட்டயத்தில் தேரோட்டம் நடைபெறுவதற்காக நரபலி கொடுத்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1708ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனுக்கு தேரோட்டம் நடத்தும்போது தேர் நின்று விட்டது. இதற்கு நரபலியாக, சிம்ம அனுமன் என்பவன் தன் மனைவி ஆவல் தீத்தம்மாளை நரபலி கொடுத்து தேரை இழுத்தான். இதற்காக அவனுக்குக் கொடை அளிக்கப்பட்டதைப் பேசுகிறது இந்த பட்டயம்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு கோவிலில் திருவிழாவின்போது எருமைகளைப் பலி கொடுத்து வந்திருக்கிறார்கள். அப்போது சிலர் அந்தப் பலியைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, பல ஆண்டுகளாக நரபலி நடந்த நிலையில், இப்போது அதை நிறுத்திவிட்டு எருமைகளைப் பலிகொடுக்கிறோம் என திருவிழா நடத்துவோர் சொல்லியிருப்பதாக செய்திகள் உண்டு என்கிறார் ஏ.கே. பெருமாள்.

இவை போக, பல்வேறு காரணங்களுக்காக தம் தலையை தானே அரிந்துகொள்ளும் நவகண்டம் குறித்த செய்திகளும் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. போர்க்களத்தில் வெற்றிக்காக அல்லது மன்னனைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக இந்த நவகண்ட முறை பின்பற்றப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கைக்கோளப் படையினர் மன்னனைக் காப்பாற்ற முடியாமல்போனால், தலையை அரிந்துகொள்ளும் சபதம் செய்துகொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இதுபோன்ற நரபலிகளில் ஒடுக்கப்பட்டவர்களையே பலியாகக் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. கிழக்கிந்தியக் கம்பனி இங்கே வந்த பிறகு, இதற்கு தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார் ஏ.கே. பெருமாள்.

புதையல் போன்ற காரணங்கள் ஒருபுறமிருக்க, சமீப காலங்களில் உடல் நலம் பெறுவதற்காக, மருத்துவமனைக்குச் செல்லாமல் நரபலியை நாடுவதுதான் அதிர்ச்சியை அளிக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூடப் பழக்கவழக்கங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: