5ஜி நெட்வொர்க் அறிமுகம்: இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், @AshwiniVaishnaw
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி இந்தி சேவை
5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் இந்தியாவிலும் மிக வேகமான மொபைல் இணையத்தின் சகாப்தம் தொடங்கியுள்ளது.
அதிவேக இணையம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய அதிக காலம் எடுக்காது என்று அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி கூறினார்.
இந்தத் தொழில்நுட்பம் வெறும் குரல் அழைப்புகள், வீடியோக்களை பார்ப்பதற்கு மட்டும் அல்ல, புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் கூறினார்.
ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை டிசம்பர் 2023க்குள் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று அந்த கம்பெனியின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பார்தி ஏர்டெல்லின் சுனில் மித்தல், ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவைகளை அக்டோபர் 1, 2022 முதல் தொடங்குவதாகவும், மார்ச் 2024க்குள் அவை இந்தியா முழுவதும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

10 ஜிபி வேகம்
முதற்கட்டமாக இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம் மற்றும் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும்.
மார்ச் 2023 க்குள் நாட்டின் அனைத்து நகர்ப்புறங்களிலும் தனது 5ஜி சேவைகள் தொடங்கும் என்று பார்தி ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம், 2035 ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரத்தில் 5ஜி-யின் தாக்கம் $450 பில்லியன் வரை இருக்கும் என்று தெரிவிக்கிறது.
5ஜி இணைப்பின் மூலம், வினாடிக்கு 10 ஜிபி என்ற வேகம் எட்டப்படும். தற்போது 4ஜி நெட்வொர்க்கில் ஒரு நொடிக்கு அதிகபட்சமாக 100 எம்பிபிஎஸ் அளவே இருக்கிறது
இந்தியாவில் சுமார் 10 கோடி மொபைல் பயனர்கள் 5ஜி-யில் இணையத் தயாராக உள்ளனர் என்றும் இந்த நுகர்வோரிடம் 5ஜிக்குத் தேவையான தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன என்றும் அடுத்த 12 மாதங்களுக்குள் வேகமான இணையத்துடன் இணைய விரும்புகிறார்கள் என்றும் எரிக்சன் நுகர்வோர் ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நகர்ப்புற நுகர்வோரின் கருத்துகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வின் படி, 5ஜிக்கான தயார் நிலை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் காணப்படுகிறது. பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறுவதற்கு நுகர்வோரின் விருப்பம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வேகம் தவிர வேறு என்ன மாற்றம் வரும்?

பட மூலாதாரம், AVISHEK DAS/SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAG
ஆனால் 5ஜி-யின் தாக்கம் இத்துடன் நிற்காது. இது இன்னும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரும். குறிப்பாக மருத்துவம், கல்வி, உற்பத்தி மற்றும் அறிவியல் துறைகளில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2014 இல் 5ஜியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியபோது, இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழகத்தில் உள்ள 5ஜி கண்டுபிடிப்பு மையத்தின் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான பேராசிரியர் ரஹீம் தஃபாஜோலி பிபிசியிடம் கூறுகையில், "5ஜி எல்லாவற்றையும் வியத்தகு முறையில் தலைகீழாக மாற்றும்" என்றார்.
தொலைத்தொடர்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் மகேஷ் உப்பல் கூறுகையில், "5ஜி நெட்வொர்க்கின் மிகப்பெரிய நன்மை உற்பத்தித் துறையில் இருக்கும். ஸ்மார்ட் நகரங்களை ஒன்றோடொன்று இணைக்க முடியும், மருத்துவர்கள் தொலைவில் இருந்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் மற்றும் ஓட்டுநர்கள் இல்லாமல் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியும்." என்று விவரித்தார்.
5ஜி முன் உள்ள சவால்கள்
5ஜி நெட்வொர்க்கை இரண்டு வழிகளில் இயக்க முடியும். முதலில், இதற்கென தனி நெட்வொர்க் அமைக்க வேண்டும், அதற்கு ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் என்று பெயர். இரண்டாவதாக ஏற்கனவே நிறுவப்பட்ட வலைப்பின்னலை பயன்படுத்த வேண்டும், இது நான் ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், உலகில் எங்கெல்லாம் நான் ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் மூலம் 5 ஜி தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் கூட ஸ்டாண்ட் அலோன் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட வேண்டியுள்ளது.
5G வேகத்திற்கான வழியைத் திறந்து விட, ரேடியோ நெட்வொர்க் புதிய கட்டமைப்புகளை உருவாக்கவேண்டியிருக்கும். நெட்வொர்க் வழங்குநர் நிறுவனங்களும் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகள் முன்பு போலவே இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Pacific Press
மகேஷ் உப்பல், "5G தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில்நுட்பம். இது விலை உயர்ந்தது. இதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. அதன் நெட்வொர்க்கை அமைக்க அதிக எண்ணிக்கையிலான டவர்கள் தேவைப்படும். இந்த நெட்வொர்க்கை வெளியிடுவதற்கு அதிக செலவு மற்றும் நேரம் எடுக்கும். 5ஜி அமைப்பதில் பல சவால்கள் உள்ளன." என்கிறார்.
மேலும் கூறும் அவர், "5ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று வயர்லெஸ் தொழில்நுட்பத்தை புவியியல் ரீதியாக விரிவுபடுத்துவது, இரண்டாவதாக, அதன் பயன்பாட்டை அதிகரிப்பது. நெட்வொர்க்கை விரிவாக்குவதில் சிக்கல்கள் இருக்கும். பல வகையான அனுமதிகள் தேவைப்படும். இந்தியாவில் அதன் பயன்பாடு மேலும் அதிகரிக்க நேரம் ஆகலாம்." என்கிறார்.
5ஜி மொபைலை வாங்கவோ அல்லது அதன் விலையுயர்ந்த டேட்டா கட்டணத்தைச் செலுத்தவோ முடியாத ஒரு பெரிய வாடிக்கையாளர் பிரிவு இந்தியாவில் இருப்பது ஒரு மிகப்பெரிய சவால்.
"பயனர்களின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கும் 5ஜி சப்போர்ட் செய்யும் சாதனம் தேவை. பொதுவாக 5G போன்கள் இருபதாயிரம் ரூபாய் வரை ஆகும். அவற்றை எல்லோரும் வாங்க முடியாது. ஒருவேளை 5ஜி மொபைல்களின் விலை பிற்காலத்தில் குறையலாம்." என்றும் மகேஷ் உப்பல் விளக்குகிறார்.
சாமானியர்களின் வாழ்வில் தாக்கம்

பட மூலாதாரம், Thinkstock
இந்தியாவில் தற்போது 4ஜி நெட்வொர்க் உள்ளது, அதில் வீடியோ அழைப்புகளை எளிதாகச் செய்ய முடியும். இணையத்தில் திரைப்படங்களைப் பார்க்க முடியும். இத்தகைய சூழ்நிலையில், சாதாரண வாடிக்கையாளருக்கு 5ஜி மூலம் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுகிறது.
இதற்கு பதிலளிக்கும் மகேஷ் உப்பல், "குறுகிய காலத்தில், 5ஜி சாதாரண பயனர்களுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் இணையத்தில் உலாவுதல் வேகமாக இருக்கும்." என்று கூறுகிறார்.
ஆனால் புறக்கணிக்க முடியாத பல நன்மைகள் 5ஜி-யால் விளையும். அதன் மிகப்பெரிய நன்மை ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருக்கும்.
"ஆனால் நீண்ட காலத்திற்கு, 5ஜி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உற்பத்தித் துறை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் புரட்சி ஏற்படும். உற்பத்தி அலகுகளில் தானியங்கி வாகனங்களை இயக்க முடியும். மருத்துவர்களால் தொலைவில் இருந்தும் அறுவை சிகிச்சை முடியும். "
"இதுவரை பொதுவாக மனிதர்களுக்கிடையேயான தகவல்தொடர்பு இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதிவேகத்தில் நிகழ்நேரத்தில் தரவைப் பகிரும், இது கிட்டத்தட்ட எல்லா துறைகளுக்கும் பயனளிக்கும்." என்று மகேஷ் உப்பல் விவரிக்கிறார்.

5ஜி சிறப்பு அம்சங்கள்

பட மூலாதாரம், DEBARCHAN CHATTERJEE/NURPHOTO VIA GETTY IMAGES
• 5ஜி என்றால் ஐந்தாம் தலைமுறை மொபைல் இணையம். ஐந்தாவது தலைமுறை மொபைல் நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 2013 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இதன் அறிமுகம் தொடங்கியது.
• சாம்சங் 2013 இல் 5ஜி நெட்வொர்க்கை சோதனை செய்தபோது, அதன் வேகம் 1 Gbps ஆக இருந்தது. சராசரி பதிவிறக்க வேகம் 700 Mbps ஆக உள்ள 5ஜி நெட்வொர்க் இப்போது 70 நாடுகளில் இயங்குகிறது.
• 5ஜி அலைக்கற்றை மூலம் தரவுகள் மிக அதிக வேகத்தில் ரேடியோ அலைகள் வழியாகப் பயணிக்கும்.
• எளிதாகப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், இதை சூப்பர்ஃபாஸ்ட் இணையம் என்று அழைக்கலாம், இது 4ஜி இணைய வேகத்தை விட நூறு மடங்கு வேகமாக இருக்கும்.
• 5ஜி இணையத்திற்கு மாறிவிட்டால், செயலிகள் பாதியில் செயலிழக்காது என்றும் வீடியோ பஃபர் ஆகாது என்றும் முடிவில்லா பதிவிறக்க அடையாளக் குறியுடன் போராட வேண்டியிருக்காது என்று பலரும் நம்பியிருக்கிறார்கள்.

எல்லோரையும் சென்றடையுமா 5ஜி?

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிவேக இணையத்தை வழங்க இந்திய அரசு விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய நிறுவனமான ஜியோ, 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க் அளிக்க உள்ளதாகக் கூறுகிறது.
அதே நேரத்தில், பார்தி ஏர்டெல் மார்ச் 2024 க்குள் நாடு முழுவதும் தங்கள் 5ஜி சேவை சென்று சேரும் என்கிறது.
ஆனால் இந்தியாவில் தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க்கில் கூட பல இடங்களில் சிக்கல்கள் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் உண்மையில் சாமானியர்களைச் சென்றடையுமா என்பதுதான் கேள்வி.
மகேஷ் உப்பல், "4ஜி-யில் சிக்கல்கள் இருந்தால், 5ஜி-யிலும் நிச்சயம் இருக்கும். ஏனெனில் 5ஜி க்கு அதிக அடர்த்தியான நெட்வொர்க் தேவைப்படும். இப்போது ஆபரேட்டர்களின் முன்னுரிமை, கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் தொழில்துறையில் கவனம் செலுத்த வேண்டும். சாமானியர்களை சென்றடைய அதிக நேரம் எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












