You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகான் இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஆகிறார்
இந்திய பாதுகாப்பு படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌகானை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விவகாரங்களுக்கான துறைக்கும் இவர் செயலராக பொறுப்பு வகிப்பார் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆயுத போராட்டக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைள் பலவற்றில் விரிவான அனுபவம் பெற்றவர் இவர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பதவியில் இருந்த பிபின் ராவத் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பின்னர் ஒன்பது மாதங்களாக இப்பதவி காலியாக இருந்தது.
2019ஆம் ஆண்டின் இறுதியில் முப்படைகளுக்கும் ஏற்கனவே தனித்தனியாக இருக்கும் தளபதிகள் அல்லாமல் முப்படைகளுக்குமான தலைமைத் தளபதி பதவியை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்தது.
2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில் பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
யார் இந்த அனில் சௌகான்?
- 1961ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்த அனில் சௌகான் 1981ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
- மஹாராஷ்டிர மாநிலத்தின் கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும், உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியிலும் பயிற்சி பெற்றவர் அனில் சௌகான்.
- 2019ஆம் செப்டெம்பர் முதல் 2021ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறும் வரை இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய படைப்பிரிவின் தளபதியாக இருந்தார் அனில் சௌகான்.
- தமது 40 ஆண்டு கால ராணுவ பணியில் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (Director General of Military Operations) உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் அவர் இருந்துள்ளார்.
- அதற்கு முன்னதாக ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சார்பிலான அமைதிப் படையிலும் இவர் அங்கம் வகித்துள்ளார்.
- பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா உள்ளிட்ட பதக்கங்களை தமது ராணுவப் பணியின்போது அனில் சௌகான் பெற்றுள்ளார்.
- பதவி ஓய்வுக்குப் பின்னரும் தேசிய பாதுகாப்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அனில் சௌகான் பங்காற்றினார் என்று இந்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்