அரிசி, கோதுமை, தின்பண்டங்களில் கலப்படமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும் #mythbuster

    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

உணவுப்பொருட்கள், தின்பண்டங்களை மையப்படுத்திய தவறான தகவல்கள் இடம்பெற்ற காணொளிகள் மற்றும் தகவல்கள், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தரவுகள் உதவியுடன் இங்கே விவரிக்கிறோம்.

கூற்று 1: "டிடர்ஜென்ட் பவுடரில் உப்பு கலப்படம் நடக்கிறது"

இந்தக் கூற்றுடன் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 2022, செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஒடிஷா மாநிலத்தின் பஹாலா மாவட்டத்தில் உள்ள சிபாஷக்தி நகரில் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி டிடர்ஜென்ட் மற்றும் உப்பு தயாரிக்கும் ஆலை ஒன்றை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அத்துடன் பிரபல நிறுவனங்களின் மசாலா பொருட்கள், நெய், குளிர்பானங்கள், சிமென்ட் போன்ற பொருட்களின் மோசடி தயாரிப்புகளை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த செய்தியை பகிர்ந்த ட்விட்டர் பயனர்கள் சிலர், 'டிடர்ஜென்ட் பவுடரில் உப்பு கலப்படம் நடக்கிறது' என்று குறிப்பிடும் ஒரு பழைய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். பிரபல நிறுவன பெயரில் மோசடியாக உப்பும் டிடர்ஜென்டும் கலப்பதாக கூறப்பட்டாலும், அதில் சிறிதளவு உண்மையும் இருக்கவே செய்கிறது.

உண்மை: ஒரு திரவப் பொருளில் எந்தவொரு திடப்பொருளை (கரைப்பான்) முழுமையாக கரைக்கும்போது அது 'கரைசல்' ஆகிறது. அதாவது, உப்பு (திட கரைப்பான்) தண்ணீரில் (திரவம்) கரைக்கப்படும்போது, அது கரைசலாகும் திரவம் ஆகிறது.

ஒவ்வோர் திரவ கரைசலிலும் திடமான கரைப்பானை கரைப்பதற்கு குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவு திட கரைப்பான் தேவைப்படும். உதாரணமாக, அதிகபட்சம் 35 கிராம் தூய உப்பை 100 மில்லி தண்ணீரில் கரைக்க முடியும். அதே தண்ணீரில் அதிக எடை அளவுக்கு உப்பை சேர்த்தால், அது கரையாது. அதிக எடை கொண்ட உப்பை தண்ணீரில் கரைக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

குறைந்த எடை தண்ணீரில் அதிக அளவிலான உப்பை கொட்டினால், சிறிதளவு தண்ணீல் அது கரையாது. உதாரணமாக, அரை கிலோ உப்பை கரைக்க குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சமூக ஊடகங்களில் வைரலான காணொளியிலும் இதுவே நடந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில், அதிக அளவிலான உப்பை குறைந்த அளவிலான தண்ணீரில் கொட்டியபோது, அது நுரையை ஏற்படுத்தி டிடர்ஜென்ட் கலப்படத்துக்கு உள்ளானதாக கூறப்பட்டது. கரையாத அந்த உப்புத்துகள்களில் சிலிகா, ஃபாஸ்பேட், சல்ஃபேட் காணப்படும்.

இதுவே, இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பாக (டபுள் உப்பு) இருந்தால், இரும்புச்சத்தை நிறைவு செய்யும் துகள்களும் வெளிப்படலாம். இந்த செய்முறையில் இந்த அளவுக்கு துகள்கள் வெளிப்படுவதை 2011ஆம் ஆண்டு உணவுத்தர நிர்ணய சட்டம் அனுமதிக்கிறது. எனவே இது கலப்படம் ஆக கருதப்படாது.

கூற்று 2: "சாக்லேட்டில் பூச்சிகள் உள்ளன - இது சட்டபூர்வமாக கலக்கப்படுகிறது"

வாட்ஸ்அப்பில் பரவி வரும் காணொளி ஒன்றில், 'கரப்பான் பூச்சிகள்' சாக்லேட்டுகளில் இனிப்பைக் கூட்ட பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதாக ஒரு பெண் பேசுகிறார். அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), சாக்லேட்டுகளில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை அனுமதிப்பதாக அந்த காணொளியில் தோன்றும் பெண் கூறுகிறார்.

4 நிமிடங்கள் 32 விநாடிகள் கொண்ட அந்த காணொளியில், , உணவுத் தரத்தில் எஃப்.டி.ஏ உலகளாவிய அதிகாரம் படைத்த அமைப்பு. 100 கிராம் சாக்லேட்டில் 4% கரப்பான் பூச்சிகளை எஃப்.டி.ஏ அனுமதிக்கிறது. இது சுமார் 1 சாக்லேட் பாருக்குச் சமம் என அந்த பெண் சில தரவுகளை அறிவியல்பூர்வமாக தெரிவிப்பதாகக் கூறி சில கூற்றுகளை விவரிக்கிறார். ஒரு சாக்லேட்டில் 16 கரப்பான் பூச்சிகள் உள்ளதாகவும் அவர் பேசுகிறார். இதுபோன்ற பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

உண்மை: காணொளியில் பேசும் பெண்ணின் கூற்றுக்கு முரணாக, உணவு மற்றும் மருந்து நிர்வாகம், உணவு தரத்தை கட்டுப்படுத்தும் உலகளாவிய அதிகாரம் படைத்த அமைப்பு அல்ல. இது அமெரிக்காவில் மட்டுமே உணவுத் தரங்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரபூர்வ அமைப்பாகும்.

எஃப்டிஏ வழிகாட்டுதலில் சாக்லேட் தயாரிப்பில் பூச்சிகள் மற்றும் கொறிக்கும் அழுக்குகள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது, அவை கரப்பான் பூச்சிகள் என குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் உணவு ஒழுங்குமுறை அமைப்பின் பெயர் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஆகும். இந்த அமைப்பின் தர விதிகளின்படி சாக்லேட்டுகள், எல்லா வகை பூச்சிகள் மற்றும் பிற கலவகைள் இல்லாமல் இருக்க வேண்டும். அதே சமயம், சாக்லேட் தயாரிப்பில் ஐசோமால்டுலோஸ் (ஒரு வகை கார்போஹைட்ரேட் மூல இனிப்பாகும்), அதன் தரத்தை பாதிக்காத வகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை இருக்கலாம். (அதிகபட்சம்) என்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐ விதி.

மேலும், சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள் தொடர்பான விளக்கத்தில், துர்நாற்றம் அல்லது பூச்சி மற்றும் பூஞ்சை தொற்று, அழுக்கு, வேறு வகை கலப்படம் மற்றும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் கொண்டதாக இருக்கக் கூடாது என்று எஃப்எஸ்எஸ்ஏஐ தெளிவுபடுத்தி இருக்கிறது.

கூற்று 3: "முட்டையில் பிளாஸ்டிக் கலப்படம்"

முட்டையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும் அதை போலியாக சில ரசாயன உதவியுடன் தயாரித்து சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. காண்பதற்கு 'மெய்யான முட்டை' போல இருக்க வேண்டும் என்பதற்காக, முட்டையில் சோடியம் ஆல்கனைட் பயன்படுத்தப்படுவதாக அந்த காணொயில் ஒலிக்கும் பின்னணி குரல் கூறுகிறது.

உண்மை: ஒரு முழு முட்டையை போலியான செயல்முறை மூலம் உற்பத்தி செய்து முடிக்க ஆகும் தொழில்நுட்பம் அல்லது ரசாயனங்கள் எதுவும் கிடையாது என்கிறது இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம். மேலும், "சந்தையில் சாதாரண முட்டைகள் மலிவாகவே கிடைக்கிறது. அதனால், போலி முட்டை தயாரிப்பு என்பது பொருளாதார ரீதியாக லாபகரமான தொழில் ஆக இருக்காது," என்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐ. ஒரு தடிமனான முட்டை ஓடு சவ்வுதான், முட்டைகளின் புத்துணர்ச்சியைக் குறிக்கிறது. முட்டை புதியதாக இருக்கும்போது, ​​அதன் இரண்டு சவ்வுகள் (வெளிப்புற மற்றும் உள் அடுக்குகள்) பிரிக்க முடியாததாக இருக்கும். அதனால் தான் முட்டை ஓட்டை பிரிக்கும்போது அது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும். ஓட்டை பிரிக்கும் போது அடர்த்தியாகவும் வலுவாகவும் இருக்கும். முட்டைகளின் உட்புற ஓடு சவ்வு 15 நாட்களுக்கு மேல் இருந்தால், அது இயற்கையான தன்மையுடன் இருப்பதாகிறது.

முட்டைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. தீவனத்தின் தரம், கோழியின் இனம், முட்டைகளின் முதுமை, முட்டைகளைக் கையாளும் முறை ஆகியவற்றை பொருத்து அது மாறுபடும். முட்டை வயதாகும்போது, அதன் வெள்ளைக்கருவின் நிலைத்தன்மை மாறி, மெல்லியதாகவும் வழுவழுப்பாகவும் மாறி, கடைசியில் முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் ஒன்றோடொன்று கரைந்துவிடும். இது பெரும்பாலும் வெப்பநிலை உபாதைகளால் மோசமடைகிறது, அப்படி முட்டை வெள்ளையும் மஞ்சள் கருவும் கலந்திருப்பதை வைத்து அது செயற்கையாக உருவானதாக கொள்ளக்கூடாது என்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐ.

கூற்று 4: "பாலில் சீனாவின் மெலமைன் பவுடர் கலப்படம்"

மெலமைன் எனப்படும் சீன தயாரிப்பு பவுடர் பால் பவுடரில் கலப்படம் செய்யப்படுகிறது. சிமென்ட் பவுடர் போல வெள்ளை நிறத்தில் இருக்கும். அதில் 67 சதவீத நைட்ரஜன் கலந்துள்ளது என்கிறது சமூக ஊடகங்களில் பரவப்படும் காணொளி.

உண்மை: மெலமைன் அறியப்பட்ட உணவு வகைகளின் பயன்பாடுகளிலேயே கிடையாது. அது உணவில் ஒரு தற்செயலான சேர்ப்பு (மாசுபடுத்தும் பொருளாக) அல்லது பொருளாதார ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே சேர்க்க பயன்படுத்தப்படும் கலப்படப் பொருளாக இருக்கலாம். மெலமைனை ஒரு மூலப்பொருளாகவோ சேர்க்கையாகவோ பயன்படுத்த இந்திய உணவுத் தர நிர்ணய ஆணையம் அனுமதிக்கவில்லை. இருப்பினும் பால் உட்பட உணவில் மெலமைன் இருப்பதற்கான அதிகபட்ச வரம்புகள் மற்றும் மெலமைனின் தற்செயலான இருப்பை நிவர்த்தி செய்ய அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச தரத்தின்படி நுகர்வோர் சுகாதார பாதுகாப்பு தொடர்பான முறையான இடர் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய வரம்புகள் நியமிக்கப்படுவதால், அதை வைத்து, குறிப்பிட்ட அதிகபட்ச வரம்பிற்குள் உணவுகளில் மெலமைனை சேர்க்கலாம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐ.

கூற்று 5: "கோதுமையில் பிளாஸ்டிக் கலப்பதால் புற்றுநோய்"

கோதுமை மாவில் இயல்பாகவே 2 புரதங்கள் உள்ளன. 'குளுடெனின்' தளர்ச்சிக்காகவும், 'க்லியாடின்' மாவை பிசைந்து அடிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கும். இந்த 2 புரதங்களும் ஒன்றிணைந்து பசைபோன்ற சுரப்பை உருவாக்கும். கோதுமை மாவு தண்ணீரில் கலந்து அடிக்கப்பட்டு மாவாக பிசையப்படும்போது கடைசியில் எஞ்சியிருக்கும் சிறு, சிறு துண்டுகளாகும் குளூடெனைத்தான் சிலர் 'பிளாஸ்டிக்' என்று அழைக்கிறார்கள் என்கிறது எஃப்எஸ்எஸ்ஏஐஸ்.

கூற்று 6: "அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம்"

உண்மை: இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, உணவு வழங்கல் துறைக்கு வந்த புகார்களில் அங்குள்ள சில விடுதிகளில் பரிமாறப்படும் அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுதவாக கூறப்பட்டது. இதன் பிறகு டெல்லியில் உள்ள விடுதியியிலும் இதே புகார்கள் வந்தன. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, புகாருக்குள்ளான இடங்கள் மற்றும் பிற விடுதிகளில் பரிமாறப்படும் அரிசி மாதிரியை சேகரித்து அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த இந்திய உணவுத்தர நிர்ணய ஆணையம், "அரிசி என்பது 80 சதவீத மாவுச்சத்தைக் கொண்டது என்பதால் அதில் இயல்பாகவே கார்போ ஹைட்ரேட் இருக்கும். அரிசி சமைக்கப்படும்போது அது பிசின் பண்புகளைக் கொண்டுள்ளதால் உருண்டையாக மாறும். அப்போது காற்று சில அரிசிக்குள் சிக்கி, பந்து போல் துள்ளும். இப்படி துள்ளும் அரிசியை சிலர் 'பிளாஸ்டிக் அரிசி' என அழைக்கிறார்கள். அதில் உண்மையில்லை," என்று தெரிவித்துள்ளது.

இந்த வகை வதந்தி, 2010ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக தோன்றியது. அதில் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் அரிசி, உண்மையான அரிசி விநியோகத்துடன் கலக்கப்படுவதாக கூறப்பட்டன. இது தொடர்பான பழைய காணொளியை சமீபத்திய காணொளி போல இப்போதும் சிலர் பகிர்கிறார்கள். ஆப்பிரிக்காவிலும் இந்த காணொளி பகிரப்பட்டு அரிசி விநியோகத்தில் ஊழல் நடப்பதாக தகவல்கள் பகிரப்பட்டன.

2011இல், உருளைக்கிழங்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான பிசின் அரிசி கலப்படத்துக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. மூன்று கிண்ணம் "பிளாஸ்டிக் அரிசி" சாப்பிடுவது ஒரு பிளாஸ்டிக் பையை சாப்பிடுவதற்கு சமம் என்று சீன உணவக அதிகாரி எச்சரித்தது அந்த வதந்திக்கு மேலும் வலுவூட்டியது. ஆனால், கடைசியில் அவரது எச்சரிக்கை 'பொய்' என்று டெல்லி உணவுத்துறையால் அறிவிக்கப்பட்டது.

அரிசியில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படும் புகார்கள் இப்போதும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் அதிகமாக வருகின்றன. ஆனால், "அரிசியில் பிளாஸ்டிக் என்பது உண்மையல்ல," என்கின்றனர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: