உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகளின் உடல்கள்; 6 பேர் கைது

இந்த அறிக்கையில் உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை கடத்தியதாக அல்லது வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கோபமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த செய்தி வெளியானதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து யோகி ஆதித்யநாத் அரசு மீது அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அரசின் தோல்வி என முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ், மாயாவதி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோர் கூறியுள்ளனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டம் விவசாயிகள் போராட்டத்தின்போதும் செய்திகளில் அடிபட்டது. அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா டேனியின் மகன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவிவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.

காவல்துறை கூறுவது என்ன?

"குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த சகோதரிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லவில்லை. முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் இந்த சிறுமிகளின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். சிறுமிகள் ஏமாற்றி வயலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த இரண்டு சிறுமிகளும் மூன்று சிறுவர்களுடன் நட்பு கொண்டிருந்தனர். இந்த நான்கு பேரைத் தவிர மேலும் இருவர் ஆதாரங்களை அழித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்,"என்று லக்கிம்பூர் கேரி காவதுறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு ஒரு மணியளவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததாகவும், பிரேதப் பரிசோதனை இன்னும் சிறிது நேரத்தில் செய்யப்படும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதற்காக மூன்று டாக்டர்கள் கொண்ட குழு உள்ளது. இது வீடியோவாகவும் பதிவுசெய்யப்படும்.

என்ன நடந்தது?

நிகாசன் காவல் நிலையப் பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமிகளின் வயது 15 மற்றும் 17 என கூறப்படுகிறது. மூன்று பேர் முதலில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், பின்னர் அவர்களை கொலை செய்து சடலங்களை மரங்களில் தொங்கவிட்டதாகவும் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் இறந்த சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

"லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு கிராமத்திற்கு வெளியே இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர்களது துப்பட்டா தூக்கிலிட பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் உடல்களில் காயம் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே மற்ற விஷயங்கள் தெரியவரும். விசாரணை நடக்கிறது," என்று லக்னெள ரேஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் லக்ஷ்மி சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. கோபம் கொண்ட கிராம மக்கள் கிராமத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள நிகாசன் சந்திப்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர். நிகாசன் சந்திப்பில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உத்தரபிரதேச ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

காவல்துறையின் விளக்கம் என்ன?

லக்கிம்பூர் கேரி காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சுமன் உள்ளிட்ட சில மூத்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு விளக்கமளிக்கும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆத்திரமடைந்த கிராம மக்களிடம் போலீஸார் உறுதியளித்தனர்.

வலுக்கட்டாயமாக பிரேதப் பரிசோதனை நடத்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த காவல்துறை, இறந்தவர்களின் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியது. இறந்த சிறுமிகளின் பிரேத பரிசோதனை உறவினர்களின் ஒப்புதலோடு அவர்கள் முன்னிலையில் மூத்த மருத்துவர்கள் குழுவால் செய்யப்படும் காவல்துறை கூறுகிறது.

"பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை" என்று எஸ்பி சஞ்சீவ் சுமன், கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, 'உண்மை தெரியவரும்' என்றார் அவர்.

குடும்பத்தினர் சொல்வது என்ன?

கரும்பு தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தனது மகள்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக சிறுமிகளின் தாய் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் வீட்டின் அருகே கால்நடைகளுக்காக தீவனம் வெட்டிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உடல்கூராய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக உத்தரப் பிரதேச காவல்துறை கூறுகிறது

பதாயூன் விவகாரத்துடன் ஒப்பீடு

லக்கிம்பூரில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் சிலர் இதை பதாயூன் வன்புணர்வு வழக்கோடு ஒப்பிடத் தொடங்கினர். 2014-ம் ஆண்டு பதாயூன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தலித் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு கழகம் பின்னர் விசாரணை நடத்தியது.

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக அகிலேஷ், மாயாவதி, பிரியங்கா தெரிவித்தது என்ன?

லக்கிம்பூர் கேரியில் நடந்திருக்கும் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், "நிகாசன் காவல் நிலையப் பகுதியில் இரு தலித் சகோதரிகளைக் கடத்திச் சென்று கொலை செய்துள்ள சம்பவத்தில், அனுமதியின்றி சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக அந்த சிறுமிகளின் தந்தை அளித்துள்ள புகார் தீவிரமானது. லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, இப்போது தலித் சிறுகிகள் கொல்லப்படுவது 'ஹத்ராஸ் சிறுமி' படுகொலையின் கொடூரமான மறுநிகழ்வு ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பதிவில், "லக்கிம்பூர் கேரியில் இரண்டு தலித் மகள்கள் அவர்களது தாயார் முன்னிலையில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குப்பிறகு கொலை செய்யப்பட்டு, உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்ட இதயத்தை உலுக்கும் சம்பவம் எல்லா இடங்களிலும் விவாதத்தில் உள்ளது. இது போன்ற சோகமான மற்றும் அவமானகரமான சம்பவங்களுக்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் அவை குறைவுதான். அரசின் முன்னுரிமைகள் தவறாக இருப்பதால் உத்திரபிரதேசத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி உள்ளனர்,"என்று கூறியுள்ளார்.

"லக்கிம்பூரில் சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனவேதனை அளிக்கிறது. பட்டப்பகலில் இந்த சிறுமிகள் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். நாளிதழ்கள் மற்றும் டிவியில் தினந்தோறும் விளம்பரம் செய்வதால் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியாகிவிடாது. எல்லாவற்றிற்கும் மேலாக உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன," என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பினார்.

லக்கிம்பூர் இதற்கு முன் செய்தியில் அடிபட்டது ஏன்?

லக்கிம்பூர் கேரி மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்பாக கடந்த காலங்களிலும் விவாதத்தில் இருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மூன்று மைனர் சிறுமிகளின் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

2011 ஜூன் மாதம், நிகாசன் காவல் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தில் ஒரு சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு காவல்துறை ஆய்வாளர் உட்பட 11 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 14 வயது சிறுமியைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்துகொண்டது போல உடலை மரத்தில் தொங்கவிட்ட சம்பவத்தில் கான்ஸ்டபிள் அதீக் அகமதை குற்றவாளி என்று 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: