You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர் சுட்டுக் கொலை - உறவினர்கள் புகார்
ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் குவைத்தில் வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்ட இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(42). பட்டதாரியான இவர் அங்குள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் அவரது வேலை பறிபோனது. இதனால் பல இன்னல்களை சந்தித்த முத்துக்குமரன் வெளிநாடு சென்று சம்பாதிக்க முடிவெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனம் மூலம் வேலை கேட்டு வந்தார். அப்போது குவைத்தில் உள்ள நிறுவனத்தில் அவருக்கு பணி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
"அதனை நம்பி, கடந்த 3-ம் தேதி முத்துக்குமரன் குவைத்தின் அல்-அகமது நகருக்கு சென்றார். குவைத் சென்ற பிறகுதான் உண்மை நிலவரம் அவருக்கு தெரியவந்தது. அங்கு அவருக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணி வழங்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துக்குமரன், வெளிநாட்டு ஏஜென்சி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது பயனளிக்கவில்லை. ஆனால், வேறு வழியின்றி ஒட்டகங்களை மேய்த்திருக்கிறார்," என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புகாரை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.
இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தனது மனைவி வித்யா மற்றும் தாய், தந்தையாரிடம் செல்போன் மூலம் செப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் முத்துக்குமரன் பேசி உள்ளார். அடுத்த நாட்களில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
முத்துக்குமரனிடமிருந்து எந்தவித தகவலும் வராததால், மனைவி மற்றும் வீட்டில் பெரும் அச்சம் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 7-ம் தேதி முத்துக்குமரன் தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என தனது முதலாளியிடம் கூறியதாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துக்குமரனை அவரது முதலாளி சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் குவைத் ஊடகங்களில் செய்தி வெளியானது என்று முத்துகுமாரனின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற முத்துக்குமரனின் உடலை ஒப்படைக்க வேண்டும், படுகொலை செய்யப்பட்டதற்கு நியாயமான நீதியும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கூத்தாநல்லூரில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச் சங்கத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
இதனிடையே, முத்துக்குமரனின் உடலைப் பெற வழிவகை செய்ய வேண்டும் வேண்டும் என அவரது மனைவியும், பெற்றோரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முத்துக்குமரனின் உறவினர் அய்யப்பன் பிபிசியிடம் பேசுகையில், "குடும்ப வறுமையின் காரணமாக தான் முத்துக்குமரன் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.
குவைத் சென்ற மறுநாள் எங்களிடம் செல்போன் மூலம் பேசிய முத்துக்குமரன், அழைத்து வரப்பட்ட வேலை வேறு, ஆனால் பணி செய்ய சொல்வது வேறு. அதுமட்டுமின்றி தனக்கு உணவு, குடிநீர் கூட கொடுக்காமல் சித்திரவதை செய்வதாக கூறினார்."
"இதற்கிடையில் முத்துக்குமரன் ஹைதராபாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகமையிடம் பேசியுள்ளார். அவர்களும் முத்துக்குமரனை திரும்ப அழைத்துவர தேவயானவற்றைச் செய்வதாக உறுதியளித்தனர்.
"அதன் பிறகு தான் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால் முத்துக்குமரனை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த நாங்கள், குவைத்தில் பணிபுரியும் எங்களது ஊரைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, முத்துக்குமரன் அடித்து கொல்லப்பட்டதாகவும், சுட்டுக் கொல்லபட்டுள்ளதாவும் செய்திகள் வந்துள்ளது என தெரிவித்தனர்.
மேலும் அவரது உடல் சாலையில் கிடந்ததாகவும் போலீசார் உடலை கைப்பற்றி பிணவறையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்."
"அதனைத் தொடர்ந்து நாங்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடலை சொந்த ஊர் கொண்டு வர மனு அளித்தோம். அதன்பின் எங்களைத் தொடர்பு கொண்ட குவைத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் முத்துக்குமரன் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒரிரு தினங்களில் உடல் வந்து சேரும் எனவும் தெரிவித்தார்," என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.வி.கண்ணன், "குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை ஒப்படைக்க வலியுறுத்தி மனைவி வித்யாவின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
முத்துக்குமரன் குவைத் சென்ற உடன் தனக்கு சொன்ன வேலை இது இல்லை என்றும் ஒட்டகம் மேய்க்க போட்டதாகவும் அடித்து உதைப்பதாகவும் கூறியுள்ளார். இரண்டு தடவை மனைவிக்கு பேசியுள்ளார். அதன் பின்பு எவ்வித தொடர்பும் இல்லை.
முத்துகுமரன் மனைவிக்கு ஏஜெண்ட் மூலம் அங்கு ஏதோ பிரச்னை என்றும் வித்யாவின் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்பு கணவர் இறந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டு உள்ளது.
வித்யாவின் கணவர் எவ்வாறு இறந்தார் என முழு விபரமும் கிடைக்காத சூழலில் குவைத்தில் இருந்து வெளிவரும் அல்ராய் பத்திரிகை மற்றும் பல யூடியூப் ட்விட்டர்களில் முத்துக்குமரனை அடித்து கொன்று விட்டதாகவும் குற்றவாளியை போலீஸ் தேடுவதாகவும் மற்றொரு செய்தியில் துப்பாக்கியால் முத்துக்குமரன் கொல்லப்பட்டதாகவும் ஸ்பான்சரின் மகன் (அரபியின் மகன்) கைது என்றும் செய்தி வந்துள்ளது.
வித்யாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது தெளிவாக தெரிகிறது. கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏதோ திசை திருப்பப்படுகிறதோ என குடும்பத்தினர் சந்தேகம் கொள்கின்றனர்.
ஆதலால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமரன் உடலை இந்திய தூதரகத்தின் பொறுப்பில் குடும்பத்தினர் சார்பாக குவைத்தில் உள்ள நவ்சாத் அலி வழியாக தாயகம் கொண்டு வந்து ஏற்கனவே ஒரு வழக்கில் செய்ததை போன்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அரசு சிறப்பு மருத்துவர்கள் மூலம் உடல் கூறாய்வு செய்து ஆவணப்படுத்தி உண்மை நிலையை உலகறிய செய்து கொலை செய்த கயவனுக்கு தக்க தண்டனை வழங்கி தர வேண்டும் என கோரி மனு அளித்துள்ளோம்.
மேலும் கணவனை இழந்து வாடும் முத்துக்குமரனின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முத்துக்குமரனின் மனைவியின் படிப்புக்கு ஏற்றாற்போல் அரசு வேலை தர வேண்டும் எனவும் மேலும் இதுபோன்ற இன்னல்கள் வெளிநாடுகளில் தொடர்ந்து நடந்து வருவது குறித்து ஆய்வு செய்து பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் மிக குறிப்பாக ஏஜெண்டுகள் முறைபடுத்திட வேண்டும் எனவும் போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கைகள் பாய வேண்டும் எனவும் வெளிநாடு செல்லும் ஒட்டுமொத்த இந்தியர்கள் நலன் காக்க சட்ட முறைகள் தமிழகத்தில் இந்த வழக்கின் மூலம் வழிவகுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்