You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வேலைவாய்ப்பின்மை: இந்தியாவில் வேலை வாய்ப்புகள் எப்படி அதிகரிக்கும்? ஓர் அலசல்
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
2014 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான எட்டு ஆண்டுகளில், இந்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களுக்கு சுமார் 22 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
அதே காலகட்டத்தில் மத்திய அரசில் நிரந்தர வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 7.22 லட்சம்.
எளிமையாகச் சொன்னால், வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 0.32 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்ட பிரச்னைக்கு இது ஒரு உதாரணம்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தின்போது லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அரசு வேலைகளில் ஆட்சேர்ப்புகளும் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் பல மாநிலங்களில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இவை அனைத்தின் கூட்டு விளைவாகும்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமல்செய்யப்பட்ட நாடு தழுவிய முதல் பொதுமுடக்கத்தின்போது சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்தனர் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கூறுகிறது. 2021 ஆம் ஆண்டில் கோவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது ஒரு கோடி இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர் என்பதை சிஎம்இஐ (CMIE) தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
சமீபத்தில் சிஎம்இஐ (CMIE) சில தரவுகளை வெளியிட்டது, இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று ஒரு தரவு சுட்டிக்காட்டுகிறது. இது கடந்த ஆறு மாதங்களில் மிகக் குறைந்த அளவாகும்.
ஜூன் மாதத்தில் 7.80 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஜூலையில் 6.80 சதவிகிதமாக குறைந்துள்ளதாக சிஎம்ஐஇ தகவல்கள் தெரிவிக்கின்றன. பருவமழையின் போது அதிகரித்த விவசாய நடவடிக்கைகள் ஜூலை மாதத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும், நகர்ப்புற வேலையின்மை அதிகரித்துள்ளது. முக்கியமாக தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் வேலைகள் குறைந்து வருவதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் வேலை கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை வேலையின்மையால் போராடுபவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
சிஎம்இஐயின் வேலையில்லா திண்டாட்டம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு மறுத்து வருகிறது. ஜூலை 28 அன்று மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த பதிலில், 'புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே அல்லது அவ்வப்போது நடத்தப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது'என்று கூறியது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைக்கான திறன்களை மேம்படுத்துவது அரசின் முன்னுரிமை என்றும், நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வேலை விண்ணப்பதாரர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் என்று அரசு முன்வைக்கும் சில திட்டங்களை இப்போது பார்ப்போம்.
1. தேசிய தொழில் சேவை போர்ட்டல்
நேஷனல் கரியர் போர்டல் அல்லது தேசிய தொழில் சேவை இணையதளம் (https://www.ncs.gov.in) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது. ஜாப் மேட்சிங், தொழில் ஆலோசனை, தொழில்சார் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்புகள் பற்றிய தகவல், இன்டர்ன்ஷிப் போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான சேவைகளை இந்த போர்டல் வழங்குகிறது. வேலை தேடுபவர்கள், வேலை வழங்குபவர்கள், பயிற்சி வழங்குபவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு இந்த போர்ட்டலில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் இலவசம்.
இந்த போர்ட்டலில் உள்நுழைந்து அரசு மற்றும் தனியார் துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடவே இந்த போர்டல் மூலம் ஏற்பாடு செய்யப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சிகளிலும் பங்கேற்கலாம்.
NCS போர்ட்டலில் இதுவரை 94 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சிகள் மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை தேடுபவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று அரசு கூறுகிறது.
2. தீன் தயாள் உபாத்யாய ஊரக திறன் வளர்ப்புத்திட்டம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தின் நோக்கம், கிராமப்புற இளைஞர்களின் திறன் வளர்ப்பு மூலம் வழக்கமான மாத ஊதியம் அல்லது குறைந்தபட்ச ஊதியத்திற்கு மேல் ஊதியம் கிடைக்கும் வேலைகளை அளிப்பதாகும்.
15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுபவர்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்கள் எந்த வகையான வேலைகளுக்கு ஏற்றவர்கள் என்பதையும் கண்டறிய முடியும். அதன் பிறகு அவர்களின் தகுதியின் அடிப்படையில் எந்த தொழிலுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கார்களை உருவாக்கும் வெல்டர்கள் முதல் பிரீமியம் சட்டைகளை விற்கும் விற்பனையாளர்கள், அலுவலகங்களில் பின்னால் இருந்து (Back office) பணிபுரியும் கணினி வல்லுநர்கள் வரை 550 க்கும் மேற்பட்ட வேலை வகைகளில் இருந்து தங்களுக்குப்பொருத்தமான வேலையை தேர்வு செய்யமுடியும் என்று அரசு கூறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலை தேடுபவர்கள், அரசு பயிற்சி மையங்களில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்ட பிறகு, அரசு அங்கீகாரம் பெற்ற திறன் சான்றிதழ்களைப் பெறலாம்.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, நீங்கள் உங்கள் கிராம பஞ்சாயத்து அல்லது ஊரக வேலைவாய்ப்பு உதவியாளரிடம் பதிவு செய்ய வேண்டும். அருகிலுள்ள பயிற்சி மையத்தின் அணிதிரட்டல் பணியாளர்கள் உங்களைச் சந்தித்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்க அவர் பரிந்துரைப்பார்.
விண்ணப்பதாரர்கள் https://kaushalpanjee.nic.in/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
3. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)
அரசால் செயல்படுத்தப்படும் மற்றொரு பெரிய திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) ஆகும். இது சுய வேலைவாய்ப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், குறு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை நிறுவ அல்லது விரிவுபடுத்துவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன்கள் (அதாவது எந்த உத்தரவாதமும் தேவையில்லாத கடன்கள்) வழங்கப்படுகின்றன. 2022 ஜூலை 8 ஆம் தேதி வரை இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 36 கோடி கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
கடன் பெற ஆர்வமுள்ளவர்கள் இந்த நிறுவனங்களை நேரடியாக அணுகலாம் அல்லது www.udyamimitra.in போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2022-2023 நிதியாண்டில் 1 கோடியே 31 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் அனுமதி வழங்கப்பட்ட மொத்தக் கடனான 91,115 கோடி ரூபாயில், 85,817 கோடி ரூபாய் கடன் இதுவரையில் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசு தரவுகள் கூறுகின்றன.
காலியாக இருக்கும் ஏராளமான அரசு பணியிடங்கள்
2021 மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, மத்திய அரசுத் துறைகளில் அனுமதிக்கப்பட்ட 40.35 லட்சம் பணியிடங்களில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அரசு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த காலி பணியிடங்கள் குரூப் ஏ, பி மற்றும் சி இல் உள்ளன.
முப்படைகளில் ஆண்டுதோறும் சராசரியாக 60,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதில் சுமார் 50,000 பணியிடங்கள் ராணுவத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. கோவிட் -19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டதால், இந்திய ராணுவத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அரசு கூறியது.
அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கடந்த சில மாதங்களாக விவாதப் பொருளாக உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தேர்வு முறையை எதிர்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஜூன் மாதத்தில் வெளிவந்த ஒரு விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவுக்கு வந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் பணி நியமனக் கடிதங்களை 22 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றனர். இந்தக் கடிதங்களைப் பெற்றவர்களில் பலர் தற்போது ஓய்வுபெறும் வயதில்உள்ளனர்.
ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட முப்படைகளுக்கான மத்திய அரசின் புதிய ஆள்சேர்ப்புத் திட்டமான அக்னிபத், நாட்டின் பல பகுதிகளில் கடும் போராட்டங்களை எதிர்கொண்டது. இளைஞர்கள் ரயில்களை எரித்தும், ரயில் பாதைகளில் மறியல் செய்தும் போராட்டம் நடத்தினர்.
தனது அரசு அடுத்த 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பணியாளர்களை நியமிக்கும் என்று ஜூன் 14 அன்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.
பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவா டெல்லியில் உள்ள மனித மேம்பாட்டு கழகத்தின் வேலைவாய்ப்பு ஆய்வு மையத்தின் இயக்குநராக உள்ளார்.
"அரசுப் பணியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய, மாநில அரசுகள் அதிகம் பேசி வருகின்றன. ஆனால் இதுவரை அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் அரசு எல்லா மட்டங்களிலும் காண்ட்ராக்ட் அதாவது ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவதுதான். நீண்டகாலமாக நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உதாரணமாக ராணுவத்தில் உள்ள காலியிடங்களுக்கு என்ன நடக்கிறது?"என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளின் சுமையை குறைக்க, முப்படைகளில் ஒப்பந்த வேலைகளை அரசு அறிமுகப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். "சுகாதாரம், கல்வி போன்ற துறைகளிலும் இதேதான் நடக்கிறது. அரசுத் துறையில் நிரப்பப்படும் நிரந்தர பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது,"என்று ரவி ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார்.
திறன் வளர்ப்பு மற்றும் வேலைகள்
திறன் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி மத்திய அரசு அவ்வப்போது பேசி வருகிறது. ஆனால் திறன் வளர்ப்பு, வேலைகளைப் பெறுவதை எளிதாக்கியுள்ளதா?
திறன் வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் மக்களுக்கு வேலை வழங்குவதில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதை நாம் பார்க்கமுடிகிறது என்கிறார் பேராசிரியர் ஸ்ரீவத்சவா.
"உதாரணமாக, ஆடை நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்துகின்றன. மேலும் அரசு வழங்கும் சில மானியங்களைப் பயன்படுத்த முடிகிறது. பின்னர் அவர்கள் தங்கள் ஆடை நிறுவனங்களில் ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட வேலைகளில் தரம் இருப்பதில்லை,"என்று அவர் மேலும் கூறினார்.
திறமையான நபர்களை உருவாக்குவது மட்டும் போதாது என்பதே இதற்குக்காரணம் என்று பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா குறிப்பிடுகிறார். "தொழிலாளர் சந்தை தொடர்பாக நீங்கள் ஏதாவது செய்யாவிட்டால், தொழிலாளர் சந்தையில் அந்தத் திறமையான வேலைகளை பிரீமியத்துடன் வழங்காவிட்டால், மக்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்காது. அதனால்தான் பழங்குடியினப் பெண்கள் நெசவாளர்களாகப் பயிற்சி பெற ஆறு மாதங்கள் ஆகிறது. பின்னர் அவர்கள் பெங்களூரு அல்லது டெல்லியில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் குறைந்தபட்ச ஊதியத்தில் மட்டுமே வேலை செய்ய முடிகிறது,"என்கிறார் அவர்.
வேலை வாய்ப்புகள் எப்படி அதிகரிக்கும்?
நாட்டில் வேலைகளை அதிகரிக்க அரசு, தீவிர உடல் உழைப்பு உத்தியை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறுகிறார். "மூலதனத்திற்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக தொழிலாளர்-வேலைவாய்ப்பிற்கு மானியம் வழங்கவேண்டும். உதாரணமாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்திட்டத்தின் கீழ் அரசு மூலதனத்திற்கு மானியம் அளிக்கிறது. நீங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க விரும்பினால் இந்த வகையான திட்டம் பயன் தராது."
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், இறக்குமதி கட்டணங்களைக் குறைக்கவும், மத்திய அரசு 2020 ஆம் ஆண்டில் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது உள்நாட்டு பிரிவுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில்தொடங்க அழைப்பதைத் தவிர, உற்பத்தி பிரிவுகளை அமைக்க அல்லது தற்போதுள்ள தொழில்பிரிவுகளை விரிவுபடுத்த உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வேலைகளை உருவாக்க அரசு MSME (மைக்ரோ, ஸ்மால் மற்றும் மீடியம் எண்டர்பிரைசஸ்) துறையில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றின் மேம்பாடு எளிதாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்தில் உள்ள தடைகள் என்ன என்பதை கண்டறிந்து, அந்த தடைகளை நீக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
"நீங்கள் மிகச் சிறிய உற்பத்தியாளர்களின் உற்பத்தியை அதிகரித்தால், அது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், வருமானத்தையும் அதிகரிக்கிறது. இந்தியாவில் பணிபுரியும் பலர் போதுமான அளவு சம்பாதிப்பதில்லை. சிறு தொழில்களை உதாசீனப்படுத்தாமல் அவை வளர்வதற்கு உதவும் உத்தி உங்களிடம் இருக்க வேண்டும்." என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றின் தாக்கம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எதிர்மறையாகவும், அமைப்புசார்ந்த துறையில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது என்று பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
சுமார் 20 சதவிகித வேலைகள் மட்டுமே அமைப்பு சார்ந்த துறையில் இருந்து வருகின்றன, எண்பது சதவிகித வேலைகள் அமைப்புசாரா துறையிலிருந்து வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"கடந்த 7-8 ஆண்டுகளில் உற்பத்தி மற்றும் லாபம் மிகப் பெரிய நிறுவனங்களின் பக்கம் சென்றுள்ளது. ஆனால் சந்தையில் தங்கள் பங்கை இழந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த நிறுவனங்களிடம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. இதுவே வேலை வாய்ப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்," என்று ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்